யாருடன் கூட்டணி வைத்தாலும் அதன் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது எனப் பேசலாம் எனில் பொருந்தாது. பெரும்பாலும் தி.மு.க. உடன் கூட்டணி வைக்க உள்ளது போல் இவரது பேச்சும் கலைஞரின்பேச்சும் உள்ளன. பா.ம.க. இதழிலும் தி.மு.க. ஆதரவுக் கட்டுரைகள் வருகின்றன. அப்படியானால் ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்த காங். ஆட்சிக்கு வர வேண்டா என்ற எண்ணம் தோன்றவில்லையா? முன்பு சொன்னதுபோல் எந்தக் கட்சி மிகுதியான இடங்களை ஒதுக்குகின்றதோ அந்தக் கட்சியுடன்தான் கூட்டணி என்று சொல்வதுதான் உண்மையாக இருக்கும். ஆனால், ஊடகங்கள் வழி நல்ல தமிழ் வளர்க்கும் பா.ம.க. தனி அணி அமைப்பது - வெற்றி வாய்ப்பை இழக்கச் செய்தாலும் அடுத்து முன்னேற்றத்தை அளிக்கும என்பதால் - நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
திண்டிவனம், ஜன. 12: வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பாமக முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாகவும்,அதன் அடிப்படையிலேயே கட்சியின் தேர்தல் கூட்டணி அமையுமென்றும் அக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் புதன்கிழமை தெரிவித்தார். திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கத்தில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த அவர் கூறியது: தமிழகத்தை பொறுத்தவரை நகரங்களை விட கிராமப் பகுதிகளில் வறுமை அதிகரித்துக் கொண்டு வருகிறது. நகர்ப்புற வறுமை குறைந்த அளவுக்கு கிராமப் புற வறுமை குறையவில்லை என அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சிறு விவசாயிகளுக்கு அரசு ஆண்டுக்கு ஒரு முறை 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயப் பணிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி இருப்பதாக துணை முதல்வர் ஸ்டாலின், பேரவையில் அறிவித்திருப்பதை பாமக வரவேற்கிறது. வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 100 நாளுக்கு வேலை அளிக்கப்பட்டு அதில் ஒரு நாளுக்கு 100 ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகிறது. அதைபோலவே இந்த புதிய திட்டத்தில் சம்பளத்தில் 50 ரூபாய் அரசும், ஐம்பது ரூபாய் உழவர்களும் அளித்தால் ஆண்டுக்கு 200 நாளுக்கு வேளாண்மைப் பணிகளுக்கு ஆள்களை பயன்படுத்த முடியும். இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். தற்போது 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டிருக்கிறது. இதை 16 வயதாக குறைக்கலாம் என்று தேர்தல் ஆணையர் குரேஷி அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இளைஞர்கள் அரசியல், பொது வாழ்க்கை, பொதுச் சேவையில் பங்கேற்க வேண்டும் என்பது அவசியம். ஆனால் வாக்களிக்கும் வயதை 16 வயதாக குறைப்பது சரியல்ல. தேர்தலுக்கு பிறகு நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் முன்பு மகளிர் சங்கத்தின் சார்பில் கடைகளை பூட்டும் போராட்டம் நடைபெறும். இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காணும் பேச்சுவார்த்தை வெற்றிபெற உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் உதவ வேண்டும் என்றார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலர் வடிவேல்ராவணன், மாநில துணைத் தலைவர் என்.எம்.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக