சரியான கருத்து. ஆனால் கல்விப்புரட்சி என்பது தமிழ்வழிக்கல்வி அமையவேண்டும் என்பதாக இருக்க வேண்டும்.மது ஒழிப்பு குறித்தும் கலை பண்பாட்டுப்புரட்சி குறித்தும் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சாதிக்கொடியை எப்பொழுதும் ஏந்தி இருப்பதால்தான் புரட்சிக் குரல்கள் எடுபட வில்லை. புரட்சி ஏற்படும் வரையாவது சாதி மறுப்புத் தமிழ், தமிழர் கட்சியாக நடந்து கொண்டால் நாடு நலம் பெறும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன. 14: தமிழகம் வளம் பெற ஐந்து விதமான புரட்சிகள் தேவை என்று பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி சட்டப்பேரவையில் வியாழக்கிழமை வலியுறுத்தினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அவர் பேசியது: தமிழகத்தில் வெள்ள நிவாரணத்தை ஆய்வு செய்ய மத்திய அரசு தாமதமாகத்தான் குழுவை அனுப்பியது. அந்தக் குழு தந்த அறிக்கையின் பேரில் இன்னும் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதியை அறிவிக்கவில்லை. தமிழகம் கேட்டுள்ள வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்ற நடைமுறை வந்தால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் நுழைய முடியாத நிலை ஏற்படும். எனவே அதைத் தடுக்க அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு போராட வேண்டும். அதைத் தடுப்பதற்கு, இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்ற தீவிர போராட்டம் நடத்த தயாராக வேண்டும். விலைவாசி உயர்வைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தாலும், மத்திய அரசும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட வெங்காயம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்த நிலை நீடித்தால் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது எட்டாக்கனியாகிவிடும். விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வால், கட்டடத் தொழிலாளர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டுமானப் பொருள் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இப்போது ஐந்து முக்கிய புரட்சிகள் தேவைப்படுகின்றன. ஏழை, பணக்காரர் என எல்லோருக்கும் கட்டணமில்லா கட்டாயக் கல்வி தரும் கல்விப் புரட்சி முதலாவது தேவையாகும். மதுப் பழக்கம்தான் எல்லா குற்றங்களுக்கும் தாயைப் போன்றது. எனவே மது ஒழிப்பு புரட்சி தேவைப்படுகிறது. உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க வேளாண் புரட்சி தேவையாகிறது. பாசனத்துக்கு இப்போதுள்ளதைவிட கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அதன் மூலம் பாசனப் புரட்சி ஏற்பட வேண்டும். நாகரிகம், கலாசாரம், பண்பாடு காப்பதற்கு கலை, பண்பாடு புரட்சி ஏற்பட வேண்டும். இந்த ஐவகைப் புரட்சிகள் ஏற்பட்டால் தமிழகம் செழிக்கும். காவிரிப் பிரச்னை: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னைகளைத் தீர்க்க இவற்றை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பக்கத்து நாடுகளுடன் நதி நீர்ப் பிரச்னைகளைத் தீர்க்க முடிகிறது. ஆனால் பக்கத்து மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னையை மத்திய அரசு தீர்க்கவில்லை. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்கு இடையிலான பக்ராநங்கல் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு நீர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது. ஆனால் காவிரிக்கு அதுபோன்ற ஏற்பாடு இல்லை. கிருஷ்ணராஜ சாகர் அணை நிர்வாகத்தை மத்திய அரசு முழுமையாக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, காவிரி மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி பிரச்னையைத் தீர்க்க வேண்டும். தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் பிறப்பால் தலித்துகள். வழிபடும் முறைதான் மாறியுள்ளது. எனவே இடஒதுக்கீடு தரப்பட வேண்டும். தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களுக்கான ரயில் நிலையமாக தாம்பரத்தை மாற்றினால் சென்னையில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர். எனவே ராயபுரத்தை மூன்றாவது முனையமாக மாற்றுவது பயனுள்ளதாக இருக்கும். அனைத்துத் துறைகளிலும் 15 ஆண்டுகள் வரை தாற்காலிக அடிப்படையில் வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூரில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும் என ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை இந்த ஆண்டில் நிறைவேற்றித் தர வேண்டும் என்றார் ஜி.கே. மணி.
கருத்துகள்


By Atcheeswaran
1/15/2011 9:48:00 PM
1/15/2011 9:48:00 PM


By மோகன்ராஜ் ஜெபமணி
1/15/2011 12:35:00 PM
1/15/2011 12:35:00 PM


By பி.டி.முருகன் திருச்சி
1/15/2011 9:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
1/15/2011 9:30:00 AM