திங்கள், 22 மார்ச், 2010

அனைத்துவழி கல்வி முறையிலும் தமிழை பயிற்றுமொழியாக்க வேண்டும்: தி.க.சி.திருநெல்வலி, மார்ச் 21: தமிழ்நாட்டில் அனைத்துவழி கல்வி முறையிலும் தமிழை பயிற்று மொழியாக்கும் வகையில் செம்மொழி மாநாட்டுக்கு முன்னர் சட்டம் இயற்ற வேண்டும் என, சாகித்ய அகாதெமி விருது பெற்ற இலக்கிய திறனாய்வாளர் தி.க. சிவசங்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை, புத்தா பண்பாட்டு ஆய்வு மையமும், சித்திர சபையும் இணைந்து தி.க.சி.யின் 86-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடின. எழுத்தாளர் ச. செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் முன்னிலை வகித்து, தி.க.சி.யைப் பாராட்டி பேசினார்.விழாவில், தி.க.சி.யின் ஏற்புரை:என்னை "படைப்பாளிகளின் படைப்பாளி' என புகழ்ந்துரைத்தனர். அந்த புகழுரைக்கு முழுத் தகுதி உடையவர், சொந்தக்காரர் வல்லிக்கண்ணன்தான். அவரிடம் ஆணவம், மேட்டுக்குடி தன்மை, குறுங்குழுவாதம் ஆகிய மூன்றும் இல்லாமல் இருந்ததுதான் அதற்குக் காரணம்.இன்றைய எழுத்தாளர்கள் இந்த குணங்களால் பிறரை வதைத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள சில அறிவுஜீவிகளிடம் இந்த மூன்று குணங்களும் இருந்துகொண்டு கேடு விளைவித்து வருகின்றன. இதை ஒழித்தால்தான் நல்லது.தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படையில் மாற்றம் தேவை. இல்லையெனில் நமது சுதந்திரமும், ஜனநாயகமும் பறிபோய்விடும். இதற்கு களப்பணியாளர்கள் பணியாற்ற வேண்டும். இன்றைய ஊடகங்கள் உண்மையைத் தெரிவிக்க மறுக்கின்றன. அவை மக்களை மூளைச்சலவை செய்து வருவதை எல்லோரும் அறிவோம்.கல்வியின் தரத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். செம்மொழி மாநாடு மேட்டுக்குடி மக்களுக்காக நடைபெற உள்ளதா அல்லது சாதாரண மக்களுக்காக நடைபெற உள்ளதா? செம்மொழி மாநாடு தமிழை வாழ வைக்கவா அல்லது தற்பெருமையைப் பறைசாற்றவா? இதை செயல்பாடுகள் தெளிவுபடுத்தும். செம்மொழி மாநாட்டுக்கு முன்னதாக, தமிழ்நாட்டில் அனைத்துவழி கல்வி முறையிலும் தமிழை பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும். இதுவே தமிழ் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய முதலாவது பணியாகும். அப்போதுதான் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதன் நோக்கம் நிறைவேறும் என்றார் தி.க.சி.விழாவில் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், எழுத்தாளர் ஜெயப்பிரகாசம், மானுடவியலாளர் தொ.பரமசிவன், கவிஞர் கலாப்பிரியா, பேராசிரியர் "மேலும்' சிவசு, "யுகமாயினி' ஆசிரியர் சித்தன், கவிஞர் மதுமிதா, எழுத்தாளர்கள் ஜி.ஜி. ராதாகிருஷ்ணன், கோ.மா. கோதண்டம், செ. திவான், உஷாதேவி, ரஜினி பெத்தராஜா, ராஜேஸ்வரி, பேராசிரியர்கள் நா. ராமச்சந்திரன், நயினார், கீழக்கலங்கல் ஜீவானந்தம் படிப்பக நிறுவனர் சண்முகவேலு ஆகியோர் பேசினர்.முன்னதாக, கவிஞர் கிருஷி வரவேற்றார். எழுத்தாளர் கழனியூரன் நன்றி கூறினார்.தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் தி.க.சி. பெயரில் அறக்கட்டளைவிழாவிற்குத் தலைமை தாங்கிய எழுத்தாளர் ச. செந்தில்நாதன் பேசியதாவது:எழுத்தாளர்களை வாழும் காலத்திலேயே வாழ்த்த வேண்டும். தி.க.சி.யின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும். அந்தப் பணியை தினமணி செய்ய வேண்டும். அதற்கான நிதியை எழுத்தாளர்கள் சேர்ந்து உருவாக்க வேண்டும் என்றார்.அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அந்த அறக்கட்டளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.அறிவிப்பை வெளியிட்ட உடன் அங்கிருந்த எழுத்தாளர்கள் பலர் முன்வந்து நன்கொடைகளை அளித்தனர். மேலும், நன்கொடைகளை அளிக்க விரும்பும் இலக்கிய ஆர்வலர்கள் ""தி.க. சிவசங்கரன், 21-இ. சுடலைமாடன் கோயில் தெரு, திருநெல்வேலி நகரம், திருநெல்வேலி-6'' என்ற முகவரிக்கு பணமாகவோ, டி.டி.யாகவோ அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

கல்வி மொழி, வணிக மொழி, ஆட்சி மொழி, ஆலய மொழி, கலைமொழி என எல்லா நிலைகளிலும் தமிழை அரங்கேற்றாமல் ஆரவார விழாக்களால் என்ன பயன் விளையப் போகிறது? இவற்றைக் கூறி ஆட்சிப் பீடமேறிய திமுக செய்யாவிட்டால் வேறு எக்கட்சி இவற்றை நடைமுறைப்படுத்தும். எனவே, உடனடியாக த் தமிழ்நாட்டில் தமிழே தலைமையாய்த் திகழவும் தமிழரே முத்னமையாக விளங்கவும் ஆவன செயதல் வேண்டும. 2)தி.க.சி. பெயரில் அறக்கட்டளை ஏற்படுதத ஒப்புக் கொண்ட தினமணி ஆசிரியர் அவர்களுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/22/2010 3:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக