வெள்ளி, 14 ஜனவரி, 2011

priority to tamilmedium: govt.explanations: தமிழ் வழிக் கல்வியில் யாருக்கு முன்னுரிமை? தமிழக அரசு விளக்கம்

இதுதான் சட்டம் என்பது புரிகிறது.  ஆனால்  தமிழ் மொழியைப் படித்தவர்களுக்கு -  தமிழ் இளங்கலை, முதுகலை, புலவர் படித்தவர்களுக்கு -  முன்னுரிமை வழங்கப்படாதது அநீதியல்லவா? குறிப்பிட்ட பணி நிலைக்கான படிப்பில் தமிழ் வழி பயின்றவர் இல்லாத பொழுது அதற்குக் குறைவான கல்வி நிலையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் அல்லவா? முன்னுரிமை எனக் கூறி ௨௦ % மட்டும்  தந்து பின்னிலைக்குத் தள்ளாமல்  ௮௦ % தருவதுதானே முறை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



தமிழ் வழிக் கல்வியில் யாருக்கு முன்னுரிமை? தமிழக அரசு விளக்கம்


சென்னை, ஜன. 13: தமிழ் வழியில் எப்படி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்துக்கு தாற்காலிகத் தடை விதித்துள்ளது.  இதனிடையே, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும் என தேர்வு அறிவிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் வழிக் கல்வி என்பது எதுவரை? கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வி என்பது என்ன? என்றெல்லாம் வரையறுத்துக் கூறப்படவில்லை. இதனால், பெரும் குழப்பங்கள் அரசுத் துறைகளிலும், தேர்வர்கள் மத்தியிலும் நிலவியது.  இந்த நிலையில், அதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, துறையின் செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் வெளியிட்டுள்ள உத்தரவு:  அரசுத் துறைகளின் பணிகளில் நேரடி நியமனங்களில் ஒவ்வொரு பதவிக்கான விதிகளில் அல்லது உத்தரவுகளில் நேரடி நியமனத்துக்கான வகுத்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி அல்லது கல்வித் தகுதிகளைத் தமிழ்மொழி மூலமாகப் படித்துள்ள நபர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, எட்டாம் வகுப்பு கல்வித் தகுதி என நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிக்கு எட்டாம் வகுப்பினை தமிழ்மொழி மூலமாகப் படித்துள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.  அதேபோன்று, பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிக்கும் பத்தாம் வகுப்பினை தமிழ் மொழி மூலமாகப் படித்துள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  இளங்கலை பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள இளங்கலை பட்டப்படிப்பினை தமிழ்மொழி மூலமாகப் படித்துள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். முதுகலை பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு முதுகலை பட்டப்படிப்பினை தமிழ்மொழி மூலமாகப் படித்துள்ள நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும், மதிப்பெண் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களில் எந்தப் பயிற்று மொழியில் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை பெற்றுள்ளனர் என்பதை கண்டறிய முடியாத நிலையில் அதற்கான சான்றிதழை அந்தப் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை பயின்ற கல்வி நிறுவனத்தில் இருந்து விண்ணப்பதாரர் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.  இந்தச் சட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை நீக்கப்பட்ட பின்பு விதிகளை பின்பற்றலாம் என்று வெங்கட்ரமணன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக