சனி, 15 ஜனவரி, 2011

music sense is basic sense

தாய்மொழியைக் கற்றுக் கொடுங்கள் என்னும் ஆசிரியரின் அறிவுரையை அனைவரும் பின்பற்றினால் நாடு நலம் பெறும்! வளம் பெறும்! ஆனால், தமிழ் நாட்டில் பிற மொழிக்கல்விக்குத் தரும் ஊக்கம் தாய்த்தமிழுக்கு இல்லையே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சங்கீத ரசனை இந்தியரின் அடிப்படை உணர்வு: 
தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்

சென்னை, டிச. 14: சங்கீத ரசனை இந்தியர்களின் அடிப்படை உணர்வு என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் தெரிவித்தார்.  ஹம்ஸத்வனி அமைப்பின் 21-வது ஆண்டு இசை, நாடக விழா சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த விழாவைத் தொடக்கி வைத்து தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியதாவது: உலகில் வேறு எந்த நாட்டுக்கும், பகுதிக்கும் இல்லாத பெருமை சென்னைக்கு உண்டு. ஆண்டின் 365 நாள்களும் - இலக்கியம், கலை, நாடகம், ஆன்மிகம் என ஏதாவது ஒரு நிகழ்ச்சி தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் நடத்தப்பட்டு வரும் பெருமை சென்னைக்கு மட்டுமே உண்டு.  உலகில் பல்வேறு இனங்கள் உள்ளன. அந்தந்த இனங்களுக்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. சில இனங்கள் செல்வத்துக்கு முன்னுரிமை அளிக்கும். நாடுகளைப் பிடிப்பதிலும் மதத்தைப் பரப்புவதிலும் வேறு சில இனங்கள் ஆர்வம் காட்டும். ஆனால் மனிதன் எப்படி வாழ வேண்டும் என காட்டுவதுதான் நம் இனத்தின் தலையாய பண்பு.  "ஈதலும் இசைபட வாழ்தலும்' தான் நமது இனத்தின் சிறப்பு, தனித்தன்மை. நம்மிடம் இருப்பதை பிறருடன் பகிர்ந்து கொள்வது, இசையோடு இயைந்து வாழுவது என்பதுதான் இதன் பொருள்.  இசையோடு ஏன் வாழ வேண்டும்? இசை இல்லாவிட்டால் இரக்கம் இருக்காது; இரக்கம் இல்லாவிட்டால் மனிதாபிமானம் இருக்காது; மனிதாபிமானம் இல்லாவிட்டால் மானுடனாக இருப்பதற்கே அர்த்தம் இருக்காது.  இன்றைய காலகட்டத்தில் சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப கிராமங்களிலிருந்து அவசர கதியில் இயங்கும் நகர்ப்புறங்களை நோக்கி மனிதர்கள் இடம்பெயருகிறார்கள். அலுவலகங்களில் இருப்பதைவிட அலுவலகங்களுக்குப் போய் விட்டு வருவதே மக்களுக்கு மிகப் பெரிய "டென்ஷன்' ஆக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஒன்று போதும், மனஅழுத்தத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஒருசேர அதிகரிக்க.  அலுவலகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்த இறுக்கமான சூழ்நிலை தொடருகிறது. தொலைக்காட்சி, சினிமா, ஏன் பத்திரிகைகள் என எதை எடுத்தாலும் நமது அழுத்தத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கின்றன. இதிலிருந்து விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இசைதான். அதற்கு இதுபோன்ற சபாக்கள்தான் உதவுகின்றன.  நாகரிக மாற்றங்களில் பல, நம்மை பாதித்துக்கொண்டே இருப்பதால் நமது அடித்தளம் அசைக்கப்படுகிறது. நமது நாகரிகம், கலாசாரம், பண்பாடு இவையெல்லாம் உலகமயம் என்ற சூழலில் தகர்ந்து கொண்டிருக்கிறது.  நமது முன்னோர்கள் தீர்க்கதரிசிகள். மனிதனின் அடிப்படை பயம் நிலையாமைதான். நிலையாமை உள்ளவரை இறையுணர்வும் இருக்கும் என்பதை உணர்ந்ததால்தான் மொழியையும், சமயத்தையும் இணைத்தார்கள். மொழியை சமயமும், இறையுணர்வை மொழியும், ஒன்றையொன்று பாதுகாக்கும் என்று கணித்தனர்.  இன்று பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும்கூட உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றாக சம்ஸ்கிருதம் தொடர்வதற்குக் காரணம் அந்த மொழி இறையுணர்வுடன் பிணைந்திருப்பதுதான்.  அதுமட்டுமல்ல, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் என்று கலைகளையும் சமயத்துடன் இணைத்தார்கள் நம் முன்னோர்கள். இந்தக் கலைகள் காப்பாற்றப்பட வேண்டுமென்றால், நமது பண்புகள், பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாம் மொழியைக் காப்பாற்ற வேண்டும். தமிழோ, தெலுங்கோ, ஹிந்தியோ, பஞ்சாபியோ, தயவு செய்து தாய்மொழியில் பேசுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தாய்மொழியைக் கற்றுக் கொடுங்கள்.  மொழியை மறக்கும்போது நமது கலாசாரம், பண்பாடு போன்றவற்றை நாளைய சமுதாயம் இழந்துவிடும்.  சங்கீத ரசனை என்பது ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அடிப்படையிலேயே உள்ளது. இல்லாவிட்டால் இசையைப் பிரதானப்படுத்தி வெளியான எத்தனையோ திரைப்படங்கள், அவை வேறு மொழியாக இருந்தபோதிலும் வெற்றி பெற்றிருக்க முடியுமா?  கொஞ்சும் சலங்கையும், தில்லானா மோகனாம்பாளும், சலங்கை ஒலியும், சங்கராபரணமும், சிந்து பைரவியும் பெரும் வெற்றி பெற்றதற்கு காரணம், பாமரர்களுக்கும் இசையுணர்வு இருக்கிறது என்பதால்தானே?  ஒரு மனிதன் எப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் இருந்தாலும் இசைதான் மிகப் பெரிய அமைதியைக் கொடுக்கும். அப்படிப்பட்ட இசையின் வளர்ச்சிக்காக ஹம்ஸத்வனி அமைப்பு சேவை செய்து வருவது பாராட்டுக்குரியது என்றார் தினமணி ஆசிரியர்.  விழாவில் ஹம்ஸத்வனி அமைப்பின் துணைத் தலைவர் சீனிவாசன் தேவய்யா, செயலாளர்கள் ஆர்.சுந்தர், டி.ஆர்.கோபாலன், சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன், புல்லாங்குழல் இசை மேதை என்.ரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக