செவ்வாய், 20 அக்டோபர், 2009

இலங்கைப் போருக்கு திட்டம் வகுத்துக்கொடுத்ததே
மத்திய அரசுதான்:
வைகோ குற்றச்சாட்டு



பெங்களூர், அக். 19: இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போருக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததே மத்திய காங்கிரஸ் அரசுதான் என்று வைகோ குற்றம்சாட்டினார்.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ் ஈழ விடுதலை ஆதரவு மாநாடு பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய வைகோ பேசியதாவது:
இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு அந்நாட்டில் பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வரும் தமிழர்களின் சம உரிமை பறிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக பெரும்பான்மை சிங்களர்கள் வன்முறையை துவங்கினர்.
அதைத் தொடர்ந்து துவங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். ஆகியோர் ஆதரித்தனர். அங்குள்ள தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக தொலை நோக்குப் பார்வையுடன் விடுதலைப் போராளிகளுக்கு உதவினர்.
அதேபோல வாஜ்பாய் ஆட்சிகாலத்திலும் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக ஆட்சியில் இலங்கைக்கு ஆயுத உதவிகளை செய்யமாட்டோம் என்பதில் வாஜ்பாய் உறுதியாக இருந்தார்.
ஆனால் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்ததும் இலங்கையில் போராளிகளையும் அப்பாவித் தமிழர்களையும் ஒழிக்க அந்நாட்டுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது. இலங்கையுடன் இந்தியா ராணுவ ஒப்பந்தம் செய்து, இலங்கைத் தமிழர்களை குண்டுவீசிக் கொல்ல உதவி செய்தது.
அங்கு லட்சக்கணக்கான பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் அணு அணுவாகக் கொல்லப்பட்டனர். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கப் போரை நிறுத்த உலக நாடுகளும், ஐ.நா சபையும் வலியுறுத்தியும் போரை அதிபர் ராஜபட்ச நிறுத்தவில்லை.
எல்லை பிரிவினைவாதத்தில் மட்டும் எதிரிகளாக இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இலங்கைத் தமிழர்களைக் கொல்ல நேரடியாக ஆயுத உதவிகளை செய்தன
இந்தியர்கள், தமிழகத் தமிழர்களின் வரிப் பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்களை இலங்கைத் தமிழர்களை கொன்று குவிக்க இலங்கைக்கு இந்தியா வழங்கியது மன்னிக்க முடியாத குற்றம்.
போர் முடியும் வரை இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தது இந்தியா. தமிழக முதல்வர் கருணாநிதியும் போரை நிறுத்துமாறு கோரவில்லை. போரை நிறுத்த இந்தியா ஏன் வலியுறுத்தவில்லை என்று பார்த்தால், அந்த போரை வெற்றிகரமாக நடத்த திட்டம் வகுத்துக் கொடுத்ததே காங்கிரஸ் கூட்டணி அரசுதான் என்று தெரியவந்தது.
இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி செய்ததை பிரதமர் மன்மோகன் சிங், எனக்கு அக்டோபர் 2-ம் தேதி எழுதிய கடிதத்தில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இலங்கைப் பிரச்னையில் தொலைநோக்குப் பார்வையின்றி மிகப்பெரிய வரலாற்று தவறு செய்துவிட்டது. காங்கிரஸ் அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இலங்கையால் இந்தியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம்.
தமிழ் ஈழப் போராட்டமும் கனவும் அழிவதற்கு நாம் வாய்ப்புக் கொடுத்துவிடக்கூடாது. உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட்டத்தை ஆதரிக்க வேண்டும். பிரபாகரன் உயிரோடு நலமுடன் இருக்கிறார். அவர் மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். ஈழப் போராட்டத்தை தொடருவார் என்றார்.
இலங்கைக்கு அண்மையில் சென்ற திமுக அணி எம்.பி.க்கள் குழு, தமிழர் பிரச்னையை பேசாமல் ராஜபட்சவுடன் சிரித்து பேசி வந்தது மிகவும் கொதிப்பை ஏற்படுத்தியது என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.

கருத்துக்கள்

உண்மை! உண்மை!உண்மைதான். ஆனால், என் செய்வது? குறுக்கு வழிகளில் ஆட்சி பீடத்தில் காங்கிரசு ஏறி அமர்ந்து விடுகிறதே! அதனை அகற்ற வேண்டும் என்ற உணர்வு மக்களிடம் கொழுந்து விட்டு எரிய வேண்டுமே! சீனாவுடனோ பாக்கிசுதாடனோ நட்பு கொண்டிருந்தால் எப்பொழுதோ வெற்றி வாகை சூடியிருக்க முடியும். என்றாலும் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் வெற்றியடைய விரும்பாத ஈழத்தமிழர்களை ஈவுஇரக்கமின்றிக் கொன்றொழித்து வருகிறதே, காங்கிரசு! தன்நாட்டுப் பகுதிகளை மீட்க இயலாத காங்கிரசு அரசு அவற்றைக் கைப்பற்றியவர்களின கூட்டாளிகளுடன் இணைந்து கேடயமாக விளங்கும் ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்து வருவதால் இதனைப் பூண்டோடு ஒழித்தால்தான் இந்தியா அமைதிநாடாகத் திகழும். வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ-உலக நட்புறவுகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/20/2009 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக