செவ்வாய், 23 மார்ச், 2010

தமிழில் படித்தவர்களுக்கே வேலையில் முன்னுரிமை ​: 'தினமணி' ஆசிரியர் வலியுறுத்தல்



மதுரை, ​​ மார்ச் ​ 22:​ தமிழில் படித்தவர்களுக்கே அரசு அலுவலகங்களில் வேலையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.மதுரை,​​ யாதவர் கல்லூரியில் தமிழ் உயராய்வு மையத்தின் வெள்ளி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.​ இதில் "மாணவர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு' எனும் தலைப்பில் அவர் ஆற்றிய சிறப்புரை:இன்றைக்கு தமிழ் மற்றும் தமிழ் உணர்வின் நிலை என்பது மிகவும் கவலை கொள்ளச் செய்வதாக உள்ளது.சமுதாயத்தில் நிலை பிறழ்ந்த செயல்களை,​​ தவறான செய்திகளை,​​ நடைமுறைகளைப் பற்றி கவலைப்படாமல்,​​ எது நடந்தாலும் பரவாயில்லை என்று வீணாக இருக்கின்றோமே,​​ ஏன் இந்த கையறு நிலை என்று நான் வருத்தப்படுவதுண்டு.எந்த ஒரு சமுதாயமும் சுய சிந்தனை இல்லாததாகிவிட்டால்,​​ தவறான செய்திகள்,​​ தவறான நிகழ்வுகள்,​​ வழிமுறைகள் காணப்படும்போது அதுபற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டால்,​​ அதுதான் அந்த சமுதாயத்துக்கு ஏற்படுகின்ற மிகப் பெரிய ஆபத்து.பேராபத்து எதுவென்றால் கவலைப்படாமல் இருப்பது.​ தவறு செய்தால் கூட தவறில்லை.​ ஆனால்,​​ தவறு செய்கிறோம் என்று தெரிந்திருந்தும் அதுபற்றி கவலைப்படாமல் இருப்பதுதான் பெரும் தவறாகும்.நாம் தமிழைப் படித்தால் வாழ்ந்து விட முடியுமா?,​​ தமிழ் படித்தால் எனக்கு வேலை கிடைக்குமா என்று கேட்கின்ற ஒரு அவல நிலை தமிழருக்கும்,​​ தமிழகத்துக்கும் ஏற்பட்டுவிட்டதே என்று நினைக்கும்போதும்,​​ இதைப் பற்றி கவலையின்றி இருக்கிறோமே என்று நினைக்கும்போதும் உண்மையிலேயே மனம் வேதனைப்படுகிறது.தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட மொழி இருந்தது.​ அதனால் தமிழ் அழிந்ததா,​​ இல்லை தமிழ் இலக்கியங்கள் குறைந்திருந்ததா?​ சங்க இலக்கியங்கள்,​​ சிலப்பதிகாரம் வரவில்லையா?1,100 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகள் நிகழ்ந்தபோதும் தமிழ் அழியவில்லை.​ 800 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர்கள் படையெடுப்பு ஏற்பட்டது.​ அதன் பின் மராத்தியர்கள் 500 ஆண்டுகள் ஆட்சி செய்தபோதும்,​​ தமிழ் பாதிக்கப்படவில்லை.ஆனால், ​​ வெறும் 250 ஆண்டுகள்தான் ஆங்கிலேய ஆட்சி இருந்தது.​ நம்முடைய பேச்சு,​​ உடை,​​ நடை,​​ பாவனை,​​ உணவுப் பழக்கம் என அத்தனையும் மேற்கத்திய கலாசாரமாக மாறிவிட்டதே ஏன்?இந்தியாவுக்குள் ஆங்கிலேயர் நுழைந்த போது அவர்கள் போட்ட முதல் சட்டமே ஆங்கிலம் படித்தவர்களுக்கே அரசு வேலைகளில் முன்னுரிமை என்பதுதான்.நாம் என்ன செய்திருக்க வேண்டும்?​ நாட்டின் விடுதலைக்குப் பிறகு அத்தனை மாநிலங்களிலும்,​​ அந்தந்த மாநில மொழிகளில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை என்றல்லவா சட்டம் இயற்றப்பட்டிருக்க வேண்டும்.ஆனால்,​​ நமது ஆட்சியாளர்களுக்கு அது பற்றிய சிந்தனை இல்லை.​ அதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.கடந்த 30 ஆண்டுகளாக நாளிதழ்கள்,​​ வார இதழ்கள்,​​ மாத இதழ்கள் ஆகியவை சமுதாயச் சிந்தனை இன்றி வியாபாரச் சிந்தனையை மட்டுமே கொண்டுள்ளன.​ ​ சமுதாயத்தின் பிரச்னைகளை பிரதிபலிப்பதுதான் பத்திரிகைகளின் பணி.தேவையில்லாத செய்திகளையும்,​​ ஆபாசமான படங்களையும் கொண்டு பத்திரிகைகள் வெளிவருமானால் அவற்றைப் புறக்கணிக்க வேண்டியது இளந்தலைமுறையினரின் கடமையாகும் என்றார்.பின்னர், ​​ சமூக மேம்பாட்டுக்கு இதழ்களின் பங்கு குறித்து பல்வேறு மாணவர்களின் கேள்விகளுக்கு "தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன் பதில் அளித்தார்.
கருத்துக்கள்

காலங்காலமாக நாட்டுப் பற்றாளர்கள் வேண்டுவதைத் தினமணி ஆசிரியர் வலியுறுத்தியுள்ளதற்குப் பாராட்டுகள். அவர் அரசிடம் நெருக்கமாக உள்ளதால் தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்ததற்காகவாவது தமிழ் வழி பயின்றவர்களுக்கும் தமிழைப் பயின்றவர்களுக்கும் வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என அரசை அறிவிக்கச் செய்ய முயல வேண்டும். தமிழுக்காகப் பல போராட்டங்களை நடத்திய திமுக ஆட்சியே தமிழைப் புறக்கணித்தால் வேறுயார்தான் தமிழை அரியணையில் ஏற்றுவார்கள்? செம்மொழி மாநாட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் மாநாட்டுக்கு முன்னதாக மிக விரைவில் இதற்கான சட்டம் இயற்ற அரசிடம் வற்புறுத்தி வெற்றி காண வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சி தமிழினக் காப்பு முதலியவற்றில் கருத்து செலுத்தும் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/23/2010 2:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக