நல்ல கட்டுரை. ஆனால், நம்நாட்டில் கட்சித்தலைமைக்குக் கொத்தடிமையாக இருக்கும் தொண்டர்கள்தாம் எல்லாக் கட்சிகளிலும் உள்ளனர். இப் போக்கு மாறினால்தான் நாட்டில் உண்மையான மக்களாட்சி நிலவும். தலைமைக்கு ஏற்றவாறு ஊழலைத் துதிபாடும் தொண்டர்கள்மாறி தூய அரசியல் நிலவி நாட்டிலும் தூய்மைக்கு வழி பிறக்கும். அன்பன இலக்குவனார் திருவள்ளுவன்
அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடும் தங்களது வேட்பாளர்களை ஜனநாயக முறையில் வாக்கெடுப்பு நடத்தித் தேர்வு செய்கின்றன. ஆனால், நம் நாட்டிலோ பொதுத்தேர்தலையே நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்துவதற்காக அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் பலமுறை ஆலோசனை நடத்த வேண்டியிருக்கிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. தேசிய, மாநிலக் கட்சிகளில் சுமார் 50 மட்டுமே பிரதானமானவைகளாக உள்ளன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் உள்கட்சித் தேர்தல்களை நடத்தி, ஜனநாயக முறையில் நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், இதனை பின்பற்றும் கட்சிகளை விரல்விட்டு எண்ணி விடலாம். கண்துடைப்புக்காகக் கட்சித் தேர்தல்களை நடத்தும் அரசியல் கட்சிகள்தான் ஏராளம். தொண்டர்களிடம் செல்வாக்குப் பெற்றவர்கள் நிர்வாகிகளாக வருவதைவிட, கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளிடம் ஆசி பெற்றவர்கள்தான் பொறுப்புகளுக்கு வருகின்றனர். வாரிசுகள், அரசியல் தலைவர்களின் உறவினர்கள், நண்பர்கள், அபிமானிகள் உள்ளிட்டோர் அரசியல் கட்சிகளின் அதிகார மையங்களாகி வருகின்றனர். இவர்கள் தங்கள் பகுதிகளில் தங்களுக்கு எதிராகச் செயல்படுவோரை ஓரம்கட்டிவிட்டு, உள்ளூர் நிர்வாகிகள் முதல் முன்னணி நிர்வாகிகள் வரையிலான பொறுப்புகளுக்கு தங்களது விசுவாசிகளை அமர வைத்து கட்சிகளில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்துகின்றனர். கட்சித் தேர்தலுக்கு அவர்கள் சார்ந்த நிர்வாகிகளையே தேர்தல் அலுவலர்களாக நியமிக்கின்றனர். இதனால், தேர்தலில் போட்டியிட மனுச் செய்தவர்களுடன் சமரசம் பேசிவிடுவதால், பண பலம், படை பலம், முக்கிய பிரமுகர்களின் ஆசி பெற்றவர்கள் கட்சிப் பொறுப்புகளுக்கு எளிதாக வந்துவிடுகின்றனர். கட்சி சார்பில் நடத்தும் பத்திரிகைக்கு சந்தா பணம் திரட்டிக் கொடுப்போர், அதிக உறுப்பினர்களுக்குப் பணம் கட்டுவோர், கட்சிக்கு நிதி அளிப்போர், அரசியல் தலைவர்கள் அங்கம் வகிக்கும் கல்வி அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்போர், முக்கியப் பிரமுகர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்வோர் என்று ஆதாயம் தருவோருக்கும் சில கட்சிகளில் உயர் பதவிகள் தரப்படுவது உண்டு. கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்குக் கட்டணத்துடன் மனுக்களைப் பெற்று, பொறுப்புகளில் நியமனம் செய்யும் அரசியல் தலைவர்களும் உள்ளனர். உள்கட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த அரசியல் கட்சித் தலைவர்கள் விரும்புவதில்லை. உயர்மட்ட நிர்வாகிகளுக்கே உள்ளாட்சி முதல் சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல் வரை வாய்ப்புத் தரப்படும் நிலையுள்ளதால், தங்கள் பேச்சுக்கு மறு பேச்சுப் பேசாதவர்களை நிர்வாகிகளாக அமர வைக்க அவர்கள் விரும்புகின்றனர். ஊழல்வாதிகள், குற்றப் பின்னணி உடையவர்கள் அரசு நிர்வாகங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு வருவதும் அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சிகளில் இவர்கள் பெற்றுள்ள முக்கியத்துவமே, அரசு நிர்வாகத்திலும் அவர்கள் அங்கம் வகிப்பதை சாத்தியமாக்குகிறது. எனவே, அரசியல் கட்சிகளில் நேர்மையாக உள்ளவர்களே பொறுப்புகளுக்கு வர வேண்டும். இதற்காக உள்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்தால் மட்டும் போதாது. ஓய்வு பெற்ற தேர்தல் அதிகாரிகள், நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து உள்கட்சித் தேர்தல்களை முறையாக நடத்தவும், கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்துடன், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், வாக்குரிமை உள்ள நிர்வாகிகள் நேர்மையாக உள்ளவர்களையே கட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வர வேண்டும். ஜனநாயகம் பற்றி மேடையில் முழங்கினால் போதாது. முதலில், அது கட்சிகளுக்குள்ளேயே மலரட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக