நன்றாகத்தான் எழுதியுள்ளார். இராமக்கிருட்டிணா மடங்கள் பலவும் கல்வி உதவி முதலான பல நல்லத் திட்டங்களையும் செயற்படுத்தத்தான் செய்கின்றன. இருப்பினும் சாதி வெறியில் உள்ளனர். சான்றாகச் சென்னை மயிலாப்பூரில் உள்ள மடத்தில் புத்தக வங்கி மூலம் பொறியியல் மாணாக்கர்களுக்குப் பாடநூல்கள் தருவதாகக் கேள்விப்பட்டுச் செல்பவர்களுக்கு ஏமாற்றம். அத்திட்டம் குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டும்தான். அதை மூடி மறைக்க ஏதேதோ சொல்லித் தட்டிக் கழிக்கின்றனர். ஆரியத்தை எதிர்த்த விவேகானந்தர் புகழ் பாடுநர், ஆரியத்தைப் பரப்பவே தமிழ் மக்கள் பணத்தைச் செலவிடலாமா?
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 12 Jan 2011 01:30:11 AM IST
"சுவாமி விவேகானந்தரைப் பற்றி எத்தனை எத்தனை எடுத்துரைத்தாலும் எனக்கு வாய் நோவதில்லை. நா தளர்வதில்லை. இரவுபகலாக எண்ணற்ற நாள்கள் எழுதிக்கொண்டே போனாலும் என் கை சலிப்பதில்லை. அவரை நினைக்கிற நேரமெல்லாம் எனக்குப் புதிது புதிதாக ஊக்கமும் உற்சாகமும் உண்டாவதோடு, எங்கிருந்தோ எனக்கே தெரியாமல் ஒரு சக்தியை அடைகிறேன். மனம் பூரித்துப் புளகிக்கிறது.÷எனக்கு அறிவுப் பாலூட்டும் அன்னையாய், எனது கொள்கைக்கெல்லாம் ஆதாரமாய், என்பின்புறத்தே நின்றுகொண்டு, எனது ஜீவிதத்துக்கு ஒரு தூண்டுகோலாய் என்றும் அவர் இருந்து வருகிறார். அவர் சக்தி இருந்து வருகிறது; விவேகானந்தரின் கடிதங்களில் தேசாபிமானம் ததும்புகிறது; பாரத உணர்ச்சி பொங்குகிறது; இந்திய ரத்தம் துடிக்கிறது நமது தாய்நாட்டின் ஜெயகோஷம் முழங்குகிறது'' என்று உணர்ச்சி பொங்கத் தமது நூல்களுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார், தமிழகத்தின் விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான சுப்பிரமணிய சிவா. ÷பாரதியார் தனது இந்தியா இதழில் எழுதிய ஒரு தலையங்கத்தில் பரம ஞானியாகிய ஸ்ரீகிருஷ்ணபகவான் மஹாபாரதப் போரிலே பாண்டவர்களுக்கு வழிகாட்டியது போலவும், சர்வ பந்தங்களையும் துறந்த ராமதாஸ்முனிவர், மகாராஜா சிவாஜிக்கு ராஜ தந்திரங்களைச் சொல்லி வெற்றி கொடுத்தது போலவும், தற்காலத்தில் அநேகத் துறவிகள் நமது சுதேசிய முயற்சியிலேயே சேர்ந்திருக்கிறார்கள். காலஞ்சென்ற விவேகானந்த பரமஹம்ச மூர்த்தியே இந்த சுயாதீனக் கிளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும் என்று எழுதியுள்ளார். 1893-ல் சென்னை திருவல்லிக்கேணியில் பாலாஜிராவ் என்ற தனது சீடரின் இல்லத்தில் விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவு குறித்து பாலாஜிராவின் புதல்வர் ரகுநாதராவ் நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மற்றும் பல வழிகளிலும் இந்தியா சீர்குலைந்து போய் இருந்தாலும், அந்நியர்களையும் அந்நிய ஆட்சியையும் எதிர்த்துக் கிளர்ந்தெழக் காலம் கடந்து விடவில்லை. குறுகிய மனப்போக்குகளும் பொறாமை உணர்வுகளும், வகுப்பு வாதமும் இன்று நாட்டைப் பிளவுபடுத்தியிருந்தாலும், இந்தியா விரைவில் புத்தெழுச்சி பெற்று விடுதலை பெறப்போகிறது என்று உணர்ச்சிகரமாக தனது உரத்த குரலில் கம்பீரமாக விவேகானந்தர் முழங்கியதாக ரகுநாதராவ் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு ஆழமான அரசியல் கருத்தை வெளியிட்டபோது விவேகானந்தருக்கு வயது 30 மட்டுமே. சாதாரணப் பொருளில் அவரை அரசியல்வாதி என்று சொல்ல முடியாவிட்டாலும் தற்கால தேசிய இயக்கத்தின் சாரதிகளில் ஒருவராக அவரை நான் கருதுகிறேன். மாபெரும் அந்த இயக்கத்தில் தீவிரமாய்ப் பங்கேற்ற பலரும் அவரால் தூண்டப் பெற்றவர்களே. அவரது செல்வாக்கு இன்றைய பாரதத்தை நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கவர்ந்துள்ளது என்று நேதாஜி கூறியுள்ளார். நேதாஜி முழுக்க முழுக்க விவேகானந்தரின் தாக்கத்தால் உருவானவர் என்று வரலாற்று ஆய்வாளர்கள் அனைவருமே ஒருமுகமாகக் குறிப்பிடுகின்றனர். இன்னும் ஒரு படி மேலேபோய் நேதாஜி முழுமையாகத் தன்னை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தால் அவர் விவேகானந்தரைப்போல் இருந்திருப்பார். விவேகானந்தர் நேரடி அரசியலில் களமிறங்கியிருந்தால் அவர் நேதாஜியைப்போல் விளங்கியிருப்பார் என்றும் சில ஆய்வறிஞர்கள் வரையறுத்துக் கூறுகின்றனர். ஈசன் அருளாலும், நம்மவர் அதிர்ஷ்டத்தாலும் மற்றெல்லாப் பற்றையும் துறந்த அவர், நாட்டுப்பற்றை மட்டிலும் நெடுங்காலம் கொண்டிருந்தார். ஆனால், பரம சன்னியாசியைத்தவிர மற்றவர்கள் அனைவரும் பூமிப்பற்று இல்லாத விஷயத்தில் பிணங்களுக்குச் சமமானவர்கள் என்பதை இம் மகரிஷி மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார் என்று பாரதியார், விவேகானந்தரின் நாட்டுப்பற்றை வியந்து பாராட்டுகிறார். வீரர்களாயிருங்கள்; பூமியை அனுபவியுங்கள்; கண்டவர்களெல்லாம் காலால் மிதித்தும், காறியுமிழ்ந்தும் அவமானப்படுத்துகிற இந்தப் பேடி வாழ்க்கையை எத்தனை காலம் வாழப் போகிறீர்கள்? இதுவும் ஒரு வாழ்க்கையா? என்று மகா ஆத்திரத்துடன் இந்தியர்களிடம் விவேகானந்தர் எழுப்பிய கேள்வியைப் பாரதியார் தனது கட்டுரை மூலம் நமக்கு நினைவுபடுத்துகிறார். விவேகானந்தரின் வரலாற்றை ஆய்வு செய்வதில் ஒரு வேள்வியே மேற்கொண்ட மேலைநாட்டு வரலாற்று அறிஞர் ரோமன் ரோலண்ட், இந்திய விடுதலைப் போராட்டத்தில் விவேகானந்தரின் தாக்கத்தையும் ஆய்வுசெய்து நீறு பூத்த நெருப்பாய் இருந்த தேசிய இயக்கத்தை விவேகானந்தர் ஊதிவிட்டது, தீக் கொழுந்துகளுடன் எரியத் தொடங்கி அவரது மறைவுக்கு மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1905-ல் வீறுடன் வெடித்தெழுந்தது என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார். 1905 வங்கப் பிரிவினையும் அதன்பொருட்டு எழுந்த மாபெரும் ஆங்கிலேயச் சூழ்ச்சிக்கு எதிரான மக்கள் எழுச்சியும் தான் இந்தியவிடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. இப்போராட்டத்தையொட்டித்தான் சுதேசி இயக்கமும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்பெற்ற திலகர், விபின் சந்திரபாலர், லாலா லஜபதிராய் ஆகிய மூவரிடத்திலும், இதேபோன்று தமிழகத்தின் தொடக்ககால முப்பெரும் போராளிகளாக விளங்கிய வ.உ.சி., பாரதியார், சுப்பிரமணிய சிவா ஆகிய மூவரிடத்திலும் விவேகானந்தரின் தாக்கத்தை வெகுவாக உணர முடிகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடர்கள் விவேகானந்தர் தொடங்கி மொத்தம் பதினாறு பேர். அவர்களுள் ஒருவரான இராமகிருஷ்ணானந்தரை, சுவாமி விவேகானந்தர் சென்னையில் இராமகிருஷ்ண மடத்தை நிறுவ 1897-ல் அனுப்பிவைத்தார். இந்த இராமகிருஷ்ணானந்தரைத்தான் பின்னொரு சமயம் வ.உ.சி. சென்னையில் சந்தித்துள்ளார். இவரைச் சந்தித்து உரையாடிய பின்னர் கிடைக்கப்பெற்ற புதிய வெளிச்சத்தில்தான் தனது அரசியல் செயல்பாடுகள் விரிவடைந்ததாக வ.உ.சி.யே தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். தனது சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதியுள்ள வ.உ.சி. இராமகிருஷ்ணானந்தரைச் சந்தித்தது பற்றிக் கூறுகையில் - ""சுதேசியம் ஒன்றே சுகம் பல அளிக்கும். இதே என் கடைப்பிடி என்றனன், அவனுரை வித்தென விழுந்தது மெல்லிய என்னுளம் சித்தம் அதனைச் சிதையாது வைத்தது''-என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பிறிதொரு சமயம், இராமகிருஷ்ணர் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு முக்கிய பிரமுகர்கள் ஜப்பான் செல்கிறபோது, தூத்துக்குடியில் அவர்களை வரவேற்று விருந்தளித்து அவர்களிடம் நெடுநேரம் உரையாடிப் பயனடைந்ததாக வ.உ.சி. கூறியுள்ளார். இராமகிருஷ்ண மடத்தின் முதல் தலைவராக விளங்கியவர் பிரம்மானந்தர். அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தரைத் தொடர்ந்து பத்தாண்டுகள் தங்கியிருந்து அங்கு சொற்பொழிவுகள் மூலமாக அமைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர் சுவாமி அபேதானந்தர். இவர்கள் இருவரையும் சந்தித்து உரையாடி மேலும் தேசம் குறித்த புதிய சிந்தனைகளுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டதாக வ.உ.சி. எழுதியுள்ளார். இதேபோன்று பாரதியும் 1908-ல் வெளியிட்ட தனது முதல் நூலான "ஸ்வதேச கீதங்கள்' எனும் நூலில் ஸமர்ப்பணம் எனும் தலைப்பில் ... "எனக்கும் பாரததேவியின் சம்பூர்ணரூபத்தைக் காட்டி, ஸ்வதேசபக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலை ஸமர்ப்பிக்கிறேன்' என்று அச்சிட்டுள்ளார். பாரதி தனது குருவாக விவேகானந்தரின் தலைமைச்சீடர்களில் ஒருவராக விளங்கிய சகோதரி நிவேதிதாவை ஏற்றுப் போற்றுகிறார். நிவேதிதாவுக்கே தனது முதல் நூலை பாரதி சமர்ப்பித்துள்ளார் என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும். விவேகானந்தரைப் பற்றியும் சகோதரி நிவேதிதா குறித்தும் தனது "இந்தியா' இதழில் பலமுறை விரிவாக எழுதியுள்ளார் பாரதியார். தேசபக்தர்கள் இருவகைப்படுவர்; ஒருவகை, அரங்கத்திலாடுவது. மற்றொருவகை திரைக்குப் பின்னேயிருந்து புகழறியாமல் பாடுபடுவது. இவற்றுள் முன்னதிலும், பின்னது சிறந்ததாகக் கூறலாமேயல்லாது குறைந்ததாகக் கருதத்தக்கதன்று. காலஞ்சென்ற ஸ்ரீஅழகிய சிங்கப்பெருமாள் பின் வகுப்பைச் சேர்ந்திருந்தவர் என்று 1909-ம் ஆண்டு அழகிய சிங்கப்பெருமாளின் மறைவையொட்டி இந்தியா இதழில் எழுதிய இரங்கல் கட்டுரையில் குறிப்பிடுகிறார் பாரதியார். நமது தேசபக்தி முயற்சிக்குத் தாய் முயற்சியாகிய ஸ்வாமி விவேகானந்தரது வேதாந்தப் பிரசாரத்தில் அழகிய சிங்கப்பெருமாள் அளவிளந்த சிரத்தைப் பாராட்டியவர் என்றும் பாரதியார் எழுதியுள்ளார். விவேகானந்தர் எழுதிய கடிதங்களில் பெரும் எண்ணிக்கையிலானவை அழகிய சிங்கப்பெருமாளுக்கு எழுதியவையேயாகும். விவேகானந்தர் தனக்கு மிகவும் நெருக்கமானவராக விளங்கிய அழகிய சிங்கப்பெருமாளைத் தனது சென்னைச் செயலர் என்று அவரே குறிப்பிடும் அளவுக்கு அணுக்கமாகத் திகழ்ந்தவர். பாரதியாரால் அழகிய சிங்கப்பெருமாள் குறித்துச் சொல்லப்பட்ட கருத்து அவரின் குருவாகத் திகழும் விவேகானந்தருக்கும் முழுமையாகப் பொருந்தும். ஹிந்து, சுதேசமித்திரன் போன்ற இதழ்களைத் தொடங்கி தேசபக்தக் கருத்துகளைப் பரப்பிய, காங்கிரஸ் கட்சியின் தொடக்க மாநாட்டிலேயே தமிழகத்தின் சார்பில் பங்கேற்று முதல் தீர்மானத்தை முன்மொழிந்த ஜி.சுப்பிரமணிய ஐயர் விவேகானந்தரின் சொற்பொழிவுகளை சென்னையில் நேரில் கேட்டுப் பரவசமடைந்தவர். எதிர்கால இந்தியா என்ற தலைப்பில் வீரவுரை நிகழ்த்திய விவேகானந்தர் அடுத்து, ""ஐம்பது ஆண்டுகளுக்கு இந்த மகத்தான தாய்நாட்டைப் பற்றியே நாம் நினைக்க வேண்டும். அதுவொன்றே நமது தேசிய வாழ்க்கையின் சிறப்பான குறிக்கோளாகும். இக்காலத்தில் மற்றெல்லா தெய்வங்களும் நம் மனத்தை விட்டு அகலட்டும். நமது தேசம், நமது மக்கள் இவைகள்தான் உயிருள்ள தெய்வங்கள். இத்தெய்வத்தின் கைகளும், கால்களும், சமூகமும் நாடு முழுவதும் எங்கும் பரவியிருக்கின்றன. மற்ற தெய்வங்கள் அனைத்தும் இப்பொழுது உறங்கிக்கொண்டிருக்கின்றன. நம்மைச் சுற்றிலும் பரவி, எங்கும் திகழ்ந்து கொண்டிருக்கும் இவ்விராட புருஷனை வழிபடுவதை விடுத்து நாம் வேறு தெய்வங்களை நாடிச்செல்ல வேண்டுமா? இந்தத் தெய்வத்தை நாம் முதலில் வழிபடுவோமாக'' என்று வீர ஆவேசமாக முழங்கினார். விவேகானந்தர் குறிப்பிட்டது போலவே ஐம்பது ஆண்டுகள் கழித்து நாடு விடுதலை பெற்றது. வீரத்துறவி விவேகானந்தர் 1893-லேயே "வரலாறு கண்ட வஞ்சம்' என்ற தலைப்பில் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த உரையின் சில வரிகளை நாம் என்றென்றும் மறக்கலாகாது. ""தேசபக்தி என்பது அந்நியர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுவதையும் குறிப்பதாகும்'' என்ற வரி நெஞ்சில் நிலைக்கத்தக்க வரிகளில் வைரவரியாகும். தனது ஆன்மிக, ஆவேச உரைகளால் பாமரனுக்கும் தேசப்பற்றை ஊட்டிய வீரத்துறவி விவேகானந்தர், தேச விடுதலைக்கு மட்டுமல்லாமல், ஒவ்வோர் இந்தியரின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான விடுதலைக்கும் வித்திட்டவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக