இன்றைய வளர்ச்சிக்காக நாளைய வாழ்வைப் பலியிட வேண்டா.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பெய்ஜிங்,ஜன.12: உலகமே பார்த்து வியக்கும் சீன நாட்டில் தொழில் வளர்ச்சியின் வேகம் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. அதற்கு அந்த நாடு கொடுக்கும் விலையை, நினைத்தாலே அச்சமாக இருக்கிறது. ஆண்டுக்கு 300 கோடி டன் நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரித்து தன்னுடைய ஆலைகளுக்கு இடைவிடாமல் அளித்துக் கொண்டிருக்கும் சீனாவுக்குப் பரிசாக கிடைப்பது அமில மழைதான். "சீனா டெய்லி' என்ற அரசு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சுற்றுச்சூழல் கண்காணிப்புப் பிரிவு தலைமைப் பொறியாளர் ஷுவாங் மஷான் இதைக் கவலையுடன் தெரிவிக்கிறார். இந்த அமில மழையால் மக்களுக்கு தோல் வியாதி,சுவாசக் கோளாறு, இதயம், நுரையீரல்களில் பாதிப்பு, ஒவ்வாமை போன்றவை ஏற்படுகின்றன. அத்துடன் மக்களுடைய சாப்பாடு, தூக்கம், ஓய்வு, மன அமைதி ஆகியவையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்படைந்து வருகிறது. இந்த அமில மழையால் சீனத்தின் பழம்பெரும் புராதனச் சின்னங்களும் சுற்றுலாத்தலங்களும் பொலிவிழந்து வருகின்றன. அந்த நாள் கட்டடங்கள் நிறம் மங்கி பழுப்பேறி வலுவிழந்து வருகின்றன. பயிர், பச்சைகளும் இதனால் பாதிப்பு அடைந்து வருகிறது. நிலக்கரியை எரிப்பதால் வெளியாகும் ஆக்ûஸடுகள் கந்தக வாயுவாகவும் நைட்ரிக் வாயுவாகவும் பிரிந்து நீர்த்துளிகளுடன் சேர்ந்து பிறகு அமில மழையாகப் பெய்கிறது. மழையில் நனைந்தால் உடலில் நமைச்சல், எரிச்சல் ஏற்படுவதிலிருந்து இதை மக்கள் தெரிந்துகொள்கின்றனர். புதிதாகக் கட்டிய கட்டடங்களும், பழைய கட்டடங்களும் வண்ணம் மங்கி பழுப்பேறி வேறு நிறத்துக்கு மாறத் தொடங்கியுள்ளன. உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை: சீன நாட்டின் தென் கிழக்கில் பூஜியான் மாகாணத்தைத்தான் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் என்று கூறுவார்கள். இப்போது அந்த இடம்தான் உள்ளூர்வாசிகளுக்கே எமபட்டணமாக மாறிவருகிறது. இங்கு லெஷான் என்ற இடத்தில் 71 மீட்டர் உயரமும் 28 மீட்டர் அகலமும் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலை இருக்கிறது. இதைச் செதுக்கி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அமில மழையால் இந்தச் சிலையின் மூக்கு கறுத்து வருகிறது. அதன் சுருள் முடி கருகி உதிர்ந்து வருகிறது. அதன் செந்நிற மேனி இப்போது கருகிய கரிக்கட்டையாக மாறிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்தே இந்த மழை ஏற்படுத்திவரும் பாதிப்புகளை ஓரளவுக்கு அறியலாம். ஐரோப்பா, வட அமெரிக்கா: அமில மழை என்பது ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும்தான் அதிகம். அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்து வருவது சீனாதான். அமில மழை ஏன்? கனரக பொறியியல் தொழிற்சாலைகள், பெட்ரோ - ரசாயனத் தொழில்கள், உலோக உருக்குத் தொழிற்சாலைகள், உலோகக் கருவிகள் தயாரிப்பு ஆலைகள் ஆகியவை இந்தப் பகுதியில் குவிந்துள்ளன. அவற்றிலிருந்து வெளியாகும் நச்சுப்புகைதான் வான மண்டலத்தில் சுற்றிச்சுற்றி வருகிறது. அது தண்ணீர் திவலைகளுடன் சேர்ந்து அமில மழையாகப் பெய்துவிடுகிறது. யாங்ஸி ஆறு, முத்து ஆறு ஆகியவற்றின் கரையோரங்களிலும் இப்போதெல்லாம் பனி மூட்டம் அதிகம் தென்படுகிறது. அந்த இரு ஆறுகளும் இப்போது அமில மழை காரணமாக அமிலக் கலப்போடு வருகிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்தாலும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவித்து ஏற்றுமதி செய்து அன்னியச் செலாவணி ஈட்ட வேண்டும் என்ற லட்சியமே அனைவரிடமும் இருப்பதால் இத்தகைய ஆபத்தான தொழில் பிரிவுகளால் ஆபத்தான சூழல் பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக