நல்ல வாதங்கள் இடம் பெற்றுள்ளன. அரசும் அரசியல் கட்சிகளும் சமயங்களுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும். நமக்கு ஆரியமும் கிறித்துவமும் இசுலாமும் வேறு எந்த சமயமும் வேண்டா. மனிதனாக வாழ்வோம் என எண்ணுவோர்க்கு உதவ வேண்டும். மதமாற்றம் என்பது பண்பாட்டுச்சிதைவு. மதவெறி என்பது இன அழிவு என்பதை நாம் உணர வேண்டும். வள்ளலார் வழியில் மதமான பேய் நம்மையும் அரசையும் பிடிக்காதிருக்க வேண்டுவோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 11 Jan 2011 01:54:02 AM IST
Last Updated :
தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர். அருமனை வட்டார கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, அந்த விழா மேடையிலேயே கிறிஸ்தவ இயக்கங்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார். அதேபோல சென்னையில் ஆளும்கட்சியான தி.மு.க. சார்பு இயக்கம் ஒன்று ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் விழாவில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் விழா மேடையிலேயே, கிறிஸ்தவ இயக்கங்கள் முன்வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர். மேற்படி இரண்டு விழாக்களிலுமே கிறிஸ்தவ மக்கள் முன்வைத்த முக்கியமான கோரிக்கைகள் மூன்றாகும். பட்டியல் ஜாதியினரான அரிஜனங்களுக்கான, அதாவது இந்து தலித்துகளுக்கான இடஒதுக்கீடு சலுகைகள் தலித் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்பது ஒரு கோரிக்கை. இரண்டாவதாக, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமான உதவிகள், சலுகைகள் ஆகியவை ஜெருசலேம், பெத்லேகம் சுற்றுலா செல்லும் தமிழக கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மூன்றாவதாக பட்டா நிலங்களில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் (சர்ச்) கட்டிக்கொள்ள யாரும் தடை ஏற்படுத்தக் கூடாது என்பதாகும். இந்த மூன்று கோரிக்கைகளையும் தமிழகத்தின் பிரதானமான இரண்டு கட்சிகளும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்ததோடு கிறிஸ்துமஸ் விழாவின் பெருமைகள் மற்றும் கிறிஸ்தவ மதத்தின் பெருமைகள், கிறிஸ்தவ இயக்கங்களுடன் தங்களுக்கான நெருக்கம் ஆகியவை குறித்தும் சிலாகித்துப் பேசியுள்ளார்கள். யார் கிறிஸ்தவ மக்களுக்கு அதிகமான சலுகைகளை அறிவித்துள்ளனர் என்பதிலேயே இருவரும் கடுமையாகப் போட்டியிட்டுள்ளனர். இதேபோல, அனைத்து அரசியல் கட்சிகளும் கிறிஸ்துமஸ் விழாவை நேரடியாகக் கொண்டாடியுள்ளதோடு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளனர். கிறிஸ்துமஸ் விழாவில், கிறிஸ்தவ மத இயக்கங்களால் முன்வைக்கப்பட்டு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கோரிக்கைகள் அனைத்துமே பெரும்பான்மை இந்து தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இந்து மதத்தில் மட்டுமே தீண்டாமைக் கொடுமையும், ஜாதி ஏற்றத்தாழ்வுகளும் இருக்கிறது என்கிற காரணத்தால் மட்டுமே இந்து தலித் மக்களுக்குப் பட்டியல் ஜாதியினர் என்கிற அடிப்படையில் இடஒதுக்கீடு சலுகைகளை நமது அரசியல் சாசன சிற்பிகள் வழங்கினர். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்த இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் அம்பேத்கர், இந்து மதம் மற்றும் இந்து மதம் சார்ந்த சீக்கிய, பெüத்த, ஜைன மதங்களுக்கு உள்பட்ட பட்டியல் ஜாதியினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு சலுகைகள் வழங்கப்பட வேண்டுமென்றும், தலித் ஒருவர் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களுக்குச் சென்றுவிட்டால் அவர் பட்டியல் ஜாதியினருக்கான இடஒதுக்கீடு சலுகைகளை அனுபவிக்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். ஏனென்றால், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தங்கள் மதக் கோட்பாடுகளில் ஜாதி மற்றும் தீண்டாமை ஏற்றத்தாழ்வுகளுக்கு இடமில்லை என்று பிரகடனம் செய்து மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்து மதத்தில் தீண்டாமைக் கொடுமைகள், ஜாதி ஏற்றத்தாழ்வுகள் உள்ள காரணத்தாலேயே நாங்கள் இந்து மதத்தைவிட்டு வெளியேறிச் செல்கிறோம் என மதம் மாறுபவர்களும் சொல்கின்றனர். இந்நிலையில், ஒருவர் மதம் மாறிவிட்டால் அவனது ஜாதி அடையாளம் மறைகிறது. மதம் மாறிச் செல்வதனால் சில சலுகைகளையும், பலன்களையும் பெறுகின்றனர். ஆனால், ஆண்டாண்டு காலமாக மதம் மாறிச் செல்லாமல் இந்து மதத்திலேயே இருந்து போராடிக் கொண்டிருக்கும் தலித்துகளுக்கென்று உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு சலுகைகளை மதம் மாறிகளுக்குக் கொடுத்தால் உண்மையான தலித்துகள் தங்களுக்கான வாய்ப்புகளை இழந்து நிற்பார்கள் என்பதே நிதர்சனம். மதம் மாறிச் சென்று கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னேற்றம் கண்டவர்களோடு இன்றும் இந்து மதத்திலேயே நீடித்து இருக்கும் தலித்துகளால் போட்டிபோட முடியாது. இந்தக் கோரிக்கை மூலம் இந்து தலித்துகளின் சலுகைகளை அபகரிக்க மதம் மாறிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் வழியாகிறது. இது இந்து தலித் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என்பதால் இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானதாகும். எனவேதான், உச்ச நீதிமன்றம் பல நேரங்களில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இது அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதை மாற்றி அமைக்கத்தான் முதல்வர் கருணாநிதி தெருவில் இறங்கிப் போராடுவதாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா இதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளார். இதிலிருந்து இரண்டு அரசியல் கட்சிகளுமே இந்து தலித்துகளுக்குத் துரோகம் செய்வதற்குப் போட்டி போடுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. கிறிஸ்தவ மக்களின் ஓட்டுகளைப் பெற வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட வாக்குறுதிகளைத் துணிந்து வெளிப்படுத்துகின்றனர். கிறிஸ்தவ மதத் தலைவர்கள் கிறிஸ்தவ மதத்திலும் ஜாதிக் கொடுமைகள், தீண்டாமைகள் உண்டு என்பதை ஒப்புக்கொண்டு இந்தக் கோரிக்கையை முன்வைத்து அரசியல் கட்சிகளுக்கு நிர்பந்தங்களை ஏற்படுத்துகின்றனர். அனைவரும் கடவுளின் குழந்தைகள், ஏற்றத்தாழ்வுகள் கிடையாது என்று போதித்த ஏசுபிரான் பிறந்த நாளான, கிறிஸ்துமஸ் விழாவிலேயே ஏசுவின் கொள்கைகளை இன்னொருமுறை சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். இரண்டாவது, கோரிக்கையான இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரைக்கு வழங்கப்படும் சலுகைகளும், உதவிகளும் தமிழகத்தில் இருந்து ஜெருசலேம் செல்கிற கிறிஸ்தவ மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை முன்வைத்துள்ளனர். இதையும் அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஹஜ் யாத்திரை என்பது இஸ்லாமியர்களுக்கென அறிவிக்கப்பட்ட ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். ஹஜ் பயணத்தைப் புனிதப் பயணமாக உலகெங்கும் இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால், ஜெருசலேம், பெத்லேகம் ஆகியவற்றுக்கு சுற்றுலா செல்வது கிறிஸ்தவர்களின் புனிதக் கடமைகளில் ஒன்றானது அல்ல. ஒரு சுற்றுலா செல்வதைப் போலத்தான் ஜெருசலேம், பெத்லேகம் ஆகிய பகுதிகளுக்கு கிறிஸ்தவர்கள் சென்று வருகிறார்கள். ஆனாலும்கூட, கிறிஸ்தவ இயக்கங்கள் இப்படியொரு கோரிக்கையை முன்வைத்து அதையும் அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன என்பது நடுநிலையாளர்களுக்கு வேதனையளிக்கிறது. ஏற்கெனவே, கிறிஸ்தவ மதம் சார்ந்த சாமுவேல் ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக பதவி வகித்தபோது ஜெருசலேம், பெத்லேகம் செல்லும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களுக்கும் | 25 ஆயிரம் நிதியுதவி செய்துள்ளார். காசி யாத்திரை, கயிலாய யாத்திரை, ஜோதிர்லிங்க யாத்திரை, 108 திவ்யதேச யாத்திரை ஆகிய புனித யாத்திரைகளை மதக் கடமையாக மேற்கொள்ளும் இந்துக்களுக்கும் நிதிஉதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை இந்து இயக்கங்கள் பலமுறை முன்வைத்துள்ளன. ஹஜ் யாத்திரையுடன் இந்தப் பயணங்களை ஒப்பிடுவதோ, அதற்கு அளிப்பது போன்ற சலுகைகளைக் கோருவதோ அரசியல் லாபத்துக்குப் பயன்படுமே தவிர, நியாயமான கோரிக்கைகளாக இருக்காது. மூன்றாவதாக, பட்டா நிலத்தில் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலம் கட்டிக் கொள்ளலாம் அதற்கு யாரும் தடை ஏற்படுத்தக்கூடாது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீர் சர்ச்சுகளால் மதநல்லிணக்கம் சீர்குலைகிற காரணத்தால் மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு, மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரையின்படி புதிதாக மதவழிபாட்டுத் தலம் அமைக்க அரசு அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. தனக்குரிய பட்டா நிலம் என்ற காரணத்தால் அந்த இடத்தில் அதன் உரிமையாளர் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியாது. முறையான சட்டவிதிகளின்படிதான் வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி வழிபாட்டுத் தலங்களை அமைத்துக் கொள்வது பொது அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைத்துவிடும். ஆகையால் இந்த மூன்று கோரிக்கைகளுமே பெரும்பான்மை இந்து தமிழர்களுக்குப் பாதகம் ஏற்படுத்துபவை ஆகும். யார் எக்கேடு கெட்டால் என்ன? எங்களுக்கு ஓட்டுகள்தான் தேவை என்று எண்ணியே ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரண்டும் கிறிஸ்துமஸ் விழாவை அரசியல் விழாவாக மாற்றியுள்ளன. காமராஜின் சீடரான பெரியவர் தாணுலிங்க நாடார், அரசியல்வாதிகளுக்கு ஆறுமுகசாமிதான் தெய்வமென்று சொல்வார். ஏனென்றால், ஓட்டுப்பெட்டிகள் ஆறுமுகங்கள் கொண்டவையாக இருந்தன. எனவே கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் மீது அரசியல் கட்சிகளுக்கு ஆர்வமோ அக்கறையோ ஈடுபாடோ கிடையாது. கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் ஓட்டுகள் மீதே ஆர்வம் என்பது மட்டுமே உண்மை. இதை நடுநிலையான கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அண்டை மாநிலம் கேரளத்தின் முதல்வராக இருந்து இப்போது ராணுவ அமைச்சராக உள்ள ஏ.கே. அந்தோணி கேரள முதல்வராக இருந்தபோது, மராடு நகரத்தில் நிகழ்ந்த படுகொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து ஒரு முக்கியமான கருத்தை வெளிப்படுத்தினார். கேரளத்தில் சிறுபான்மை இன மக்களாகிய இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குத் தங்களது மத ஒற்றுமையைப் பயன்படுத்துகின்றனர். அரசியல் நிர்பந்தங்களை ஏற்படுத்தி காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர். இத்தகைய நிலை நீடித்தால் அது இந்தத் தேசத்துக்குப் பேராபத்தை ஏற்படுத்தும். சிறுபான்மை மதத்தினரின் இத்தகைய போக்கு மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் என்ற உண்மையைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தினார். அந்தோணியின் இந்தக் கருத்தை இஸ்லாமிய, கிறிஸ்தவ மத இயக்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தங்களது மத விழாக்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டிய அவசியமென்ன? கோரிக்கைளை எழுப்புவதற்கு மத விழா மேடைகள் ஏன் பயன்படுத்தப்பட வேண்டும்? இவையெல்லாம் புனிதமான மதவிழாக்களின் மகத்துவத்தைச் சீர்குலைக்கும் செயல் என்பதை ஏனோ இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். மத விழாக்களை அரசியல் ஆக்குவது மத நிறுவனங்களுக்கும் நல்லதல்ல; அரசியல் கட்சிகளுக்கும் நல்லதல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக