வியாழன், 25 மார்ச், 2010

நீரின்றி அமையாது அரசியல்



உலகில் உள்ள​ உயிரினங்களும்,​​ தாவரங்களும் தனது அடிப்படையான நீராதாரமாக தண்ணீரையே சார்ந்திருக்கின்றன.​ ​ இந்த நிலை இன்னும் சிறிது காலத்துக்குக் கூட தாக்குப் பிடிக்க இயலாத சூழல் எங்கும் நிலவுகிறது.​ ​ நீலத்தங்கம் என்று அழைக்கப்படும் தண்ணீரின் பங்கீட்டு உரிமைகள் கேள்விக்குறியாகிவிட்டன.​ காசு கொடுத்துக் குடிநீர் வாங்குவதை ஏளனமாகப் பார்த்த நிலை மாறி இன்று காசு கொடுத்துத்தான் நல்ல தண்ணீர் என்ற மனோநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.நதிகளும் ஏரிகளும் இன்னபிற நீர் ஆதாரங்களும் நிலத்தின் அடியே ஓடும் நீரும் தன்னாட்சி நிறுவனங்களின் அறிவால் படைக்கப்பட்டவை அல்ல.​ ​ அவர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டவைகளும் அல்ல.​ ​ இவை யாவும் இயற்கை இங்கு வாழ்கின்ற உயிர் ஜீவன்களுக்கு அளித்த கொடைகள்,​​ சொத்துகள்.இயற்கை,​​ எழுத்து மூலம் சட்டம் எதையும் இயற்றவில்லை.​ ஆனால்,​​ எல்லை மீறும்போது இழப்பு இயற்கைக்கன்றி நம்மைத்தான் சேர்கிறது என்றார் அறிஞர் ஒருவர்.உலகமே இன்று பதற்றநிலை மண்டலமாக மாறிக்கொண்டிருக்கிறது.​ ​ ராணுவத் தளவாட உற்பத்தியில் பெரியது,​​ சிறியது என்ற அளவீடுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டு அனைத்து நாடுகளும் முழுவீச்சில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.​ பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் செயல்களை ஏதேனும் ஒரு நாடு அன்றாடம் செய்துகொண்டே இருப்பதை நாம் கண்டு வருகிறோம்.எல்லை மீறிய ஊடுருவல்களால் ஏற்படும் பதற்றம்,​​ நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடும் மேட்டுக்குடி நாடுகளால் பதற்றம் என பதற்றப் பட்டியல் நீண்டுகொண்டே போவது போலவே,​​ உள்நாடுகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கும் பஞ்சமில்லை.​ மிகக் குறிப்பாக,​​ இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் பிரச்னைகள் வளர்ந்துகொண்டே வருகின்றன.​ ​ இவற்றில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது மழை மறைவுப் பிரதேசமாக இருக்கிற தமிழகத்தின் தண்ணீர் உரிமைகளைத் தடுக்கின்ற அண்டை மாநிலங்களுக்கு உடனான பிரச்னைகள்.தனது தேவைக்கும் அதிகமாக நீர்வளம் மிக்க மாநிலங்களாக கேரளமும்,​​ கர்நாடகமும் இருந்தும்கூட தமிழகத்துக்குரிய நியாயமான பங்கைக்கூடத் ​ தரமாட்டோம் என்ற முரட்டுப் பிடிவாதத்துடன் நடந்துகொள்கின்றன.தேவை என்பது ஏதுமில்லாமல் இருந்தாலும்,​​ தண்ணீரைக் கடலில் கொண்டு சேர்ப்போமே தவிர,​​ தமிழகத்தின் தாகம் தணிக்கத் தரமாட்டோம் என்ற பரந்துபட்ட கண்ணோட்டத்தில் கேரளம் உள்ளிட்ட அரசுகள் செயல்படுகின்றன.​ மேற்கண்ட மாநிலங்கள் உயரிய மனிதாபிமானத்தோடு செயல்படாமல் இந்திய ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் சதியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.​ ​ ​மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறுகளைத் தீர்ப்பதற்கான சட்டம் 1956-ன் அடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலம் இந்தியாவின் பல மாநிலங்களின் நதிநீர்த் தகராறுகள் தாமதமாகவேனும் தீர்க்கப்படுகின்றன.குஜராத்,​​ ராஜஸ்தான் மாநிலங்களிடையேயான மகி ஆற்று நீரைப் பங்கிடுவது,மேற்கு வங்கம் ஒரிசா மாநிலங்களுக்கிடையே சுபர்ரோ ஆற்றுப் பங்கீடு,பஞ்சாப்,​​ ராஜஸ்தான்,​​ ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கிடையேயான ராவி,​​ பியாஸ் நீர்ப் பங்கீடு.​ கர்நாடக,​​ ஆந்திர மாநிலங்களுக்கிடையேயான துங்கபத்ரா உயர்மட்டக் கால்வாய் ​ திட்டம்.உத்தரப்பிரதேசம்,​​பிகார் மாநிலங்களுக்கிடையேயான முசாக்கந்த் திட்டம் போன்ற நதிநீர்ப் பிரச்னைகளுக்கு மேற்கண்ட சட்டத்தின் வாயிலாக குறைந்தஅளவேனும் தீர்வு காணப்பட்டுள்ளது.​ ​ ஆனால் தமிழகம்-கேரளம்-கர்நாடகம்-ஆந்திரம் என வரும்பொழுது புதிய புதிய நதிநீர் சிக்கல்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவே தவிர,​​ எந்தவிதச் சட்டங்களாலும்,​​ ஆணையங்களாலும் அவற்றைத் தீர்க்கவே இயலவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் உண்மையாகும்.1935-ம் ஆண்டின் இந்திய அரசின் சட்டப் பிரிவு 130 பின்வருமாறு கூறுகிறது:​ ​ ​ ''கவர்னர் ஜெனரலின் முடிவால் ஒரு மாநிலம் பாதிக்கப்படுமானால் இங்கிலாந்து மன்னரிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்.​ அதேவேளை மேற்படி சட்டத்தின் 131,​ 133 ஆகிய பிரிவுகளின் கீழ் எழும் எந்தப் பிரச்னையிலும் எந்த ஒரு நீதிமன்றமும் தலையிட முடியாது.​ ​ குடியேற்ற ஆட்சியாளர்களின் இச்சட்டம் எந்தவொரு மாநிலமும் தன்னிச்சையாகத் தனது நீர்வளத்தைத் தடுத்து நிறுத்தி இன்னொரு மாநிலத்தைப் பாதிக்குமாயின் விசாரணைக் குழு அமைக்கவும் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு நியாயம் வழங்கவும் மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று கூறுகிற து.மேற்கண்ட சட்டத்தைத் தொடர்ந்தே சுதந்திர இந்தியா பல சட்டங்களை ​ இயற்றியது.​ ஆயினும்,​​ அச்சட்டங்கள் பல்வேறு மாநிலங்களுக்குப் ​ பயன்படுத்தப்பட்டதுபோல,​​ பயனளித்ததுபோல,​​ தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை.​ தமிழகத்தின் உரிமைக்கு மட்டும் சட்டங்கள் பாராமுகமாகவே இருக்கின்றன.இதுபோன்றதொரு நிலைக்கு என்ன காரணம் என்பது பற்றி ஆட்சியாளர்கள்,​​ ​ குறிப்பாக மத்திய ஆட்சியாளர்கள் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.​ ​ ஐந்தாண்டு கோலோச்சும் அறுவடை அரசியலில் கவனம் செலுத்தும் அவர்கள் மக்களின் அவலங்கள் போக்கும் நிலையிலிருந்து திட்டமிட்டு பின்வாங்குகின்றனர்.​ ​ இதில் காங்கிரஸ் அரசு சற்றும் சளைத்ததல்ல.​ ​ ​1957-ல் சென்னை மாநிலமாக இருந்தபோது 1952-ல் இருந்த மக்கள்தொகையில் 50 விழுக்காட்டுக்கு மேல் இழந்தது மட்டுமன்றி 10-ல் 1 பங்கு நீரை மட்டுமே பெற முடிந்தது.​ ​ எனவே,​​ தமிழகம் பருவ மழையை மட்டுமே இப்போது நம்பியுள்ளது.​ ​ தென்மேற்குப் பருவமழையைக் காட்டிலும் வடகிழக்குப் பருவமழை மிகக் குறைந்தே காணப்படுகிறது.​ ​ ​1,30,000 சதுர கி.மீ.​ பரப்பளவு கொண்ட தமிழகம் இயற்கையிலேயே மழை மறைவுப் பகுதியாகும்.​ புவியியல் ரீதியில் தமிழகம் 73 விழுக்காடு கடினமான பாறைப் பகுதிகளைக் கொண்டதாகவும் 27 விழுக்காடு வண்டல் மண் நிறைந்த பகுதியாகவும் அமைந்துள்ளது.​ ​ ஒரு சதுர மீட்டர் வண்டல் மண் பகுதியில் 30 விழுக்காடு மட்டுமே நிலத்தடி நீரைச் சேமிக்க முடியும்.​ ​ இதுவே கடினப் பாறைப் பகுதியாக இருந்தால் 5 முதல் 8 விழுக்காடு மட்டுமே சேமிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகள் மற்றும் நதிகள் 20 ஆயிரம் சதுர கி.மீ.​ பரப்பு கொண்டவை.​ ​ பெரிய ஆறுகள் என்றும், 2000 முதல் 20,000 சதுர கி.மீ.​ பரப்பு கொண்டவை நடுத்தர ஆறுகள் என்றும்,​​ இதற்குக் கீழ்ப்பரப்பு கொண்டவை சிறிய ஆறுகள் என்றும் அளவிட்டுள்ளனர்.​ ​ இந்த அளவுகோலின்படி பார்த்தால் காவிரி மட்டுமே தமிழகத்தில் பெரிய ஆறாகும்.​ ​ இதுதவிர 12 நடுத்தர ஆறுகள்,​​ 4 சிறிய ஆறுகள் என 16 ஆறுகள் இருக்கின்றன.​ ​ எனவே தமிழகத்தின் நீர்த்தேவைகளைப் ​ பூர்த்தி செய்யும் திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் ஓடும் ஆறுகளின் மூலம் கிடைக்கும் தண்ணீர்,​​ ஆறுகளின் மேற்பரப்பில் காணப்படும் மற்றும் நிலத்தடி நீரை மட்டுமே ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.இவ்விதமாகப் பாயும் ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் பெரும்பாலும் மேற்குத் ​ தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகளில் அமைந்துள்ளன என்பதும் அப்பகுதிகளில் பல கேரளம்,​​ கர்நாடகம் போன்ற மாநிலங்களின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன என்பதும்தான் பல்வேறு சிக்கல்களுக்குக் காரணம்.மாநிலங்களையும்,​​ மொழிவழி மக்களையும்,​​ பிரித்துப்பார்த்து இயற்கை தனது அருட்கொடைகளை வழங்கவில்லை.​ ​ ஆனால்,​​ அருகாமை மாநிலத்துக்கு மாநிலம் உள்ள​ அரசியல்வாதிகள் ஆளும் -​ எதிர் என்ற பாகுபாடு இல்லாமல் தமிழகத்தை வஞ்சிப்பதில் குறியாக இருக்கிறார்கள்.​ ​ அவ்விதமாகவே அந்த மாநில மக்களும் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.​ தமிழக மக்கள் கையில் பிச்சைப் பாத்திரத்தைக் ​ கொடுத்துவிட்டு அதை இன்னும் உயர்த்திப்பிடி,​​ தாழ்த்திப்பிடி என்று ஆலோசனைகளை ​ பல்வேறு தளங்களில் இருந்து வழங்கி வருகின்றனர்.காவிரி தொடங்கி கன்னியாகுமரியின் நெய்யாறு,​​ அமராவதியின் நீர்ப்பிடிப்பான பாம்பாறு,​​ கம்பம் பள்ளத்தாக்கை வளப்படுத்திய பெரியாறு,​​ கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தின் ஜீவாதாரமான பவானி,​​ காவிரி,​​ வட தமிழகத்தின் பாலாறு என நதிகளின் உரிமைகள் அண்டை மாநிலங்களின் அடாவடித்தனத்தால் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.அரசியல் பிழைப்புக்காக இப்பிரச்னைகளைக் கையாள்வோரின் விகிதாசாரமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.​ ​ மக்கள் நலம் சார்ந்த அரசியல் நிலைப்பாடுகள் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படுகின்றன என்பது அவரவர் கொள்கையாக இருந்தாலும் அதை ​ ஏற்றுக்கொள்ளவியலாது.​ ​ தமிழகத்தின் நீர்த்தேவை தமிழக மக்களுக்கு மட்டும் பலனளிப்பதல்ல.​ ​ பக்கத்து மாநிலங்களின் உணவு மற்றும் பிற தேவைகளையும் சார்ந்தே இருக்கிறது என்பதை அங்குள்ள ஆட்சியாளர்கள் உணர மறுக்கின்றனர்.உயர்ந்த அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையே மதிக்காமல் சட்டமியற்றிய கேரளத்தின் நிலைப்பாடு என்ன என்பதை அனைவரும் அறிவர்.​ தமிழக மக்களின் நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள்தான் கேரளத்துக்குச் செல்கின்றன.​ ​ பணப் பயிர்களான தென்னையும் ரப்பரும் பயிர் செய்யும் கேரள மக்களுக்கு அரிசி முதல் அனைத்தும் தமிழகத்தில் இருந்துதான் வருகின்றன.​ ஆனால் அதே தமிழக விவசாயிகளுக்கு அவர்களின் விவசாயத்துக்குப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம்.ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது.​ அப்படி வீணாகும் தண்ணீரைக்கூட தமிழக மக்களுக்குக் கொடுக்க கேரள அரசு மறுக்கிறது.​ பெறுவதையெல்லாம் பெற்றுக்கொண்டு,​​ கொடுப்பதில் கஞ்சத்தனம் காட்டுகின்றனர்.​ ​ நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்துக்கு அதைக் கொடுப்பதுதான் தமிழக மக்களின் குணம்.​ பாவம் தமிழக மக்கள் என கேரள எழுத்தாளர் ஒருவரே ஒருமுறை குமுறினார்.புவியின் சொர்க்கம் -​ என்ற அடையாளத்துடன் அறிமுகப்படுத்தப்படும் கேரளத்தின் ​ போக்கு மெச்சத்தகுந்ததாக இல்லை.​ ​ இரட்டை வேடத்துக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாகவே அது தன்னைக் காட்டிக்கொள்கிறது.​ ​ எனவேதான்,​​ அருகாமை மாநில மக்களின் நீர் உரிமைகளாடு விளையாடிப் பார்க்கிறது.​ தேவையுள்ளோருக்கு ஏதும் தராமல் அதை வீணடிப்பேன் என்று கூறுவதை இப்படிச் சொல்லாமல் எப்படிச் சொல்வது?​ ​ இவர்கள் கற்ற சித்தாந்தம் இதுதானோ?தண்ணீர் உரிமைகளைப் புறந்தள்ளாமல் ''உயிரான நீரின் பங்கீடு'' என்பதைத் தெளிவாக வரையறை செய்து பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வதில்தான் மாநிலத்துக்கு மாநிலம் உறவு கொண்டாடுவதற்கான வழி பிறக்கும்.​ தேர்தல்களை மனதில் கொள்வதைவிட,​​ மக்களின் தேவைகளை மனதில் கொள்வதுதான் தேவை இப்போது.​ ''நீரின்றி அமையாது உலகு'' என்றார் வள்ளுவர்.தண்ணீர் சிக்கல் குறித்தான இதே நிலை நீடித்தால் 'நீரின்றி அமையாது அரசியல்' என்றாகிவிடும்.
கருத்துக்கள்

நம் தலைவர்கள் திராவிடநாடு திராவிட நாடு எனக் கூறி இல்லாத திராவிடத்தைத் தமிழகத்தில் பரப்பினார்களே தவிர தென்னகமெங்கும் அவை தமிழ்க் குடும்ப இனங்கள் என்ற கருத்தை உணர்த்தத் தவறி விட்டனர். எனவே, அவர்கள் பகை உணர்வுடன் நடந்து கொள்கின்றனர். இனியேனும் விழித்து தென்னகத்தவர் தமிழ்த்தாய் மக்கள் என்பதைப் புரியச் செய்வோம். அதன் பின்னராவது புரிதல் உணர்வு ஏற்படுமா என்று பார்ப்போம். ம.தென்னரசு சரியான புள்ளிவிவரங்களுடன் கட்டுரையை அளித்துள்ளமைக்குப் பாராட்டுகள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/25/2010 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக