வெள்ளி, 14 ஜனவரி, 2011

article by adbul zaphar: தமிழ் சோறு போடுமா...?

தமிழ் சோறு போடுமா...?


தில்லி தமிழ்ச் சங்கத்தில் ""தமிழ் 2010'' என்ற ஒரு கருத்தரங்கு...! கலந்துகொண்ட முதல்வர் ஷீலா தீட்ஷித் "தமிழ் இனிமையான மொழி' என்று பேசுகிறார். அது ஓர் அரசியல்வாதியின் சம்பிரதாய வார்த்தைகள் என்று நண்பர் ஒருவர் குறிப்பிடுகிறார். முன்பெல்லாம் இந்த நண்பர் ""தமிழ் சோறு போடுமா?'' என்று கேள்வி கேட்டு வந்தார். இப்போது ""போடாது'' என்று தீர்ப்பே சொல்கிறார். நிலைமைகள் அந்த அளவுக்கு அவரை மாற்றி இருக்கின்றன...!  இவர்கள் ஒன்றும் ஆங்கிலத்தைக் காதலிப்பவர்கள் அல்ல. ஆங்கிலம்தான் சோறுபோடும் என்று நம்புகிறவர்கள். அதனால் அந்த மொழியின் மீது அத்தனை மோகம். விளைவு...? தமிழ் மீது மாற்றான்தாய் மனப்பான்மை! அப்படி இருந்தும் தங்களுக்கென ஓர் அடையாளம் இருக்கட்டும் என்று பிற மாநிலங்களுக்குச் சென்றாலும், பிற நாடுகளுக்குச் சென்றாலும் ஒரு தமிழ்ச் சங்கத்தையோ, கலாசார மையத்தையோ ஏற்படுத்திக்கொண்டு, இங்கிருந்து அங்கு நடக்கும் விழாக்களுக்குத் தமிழ் அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் என்று அவர்களது சொந்தச் செலவில் பலரை அழைத்துச் சென்று கௌரவிக்கிறார்கள்.  இந்த விஷயத்தில் ஈழத் தமிழர்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர்கள் தமிழ்ச் சங்கத்தோடு நிற்க மாட்டார்கள். அதையும் கடந்து தமிழ்த் தொலைக்காட்சி, தமிழ் வானொலி என்று மேலே மேலே போய்க்கொண்டே இருப்பார்கள். பொருளாதாரக் காரணங்களால் தோன்றிய சில அமைப்புகள் மறைவதும் உண்டு. ஆனால், வானொலிகள் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கின்றன.  எனக்குத் தெரிந்து கனடாவில் சுமார் 5, பிரிட்டனில் 2, ஐரோப்பா, ஆஸ்திரேலியாவில் தலா 3 என்று லாபமோ, நஷ்டமோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வைக்கும் பெயர்கள் என்னை ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைய வைக்கும்.  இலங்கை வானொலி "மரண அறிவித்தல்' என்று கூறுவதை, அவர்கள் "துயர் பகிர்வோம்' என்பார்கள். வெவ்வேறு துறைகளை ஆய்வுசெய்த ஒரு நிகழ்ச்சிக்கு அங்கு வைத்த பெயர் "துறைகள் துளாவுவோம்...!' இங்கு கலைஞர் தொலைக்காட்சியிலேயே ஒரு நிகழ்ச்சிக்கு வைத்த பெயர் "மேஜிக் வித்அவுட் லாஜிக்'.  நல்ல தமிழ்ச்சொற்களைத் தேடித்தேடிப் பிடித்து பெயர்வைப்பார்கள். "அத்லெட்' என்பதை "மெய் வல்லுநர்கள்' என்பார்கள். "சாம்பியன்' என்பதை "வாகைசூடி' என்றழைப்பார்கள். இப்படி எத்தனை எத்தனையோ...!  1950-ம் ஆண்டு இலங்கை வானொலியில் தொடங்கிய என்னுடைய வானொலி வாழ்க்கை, இந்திய வானொலியில் 1960-களில் நாடகங்கள் வாயிலாகத் தொடங்கிய பிறகு, 1980 முதல் கிரிக்கெட் வர்ணனையாகத் தொடர்ந்தது. இப்போது நாடகங்களும் இல்லை; கிரிக்கெட் வர்ணனையும் நின்றுபோய்விட்ட இந்த நிலையில், என்னுடைய ஒலிபரப்புச் சேவை 60 ஆண்டுகளாகத் தொடர்கிறது என்றால், இந்தப் புலம்பெயர் தமிழர்களின் வானொலிகள்தான்காரணம். 1999-ல் லண்டன் ""ஐ.பி.சி.-தமிழ்'' உலகக் கோப்பை கிரிக்கெட்டைத் தொகுத்து வழங்க என்னை லண்டனுக்கே அழைத்தது. பிறகு, 2004-ல் ""வாகைசூடிகள் (சாம்பியன் கப்) விருது''க்காக...! அதை முடித்துக் கொண்டு அவசரம் அவசரமாக இந்திய-ஆஸ்திரேலிய "டெஸ்ட்' போட்டிக்காக நாடு திரும்பியபோதுதான் "இனிமேல் தமிழ் வர்ணனை இல்லை' என்ற குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அந்த சோகம் இன்னும் தொடர்கிறது.  அதேசமயம், "ராஜ்' தொலைக்காட்சியின் துணையுடன் மும்பையிலுள்ள "நியோ-ஸ்போர்ட்ஸ்' கிரிக்கெட் வர்ணனையைத் தமிழில் தர என்னையும், பாலாஜியையும் பாங்காக் அழைத்துச்சென்றது. பிறகு நானும் நானியும் மும்பை சென்று "நியோ ஸ்போர்ட்ஸý'க்காக இரண்டு தொடர்கள் செய்தோம். "இஎஸ்பிஎன் ஸ்டார் கிரிக்கெட்' இன்னும் ஒருபடி மேலே போய் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை போட்டி ஆட்டங்களைத் தமிழில் வர்ணனை செய்ய என்னையும், பாலாஜி, பாஸ்கி, டாக்டர் சுமந்த் ராமன், நானி, பட்டாபி ஆகிய 6 பேரை சிங்கப்பூர் அழைத்துச் சென்றது.  அவர்களுக்கு இருந்த ஆர்வம் நம்மூர் "கேபிள் ஆபரேட்டர்'களுக்கு இல்லாமல் போய்விட்டது. கடுகளவேனும் ஒத்துழைப்புத்தர மறுத்து விட்டார்கள். அங்கும் தமிழ் வர்ணனை நின்றுபோய் விட்டது. அவர்கள் பிழை அல்ல; நம்முடைய கோளாறு...!  தமிழில் கிரிக்கெட் வர்ணனை சாத்தியமல்ல என்று கிண்டலும் கேலியும் பேசி, நக்கலும் நையாண்டியும் செய்தவர்களின் எண்ணப் போக்கை மாற்ற நானும், ராமமூர்த்தி (இந்திய ஆட்சிப்பணி ஓய்வு), "பிள்ளைத்தமிழ்' பேசிய மணி, பெரியவர் ரங்காச்சாரி ஆகியோர் எவ்வளவு பாடுபட்டோம் என்பது ஊக்கமும் உற்சாகமும் தந்த ஆயிரக்கணக்கான நேயர்களுக்குத் தெரியும். வெளியிலுள்ள தொலைக்காட்சிகளுக்குத் தெரிந்திருக்கிறது. ஆக வெளியில் உள்ளவர்களெல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள்.  தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள்தான் தாங்களும் தடுமாறி, தமிழையும் ததீங்கிணத்தோம் போட வைக்கிறார்கள். ஒருமுறை தில்லி தமிழ்ச் சங்கத்தில் பேசும்போது, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார். ""கோவையில் ஓர் அரசுத்துறை சார்ந்த கூட்டம். 9 அதிகாரிகள் ஆங்கிலத்தில் பேசினார்கள். ஒரே ஒருவர் மட்டும் தமிழில் பேசினார். அந்த ஒருவர் வடநாட்டைச் சேர்ந்த இந்திக்காரர். மற்றவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்ம ஊர்க்காரர்கள்'' என்று சொல்லிவிட்டு ""இவர்களை என்ன செய்தால் தேவலை'' என்று சீறினார்.  துபையிலிருந்து ஒலிபரப்பாகும் மலையாள வானொலியான "ஏஷியா நெட்'டில் தினசரி ஒரு மணிநேர தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஆசிஃப் மீரான் பொறுப்பேற்று நடத்துகிறார். தனது வலைப்பூவில் நெல்லைத் தமிழ்ச் சொல் வழக்கைப் பயன்படுத்துவதால் எல்லோராலும் "அண்ணாச்சி' என்று அழைக்கப்படும் இவர், தனது ஒலிபரப்பில் நல்ல தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துகிறார்.  கடந்த 4 ஆண்டுகளில் இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைத்தான் பயன்படுத்தியுள்ளார் என்று இவரோடு பணியாற்றும் மலையாளிகள் சான்று பகர்கிறார்கள். நல்ல தமிழில் பேசுவது என்று இவரும் துபையிலுள்ள இவரது நண்பர்களும் ஓர் இயக்கமே நடத்தி வருகிறார்கள்.  சென்னையில் ஒரு வட இந்திய சேட் "லேவாதேவி' எனப்படும் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். கிரிக்கெட் ரசிகர். இரண்டு வானொலிப் பெட்டிகளை வைத்துக்கொண்டு இந்தியில் வர்ணனை கேட்பார். அது முடிந்து ஆங்கிலம் தொடங்கும்போது, தமிழுக்கு வந்துவிடுவார். அவரிடம் "நம்பள்க்கி, நிம்பள்க்கி' சமாசாரமெல்லாம் கிடையாது. நல்ல தமிழ் பேசுவார், படிப்பார். அது எப்படி என்று கேட்டால் ""நாப்பது வருஷம் இங்கே வாழ்ந்துவிட்டு நான் நல்ல தமிழ் பேசவில்லை என்றால் அது வேறு யாருக்குமல்ல, எனக்குத்தான் அவமானம்'' என்பார். இவை அவரே உதிர்த்த சொற்கள்.  ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து, தமிழகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் தமிழில் பேசுவதை, படிப்பதை அவமானமாகக் கருதுகிறார்கள் என்பதுதான் இதிலுள்ள சோகம்.  "ஆனால்' என்று நீட்டி முழக்குவதைவிட "பட்' என்பதைச் சட்டென்று சொல்லிவிட முடிகிறதாம். "ஆகையால்' என்பதைவிட "úஸô' என்று சொல்வது சுலபமாக இருக்கிறதாம். இதற்கு உண்மையான காரணம் இவர்களது வாய் அவசியப்படும் அளவுக்கு இவர்களது மூளையால் சொற்களை வினியோகிக்க முடியவில்லை என்பதுதான்...!  வார்த்தைக்கு வார்த்தை "வந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும், மூச்சுக்கு முன்னூறு முறை "இப்ப பாத்தீங்கண்ணா', "ஏன்னு கேட்டீங்கண்ணா' என்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவதற்கும் இந்த மூளைக் குறைபாடே காரணம்! வல்லுநர்கள் சொல்கிறார்கள்!  இங்கிலாந்திலிருந்து ப்ரான்ஸ் செல்லும் கப்பலில் அதிகாரி என் கடவுச்சீட்டை திரும்பத்தந்தபோது நான் "நன்றி' என்றேன் ஆங்கிலத்தில்! அதற்கு அவர், "இல்லையில்லை மெர்சி... மெர்சி' என்றார். பிரெஞ்ச் மொழியில்...! அவர் மொழி மீது அவருக்குள்ள காதல் அப்படி...!  இரண்டு ப்ரெஞ்ச் பத்திரிகைகள் சொந்தமொழிச் சொற்கள் இருக்க பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக அவற்றுக்கு அபராதம் விதித்து மன்னிப்பும் கேட்கவைத்ததாம், "ப்ரெஞ்ச் அகாதெமி' என்கிற அமைப்பு. ஆனால், நம்நாட்டிலோ...?  சக்திவாய்ந்த ஊடகங்கள் தமிழல்லாத சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, அவையும் தமிழ் என்று கருதப்படக்கூடிய அபாயம் இருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் இதைப் புரிந்து கொள்ள மறுப்பதுதான் சோகம்.  தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்தபோது 5-ம் வகுப்பு வரை தமிழ்மொழி என்றுகூட தனித்துச் சொல்லவில்லை. தாய்மொழியில் கல்வி என்று ஒரு சட்டம் கொண்டுவந்தார். ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள் நீதிமன்றப்படிகளை மிதித்தன. நீதிமன்றம் ""தங்கள் பிள்ளைகளுக்கு எந்த மொழியில் கல்வி கற்றுத்தர வேண்டும் என்று தீர்மானிப்பது அரசியல் சாசனம் பெற்றோருக்கு அளித்துள்ள அடிப்படை உரிமை; அதில் அரசு தலையிட முடியாது'' என்று தீர்ப்பளித்தது.  புதுவை பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும், மத்திய அரசின் திட்டக்குழுவில் கல்வி, சுகாதாரம் ஆகிய பிரிவுகளுக்கான உறுப்பினராக இருந்தவருமான பெரியவர் வேங்கடசாமி, ""மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இனி தமிழில்தான் என்று ஒரு சட்டம் போடுங்கள். எந்த அடிப்படை உரிமை குறுக்கே வந்து நிற்கிறது பார்த்து விடலாம்'' என்றார். யார் செய்தார்கள்?  தமிழை வளர்க்கிறோம், தமிழால் வளர்கிறோம் என்று சொல்லிக்கொள்பவர்களும், தமிழின் பெயரால் விழா எடுப்பவர்களும், தமிழின் பெயரால் விருது பெறுபவர்களும் தாங்கள் உண்மையில் தமிழுக்குச் சேவை செய்கிறோமா என்பதற்குத் தங்கள் மனசாட்சியை ஒரு முறை தொட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது.  ""தமிழ் வாழ்க'' என்று இந்தக் கட்டுரையை நிறைவு செய்ய ஆசை. ஆனால், ""தமிழ் மெல்ல இனி சாகாதிருக்கட்டும்'' என்றே நிறைவு செய்யத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக