நல்ல பரிசு!கடமை பொங்கப் பணியாற்றியமைக்கான பொங்கற் பரிசு! சட்டம் என்பது யாவர்க்கும் சமம் என அறியாமையால் நினைத்தமைக்கான புத்தாண்டுப் பரிசு! நேர்மையான பணிக்கு வழங்கப் பெற்ற திருவள்ளுவர் திருநாள் பரிசு! மக்கள் தேர்தலில் பரிசு வழங்கினால் என்ன ஆகும்?
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
மதுரை, ஜன.14: மதுரை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் சுமார் 1 கோடி மதிப்புள்ள கடத்தல் ரேஷன் பொருள்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்த மாவட்ட அதிகாரி, அரசியல் பின்னணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்ட வழங்கல் அலுவலராக கடந்த ஓராண்டுக்குமுன் எஸ்.முருகையா பொறுப்பேற்றார். அப்போதுமுதல் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்களைக் கடத்துவோர் மீது தீவிர நடவடிக்கை எடுத்தார். அவரது உத்தரவின்பேரில், மதுரையில் உள்ள ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கு நெருக்கமான அரிசி ஆலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி, மூட்டை மூட்டையாகப் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, மதுரை அனுப்பானடி, கீரைத்துறை, விராட்டிபத்து உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த அரிசி ஆலைகளில் அவர் அதிரடிச் சோதனை நடத்தினார். கடந்தாண்டு ஜூலையில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான 39 டன் நெல் மூட்டைகள், ஒரு அரிசி ஆலையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அலங்காநல்லூர் பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக போலி பெட்ரோல் பங்க் இயங்கி வந்ததையும் எஸ். முருகையா தலைமையில் மேற்கொண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த அரசியல் எதிர்ப்புக்கிடையே இச்சோதனையில் வழக்குப் பதிவு செய்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள டீசல், மண்ணெண்ணெய், லாரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதும் மதுரை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது பணிக்காலமான கடந்த ஓராண்டு, 5 மாதங்களில் உணவுப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸôர் உதவியுடன் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்கள், 250 கடத்தல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சுமார் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையெல்லாம்விட ரேஷன் கார்டுகள் தணிக்கைப் பணியில் தீவிர கவனம் செலுத்தி மதுரை மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் போலி ரேஷன் கார்டுகளை ரத்து செய்ததும் ஆளும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில்தான் ஜனவரி 12-ம் தேதி மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ்.முருகையாவுக்கு, உசிலம்பட்டி கோட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு வருவதற்கு முதல்நாள் (ஜனவரி 11) மதுரையில் ஒரு சம்பவம். மதுரை திருநகர் 4-வது ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து முருகையா தலைமையில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று 60 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடை விற்பனையாளர் உள்பட 4 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் நடவடிக்கையைத் தவிர்த்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கும்படி மதுரை மாநகர் முக்கிய ஆளும் கட்சிப் பிரமுகர் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் நடவடிக்கை தொடர்ந்ததால் எஸ்.முருகையா மீது ஆளும் கட்சியனருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உசிலம்பட்டி பகுதியில் ஆளும் கட்சியினருக்கு அதிகமான எண்ணிக்கையில் கல் குவாரிகள் உள்ளன. இவர் இப்பகுதிக்கு கோட்டாட்சியராகப் பொறுப்பேற்றால் "ஒத்துப்போகமாட்டார்' என ஆளும் கட்சித் தரப்பினர் மேல் மட்டத்துக்கு "பிரஷர்' கொடுத்ததால் ஜனவரி 13-ம் தேதி உசிலம்பட்டி கோட்டாட்சியராக மாற்றம் செய்யப்பட்ட அரசு உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், எஸ்.முருகையாவுக்கு கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி மாவட்டங்களில் ஏதாவது ஒரு துறைக்குப் பணிமாற்றம் கிடைக்கலாம் என விவரம் அறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேர்மையாகப் பணியாற்றிய ஒரு அதிகாரி மீது ஆளும்கட்சி பிரமுகர்களால் பாய்ந்துள்ள இந்த நடவடிக்கையால் மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக