தஞ்சாவூர், அக். 22: தஞ்சை பெரிய கோயில் உரிமையை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்றார் தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலருமான பெ. மணியரசன். தஞ்சையில் அவர் அளித்த பேட்டி: இந்து அறநிலைய ஆட்சித் துறை விதிகளுக்கு முரணாக, பாபாஜி பான்ஸ்லே தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்குப் பரம்பரை அறங்காவலராகத் தொடர்கிறார். இவரோ அல்லது இவருடைய மன்னரோ அக் கோயில்களைக் கட்டவில்லை. அக் கோயில்களுக்கு இவர்கள் சொத்து எதையும் எழுதி வைக்கவில்லை. அக் கோயில்களின் அன்றாட வழிபாடுகளுக்கும், ஊழியர்களின் ஊதியத்துக்கும் இவர்கள் சொந்தப் பணத்தை செலவழிக்கவில்லை. மேலும், இக் கோயில்களைக் கட்டிய சோழப் பேரரசர்கள் உள்ளிட்ட மற்ற மன்னர்களுக்கும் இவர்கள் வாரிசு கிடையாது. இந்நிலையில், மிகுந்த வருமானம் வரக் கூடிய தஞ்சைப் பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், கோடியம்மன் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இக் கோயில்களை மேம்படுத்தி, வசதிகளைப் பெருக்கி சுற்றுலா மையங்களாக பான்ஸ்லே மேம்படுத்தவில்லை. இந்த வருமானத்தை இப்பகுதி மக்களின் கல்வி, சுகாதாரத்திற்கும் பயன்படுத்தவில்லை. சரஸ்வதி பண்டாரம் என்ற பெயரில் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டு, நாயக்க அரசர்களால் வளர்க்கப்பட்ட நூலகம், சரபோஜி காலத்தில் சரஸ்வதி மஹால் என்ற பெயரில் விரிவுப்படுத்தப்பட்டது. இந்த நூலகம் 1918 ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷார் நிர்வாகத்தால் முழுவதும் அரசுடைமையாக்கப்பட்டு, பொது நூலகமாக்கப்பட்டது. சங்கங்கள் பதிவுச் சட்டப்படி இந்த நூலகம் பதிவு செய்யப்பட்டது. இந்த நூலகத்திற்கும் பான்ஸ்லே குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், பான்ஸ்லேயின் உறவினரான சிவாஜி என்பவர் நூலக ஆட்சிக் குழுவில் வாழ்நாள் உறுப்பினராக அண்மையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நூலக ஆட்சிக் குழுவின் தலைவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எந்த விதியின் கீழ் சிவாஜியை வாழ்நாள் உறுப்பினராக சேர்த்தார் என்று தெரியவில்லை. நூலகத்துக்கு கடந்த 15 ஆண்டுகளாக இயக்குநர் பதவி நிரப்பப்படவில்லை. மேலும், கடந்த 15 ஆண்டுகளாக தெலுங்கு, மராத்தி பண்டிதர்கள் பணியிடங்களும், ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பண்டிதர் பணியிடமும் காலியாகவுள்ளன. நூலகத்துக்கு விரைவில் இயக்குநரை நியமிக்க வேண்டும். சிவாஜியை நூலக ஆட்சிக் குழு வாழ்நாள் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். பான்ஸ்லேவை அரண்மனையை விட்டு வெளியேற்றுதல் உள்ளிட்ட உரிமை மீட்புக் குழுவின் பேரணி, ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை (அக். 24) நடைபெறுகிறது. இது தொடர்பான சுவர் விளம்பரங்களை அழிக்க துணை நின்ற மாவட்ட ஆட்சியரை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றார் மணியரசன்.
By KOOPU
10/24/2009 12:43:00 AM
By SAKTHIVEL
10/23/2009 8:12:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*