வியாழன், 22 அக்டோபர், 2009

சடலங்கள்-எலும்புக்கூடுகள் மீது 9-வது உலகத்தமிழ் மாநாடு

21 October, 2009 by admin

ஈழத்தில் பூவும் பிஞ்சும் கருக்கப்பட்ட வாசம், உலகின் மூக்கில் நாறுகிறது. விருட்சங்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட பின்னரும், சல்லி வேர்களைத் தோண்டி அழிக்கும் மனித வேட்டைகள் தொடருகின்றன. சிங்கள வெறிச் சிப்பாய்கள் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு இரை கொள்வதை போராயுதமாகப் பயன்படுத்துகிறார்கள். முகாம்களிலிருந்து பிரிக்கப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள், 27 ஆயிரம் இளைஞர்கள் எந்த சிங்கத்தின் குகைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? வீடு எங்கே, ஊர் எங்கே, நிலம் எங்கே, வாழ்வு எங்கே என்ற மிகப்பெரிய கேள்விகளோடு மூன்று லட்சம் தமிழர்கள் வெற்று வெளியை நோக்கி வெறித்த, நிலைகுத்திய பார்வையுடன் துக்கித்து நிற்கிறார்கள். இந்திய வல்லாதிக்க அரசின் துணையோடு இலங்கை இனவெறிப்பாசிஸ அரசு, மறுபடி மறுபடி இரையெடுக்கப்பாய்கிறது. உலகத் தமிழர்களின் சிவந்த கண்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன.

இங்குள்ள ஒருவர் - அவர் வேறு யாரோ அல்ல தமிழக முதல்வர் “இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து, வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தி அளிக்கிறது. மத்திய-மாநில அரசுகளைக் குறைசொல்ல வேண்டாம்” என்று அறிக்கை தருகிறார். (22.09.2009) மனிதம் மறுக்கப்பட்ட ஈழத்தமிழர்களை மீட்க இந்திய நடுவணரசும் எதுவும் செய்யவில்லை; கடிதம் எழுதியே காலம் கழிக்கும் தமிழக அரசும் நேர்மையாய் நடக்கவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாற்று நீர் உரிமைகள் பறிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் வறுமைப் பள்ளத்துக்குள் விரட்டப்படுகிறார்கள். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டும் வாழ்வாதாராம் பறிக்கப்படுவது அன்றாடக் காட்சியாகி விட்டது.

வாழ்வியல் நெருக்கடிகளால் வீதிக்கு வரும் மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். உள்ளேயும் வெளியேயும் பிரச்சினைகள் கொதிநிலை அடைந்து கொண்டிருக்கிறபோது, தமிழர்களின் கவனத்தை திசை திருப்ப முதல்வர் கருணாநிதி கோவையில் ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாட்டினை அறிவித்திருப்பது அரசியல் ஆதாயம் தேடும் தன்னல நோக்கமின்றி, வேறு என்ன? ஒரு இனத்தை அழிக்கத் துணை செய்தவர் அந்த இனம் பேசும் மொழி வளர்ச்சிக்கு உலகத்தமிழ் மாநாடு என்பது ஏமாற்று நாடகம். சேக்ஷ்பியரின் ‘மேக்பெத் நாடகத்தில்” தன்னுடைய சித்தப்பாவான ‘டங்கன்’ என்ற மன்னனை, ஆட்சியைக் கைப்பற்ற, கணவனுடன் கூட்டுச் சேர்ந்து கொலை செய்கிறாள் மேக்பெத். அந்தக் கொலை நினைப்பே தொடரும் வேதனையாகி தூக்கத்தில் நடக்கும் நோய்க்கு ஆளாகிறார்கள்.

தூக்கத்தில் நடந்துக் கொண்டே மேக்பெத் சொல்கிறாள்; “அரேபியாவின் வாசனைத் தைலங்களையெல்லாம் வைத்துக் கழுவினாலும் என் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை போகாது” அதுபோல் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாய் நடத்தி - தன்மேல் படிந்திருக்கிற ரத்தக் கறையை உலகத்தின் பாராட்டு மழையில் கழுவிட நினைக்கிறார் கருணாநிதி. ஒவ்வொரு தமிழறிஞராய் உள்ளிழுக்கப்பட்டு, வரவேற்பு அறிக்கை வாசிக்கிறார்கள். தன் குருதியிலேயே கலந்து விட்டிருக்கிற அரசியல் இயல்பாகிப் போன “விழா மோகம்” எனும் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளவும்; தமிழருக்கும், தமிழுக்கும் நேரும் எத்தகைய இழிவும் தனக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை நிரூபிக்கவும் நடக்கப் போகிறது இந்த மாநாடு.

தமிழ்மக்களே .....
தமிழ் உணர்வாளர்களே ...
தமிழ்க் கலை, இலக்கியவாதிகளே....
தமிழகத் தமிழறிஞர்களே...
அயலகத் தமிழறிஞர்களே...
மனச்சான்று நிறைந்த மாமனிதர்களே....

இந்த ஒன்பதாம் உலகத்தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம். ஒவ்வொரு பகுதியிலும் ஒன்று திரண்டு எதிர்ப்புக் குரல் எழுப்புவோம்.

உலகத் தமிழ் மாநாட்டைப் பார்க்காதீர்
உலகத் தமிழ் மாநாட்டைக் கேட்காதீர்
உலகத் தமிழ் மாநாட்டைப் பேசாதீர்...


|இச் செய்தியை வாசித்தோர்: 902



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக