வெள்ளி, 26 மார்ச், 2010

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்



ராமேசுவரம், மார்ச் 25: நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி இறால் மீன்களைப் பறித்துச் சென்றதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் வியாழக்கிழமை கூறியதாவது:ராமேசுவரத்தில் இருந்து மார்ச் 24-ம் தேதி சுமார் 650 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இப்படகுகள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 2 போர்க் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை மடக்கிப் பிடித்தனர். பின்னர் ராமேசுவரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த மீனவர்களை கம்பு, கயிறால் சரமாரியாகத் தாக்கினர். இதில் மீனவர்கள் வலிதாங்க முடியாமல் துடித்தனர். பின்னர் படகுகளில் இருந்த இறால் மீன்களைப் பறித்துச் சென்றனர். இனிமேல் எங்கள் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என துப்பாக்கியைக் காட்டி மிரட்டி எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வெறும் படகுகளுடன் கரை திரும்பினோம். இதனால் எங்களுக்கு ரூ.1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

இராமேசுவரம் மீனவர்கள் தமிழர் ஆக இருக்கலாம்; ஆனால் இந்தியரல்லர். எனவே, அவர்கள் எந்த நாட்டு உதவியுடனும் தமக்கெனத் தனியரசை அமைத்துக் கொள்ளலாம் இன்பதுதான் இந்திய அரசு கொள்கையோ என எண்ண வேண்டியுள்ளது. இந்தியக் கண்டத்து ஒற்றுமை கருதியும் வலிவு கருதியும் தன்மானம் கருதியும் உயிர்ப்பலிகளைத் தடுப்பது கருதியும் நம் நாட்டு நலன்களைக் காக்காத அரசுகளைத் தூக்கி எறிய மக்கள் முன்வருவார்களாக! (என்ன செய்வது? இப்படிப்பட்ட எண்ணம் வந்தாலும் தேர்தல் நேரத்தில் மயக்கத்தில் ஒன்றும் தெரிவதில்லையோ!)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக