திங்கள், 22 மார்ச், 2010

உற்றார் யாருளரோ?



கார்த்திக் அழகுவடிவிலான முருகனின் பெயர். சென்னைக்கு அருகில் உள்ள உத்தண்டி மேல்நிலைப் பள்ளியில் படித்த கார்த்திக், ஏதோ ஒரு சஞ்சலத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மாதாமாதம் நடத்தப்படும் வகுப்புத் தேர்வில் முறைகேடாக நடந்துகொண்டதற்காக பிடிக்கப்பட்டு, எங்கே பெற்றோருக்குத் தெரிந்துவிடுமோ என்ற சஞ்சலத்தில் இந்த விபரீத முடிவுக்கு வந்துள்ளார்.இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், "கல்விக்கூடங்களில் நடத்தப்படும் தேர்வுகள் மாணவரின் அறியாமையை மட்டுமே கணிக்கிறது, அவரது அறிவாற்றலை அல்ல' என்று கூறியுள்ளது எவ்வளவு உண்மை.தற்கொலை என்பது மற்ற குற்ற நிகழ்வுகளைப்போல் அதிக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயமும் ஒருவரது தற்கொலைக்குக் காரணமாகிவிடுகிறது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை, புகுந்த வீட்டில் கொடுமை தாளாமல் மணமான பெண் தற்கொலை, தொழில் தோல்வி, காதலில் தோல்வி, வேலையில்லாத் திண்டாட்டம், கடன் தொல்லை என்று கணக்கில் அடங்காத காரணங்களால் மக்கள் தமது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.சமீபத்தில் ஜெர்மனியில் தலைசிறந்த கால்பந்து வீரர் ராபர்ட் என்கே தன் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையால் கால்பந்து விளையாட்டில் முன்போல ஜொலிக்க முடியாது என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது விளையாட்டு வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் நமது நாட்டின் கால்பந்து வீரர் சத்தியன், ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது மறக்க முடியாத சம்பவம். மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வுப்படி தற்கொலை செய்து கொள்ளும் முடிவு, ஒருவர் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படும் நிலையில் எடுக்கப்படுகிறது. அந்த நிலையில் எது சுலபமான வழி என்று புலப்படுகிறதோ அந்த வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய மனநிலையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களை அந்த நிலையில் இருந்து மாற்றிவிடலாம். சில தனியார் தொண்டு அமைப்புகள் இத்தகைய முடிவு எடுப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆலோசனை வழங்குகிறது.இளைஞர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதற்குக் காரணம் பெரியவர்களின் தவறான அணுகுமுறை எனலாம். அவசர உலகத்தில் இத்தகைய பிரச்னை உள்ளவர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என் று விளைவுகளைச் சிந்திக்காமல் மனதுக்குப் பட்டதை வார்த்தைக் கணைகளால் கொட்டி விடுவது தற்கொலைக்கு மறைமுகமான காரணமாகிவிடுகிறது. பெரும்பாலான தற்கொலைகள் விவேகமற்ற சொல் அம்புகளால் விளைகின்றன என்பது உண்மை. படிப்பறிவில் இந்திய அளவில் முதலிடம் வகிக்கும் மாநிலங்களில் ஒன்று கேரளம். ஆனால் அங்கு தற்கொலைகள் அதிகம். ஆண்டுக்கு சுமார் 9,000 நபர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் 2007, 2008-ம் ஆண்டுகளில் முறையே 13,811, 14,425 நபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளில் அகில இந்திய அளவில் செய்து கொள்ளப்பட்ட தற்கொலை கணக்கை எடுத்துக் கொண்டால் முந்தைய 10 ஆண்டுகளைவிட சுமார் 28 சதவிகிதம் அதிகமாகியுள்ளது. இந்தியாவில் 2007-ம் ஆண்டு 1,22,637 நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2008-ம் ஆண்டில் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் எண்ணிக்கை 1,25,017 ஆகும். சராசரி ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 10 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். எதற்காக தற்கொலை என்ற விபரீத முடிவு எடுக்கப்படுகிறது, காரணங்கள் யாவை, சுற்றுப்புறப் பாதிப்புகள், படிப்பறிவின் தாக்கம் போன்ற நிலைகளிலிருந்து இந்தப் பிரச்னை ஆராயப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மக்கள்தொகைப் பெருக்கத்தை எடுத்துக்கொண்டால் (2008-ம் ஆண்டு மக்கள்தொகை 115.3 கோடி) 1 லட்சம் மக்கள்தொகைக்கு தற்கொலையில் இறப்போர் எண்ணிக்கை 10.8-ல் இருந்து 2007, 2008-ம் ஆண்டுகளில் மாற்றமில்லை. அறிவாற்றலிலும், கலைத்திறனிலும் சிறந்து விளங்கும் மாநிலம் மேற்குவங்கம். அந்த மாநிலத்தில் தான் 2008-ம் ஆண்டு எல்லா மாநிலங்களையும்விட அதிகமாக 14,852 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. மேற்குவங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நாட்டின் தற்கொலை நிகழ்வுகளில் 56.2 சதவிகிதம், மற்ற 23 மாநிலங்கள் மைய அரசுப் பகுதிகளில் 43.8 சதவிகிதம் என்ற புள்ளிவிவரம் நம்மைச் சிந்திக்க வைக்க வேண்டும். அதிக மக்கள்தொகை உள்ள மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்த தற்கொலைகளில் 3.3 சதவிகிதம் எண்ணிக்கையில் 4,125 மட்டுமே நிகழ்ந்துள்ளது.தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் சுமார் 14,000 தற்கொலைகள் ஆண்டொன்றுக்கு நிகழ்கின்றன. இது மொத்த நிகழ்வுகளில் 10 சதவிகிதம் ஆகும். தற்கொலைகளின் தலைநகரம் பெங்களூரு எனலாம். ஏனெனில் அங்கு 2008-ம் ஆண்டு 2,396 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அதே ஆண்டில் மும்பையில் 1,111, தில்லியில் 1,107, சென்னையில் 1,319 பதிவாகியுள்ளது. சென்னையைவிட அதிகமாக கோயம்புத்தூரில் 1,353 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நகரங்களுக்கே உரித்தான மனதுக்கு அழுத்தம் தரக்கூடிய அவசர உலக அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் தற்கொலைக்குக் காரணமாகி விடுகின்றன. சிக்கிம், நாகாலாந்து, மிசோரம், ஹிமாசலபிரதேசம், காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் 2008-ம் ஆண்டு முந்தைய ஆண்டுகளைவிட 10 சதவிகிதம் தற்கொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. தற்கொலை என்றால் நமது நினைவுக்கு வருவது அபலைப் பெண்கள் மணம் முடித்து புகுந்த வீட்டில் எழக்கூடிய பிரச்னைகள் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்வது ஒன்றுதான். சமீபத்தில் சேலையூரில் மணமான 2 ஆண்டுகளில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டது வரதட்சிணை பிரச்னை காரணமாக நிகழ்ந்தது என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு கைக்குழந்தை வேறு உள்ளது. இருந்தும் இத்தகைய முடிவுக்கு இந்த இளம் தாய் தள்ளப்பட்டார் என்பது வேதனைக்குரியது. இந்தியவில் 2008-ம் ஆண்டு 3,038 பெண்கள் வரதட்சிணை சம்பந்தமான நிகழ்வுகளில் இறந்துள்ளனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 2008-ம் ஆண்டு 207 மற்றும் 2009-ம் ஆண்டு 194. இளமை என்றென்றும் இனிமை என்று போற்றப்படுகிறது. ஆனால் 15 வயதிலிருந்து 29 வயதுவரை உள்ள இளைஞர்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இது 35.7 சதவிகிதம் ஆகும். ஆண்பால், பெண்பால் என்ற அடிப்படையில் கணக்கெடுத்தால் ஆண்கள் 64 சதவிகிதம், பெண்கள் 35 சதவிகிதம். ஆனால் பதிநான்கு வயதுக்குள்பட்ட தற்கொலைப் பாதிப்புக்கு உள்ளாகிய குழந்தைகளைக் கணக்கிட்டால் 49 சதவிகிதம் சிறுவர்கள், 51 சதவிகிதம் சிறுமிகள். ஆகக்கூடி பாதிக்கப்படும் ஆண், பெண், குழந்தைகளின் மனநிலை ஒத்திருப்பது கண்கூடு. தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தால் குடும்பம் மற்றும் பொருளாதாரப் பிரச்னையால் ஆண்கள் பெருவாரியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பெண்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஆசாபாசங்களின் பாதிப்பாலும் இத்தகைய முடிவெடுக்கின்றனர். தனிப்பட்ட காரணங்களான வரதட்சிணை பிரச்னை, தகாத உறவால் ஏற்பட்ட கருத்தரிப்பு, மலட்டுத்தன்மை, விவாகரத்து, கற்பழிப்பு என்று பெண்களுக்கே உரித்தான பிரச்னைகளுக்குக் கணக்கில்லை. ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் பொதுவான பிரச்னை குடும்பச் சச்சரவு. 2008-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி தற்கொலை செய்து கொண்ட 1.25 லட்சம் மக்களில் 15 வயதிலிருந்து 29 வயதுக்குள்பட்டவர்கள் 10,027 இளைஞர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதே காரணத்துக்காக 11,363 நடுத்தர வகுப்பினர் உயிரைவிட்டுள்ளனர். அறுபது வயதுக்கு மேற்பட்ட 9,230 வயோதிகர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு உடல்நலக் குறைவே முக்கிய காரணம். இதில் 15 சதவிகிதம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். குழந்தைகள் தற்கொலை அதிகமாக உள்ள மாநிலம் மேற்குவங்கம். இந்தியாவின் மக்கள்தொகையில் 55 சதவிகிதம் பேர் இளைஞர்கள். தற்கொலை என்ற சாபக்கேடு இளைஞர்களை அதிகமாகத் தாக்குகிறது என்பது கசப்பான உண்மை. குழந்தைப் பருவத்திலிருந்து இளமைப் பருவத்தை அடைவதை இரண்டும்கெட்டான் வயது என்பார்கள். உடல் ரீதியாகவும், மனம், சிந்தனை, உணர்வுகள் வெளி நிகழ்வுகளின் தாக்கம் என்று பலவகைப்பட்ட மாறுதல்கள் இளமைப் பருவத்தில் சந்திக்க நேரிடும். இந்த இக்கட்டான பருவத்தில் உற்றார் யாருளரோ என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பு. அவர்களுக்கு உற்ற நண்பனாக உறுதுணையாக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பெரியோர்களின் பக்குவமான அணுகுமுறைதான் அதை உறுதி செய்ய முடியும்.
கருத்துக்கள்

நான் 30 ஆண்டுகளுக்கு முன் தற்கொலை முயற்சியில் இருந்து தப்பிய பலரை உசாவியுள்ளேன். அனைவருமே இதற்கு முன்னர் தற்கொலை புரிந்த ஒருவரை முன்மாதிரியாகக் கொண்டுதான் இம் முயற்சியில் ஈடுபட்டதை அறிய வந்தேன். எனவே, தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளப்படுபவர்களைக் கண்டறிந்து காப்பாற்றுவதுடன் அத்தகையோர் நம்பிக்கையுடன் வாழ்வதை விளம்பரப்படுத்துவதன் மூலம் தற்கொலை எண்ணம் வரும்பொழுது வாழ்வில் நம்பிக்கை வைக்கவும் வழி ஏற்படும். காதல் தோல்வி என்றாலே தவறான பழக்க வழக்கத்திற்குஅடிமையாவது போன்று படக் கதைகள் வருவதை நிறுத்த வேண்டும். வெற்றிதான் இலக்கு என்றாலும் தோல்வி வந்தாலும் கவலைப்படாமல் எதிர்கொள்ள வேண்டும் என்னும் தன்னம்பிக்கையை மாணவர்களிடையே விதைக்க வேண்டும். தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கடுமையாகத் தண்டிப்பதன் மூலம் குடும்பத்தில் இத்தகைய சூழல் ஏற்படா வண்ணடம் பார்த்துக் கொள்ள வேண்டும். நிதி யிழப்புகளைத் தாங்கும் பக்குவத்தையும் மக்களிடையே பரப்ப வேண்டும். இவை போன்ற பரப்புரை செயல்பாடுகள் மூலம் தற்கொலை என்றால் என்னவென்று தெரியாத மன்பதையை உருவாக்க முடியும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/22/2010 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக