வி.பி.சிங்
அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அவ்வாறு நடந்து கொண்டிருக்கவும், அமைதிப்படையால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தினருடன் ஏற்படப் போகும் மோதலைத் தவிர்க்க பிரபாகரன் விரும்பினார். எனவே, அவர் இருவகையான யோசனைகளை வெளியிட்டார். ஒன்று, தமிழ் தேசிய ராணுவத்தினர், அவ்வமைப்பில் இருந்து தானாக வெளியேறுவது, இரண்டாவதாக இந்த அழைப்புக்குப் பலன் ஏற்படாத நிலையில், ஏற்படப்போகும் மோதலில் சிங்களப் படையினர் கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதாகும். எனவே, இரண்டாவது கோரிக்கையை பாலசிங்கம் மூலமாக இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்குத் தெரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய ராணுவத்தினருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். அவ்வேண்டுகோளில், ""பலாத்காரமாக சேர்க்கப்பட்ட இளைஞர்களாலும் நிர்ப்பந்தத்தின் பேரில் சேர்ந்துகொண்ட இளைஞர்களாலும் தொடங்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவம், இன்று ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது. அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அமைதிப்படை வெளியேறியதைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அப் படைப்பிரிவிலிருந்து வெளியேறி எம்மிடம் சேர்ந்துள்ளார்கள். தற்போது மட்டக்களப்பிலிருந்தும் அமைதிப்படை வெளியேறுகிற நிலையில், தமிழ் தேசிய ராணுவத்தினரைக் குற்றவாளிகளைப் போல லாரிகளில் ஏற்றி திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. நாளை திருகோணமலையிலிருந்தும் அமைதிப்படை வெளியேறும். அப்போது தமிழ் தேசிய ராணுவத்தினரை இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்போவதில்லை. மாறாக அவர்களை விடுதலைப் புலிகளுடன் போரிடுமாறு உத்தரவிடப் போகிறது. அப்படியொரு யுத்தம் நேரிட்டால் வீணாகச் செத்துமடியப் போகிறீர்கள். எனவே, தமிழ் தேசிய ராணுவத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர்களே, இன்னும் சில நாள்களில் அமைதிப்படையால் பூரணமாகக் கைவிடப்படப்போகும் நீங்கள் தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து குற்றச் செயல்களைப் புரிந்துகொண்டு இருக்காது, உடனடியாக ஆயுதங்களுடன் வந்து சரணடையுங்கள். அதன் மூலம் தமிழீழப் போராட்டத்தில் நீங்களும் பங்காளிகளாக மாற முடியும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது (விடுதலைப் புலிகள் அறிக்கை: 30-11-1989). விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை அடுத்து, ஏராளமான தமிழ் தேசிய ராணுவத்தினர் மட்டக்களப்புப் பகுதியில் சந்திரவெளி, முனைக்காடு, அம்பலாந்துறை, வண்டாருமுனை, மணல்பட்டி, வாழைச்சோனையிலும், திருகோணமலையில் கின்னியா, தம்பலகாமம் எனும் இடத்திலும், கிளிநொச்சியில் கல்முனை, உண்ணிச்சை பழுகாமம், மண்டூர், தம்பிலிவில் மற்றும் வவுனியாவில் குழுமாட்டுச் சந்திப்பிலுமாக ஈபிஆர்எல்எஃப், ஈஎன்டிஎல்எஃப் அணியைச் சேர்ந்தோர் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் கிடைத்தன. மீதமிருந்த தமிழ் தேசிய ராணுவத்தினர் மீது முதலில் அம்பாறையிலும் பின்னர் மட்டக்களப்பிலும் புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. இத் தாக்குதலின் காரணமாக பல ராணுவத் தளங்கள் விடுதலைப் புலிகள் வசமாயின. ஏராளமான இளைஞர்கள் சரணடைந்தார்கள். இறுதியில், ஈபிஆர்எல்எஃப்பின் தீவிர உறுப்பினர்கள் மட்டுமே புலிகளை எதிர்த்தனர். சரணடைந்த தமிழ் தேசிய ராணுவத்தினரை கிழக்கு மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களை அழைத்து அவர்கள் வசம், அவர்களது பிள்ளைகளை ஒப்படைத்தனர். கிழக்கு மாகாணத்தில் அமைதிப்படை வெளியேறிய இடங்களில் எல்லாம், புலிகள் ஆயுத பலத்தால் தங்களின்வசம் கொண்டுவருவதை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் எதிர்த்தார். இதுகுறித்து ராஜீவ் காந்தியிடமும் பிரேமதாசாவிடமும் மனுப் போட்டு முறையிட்டார். வரதராஜ பெருமாளின் மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்க விருப்பமில்லாத நிலையில் பிரேமதாசா இருந்தார். நடவடிக்கை எடுக்க ராஜீவ் காந்தி விரும்பினாலும் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆயுதம் வாங்கிய விவகாரத்தில் எழுந்த கடுமையான பிரசாரம் போன்ற காரணங்களினால், இந்தப் பிரச்னையில் தீவிரக் கவனம் செலுத்த முடியாதவராக ஆனார்.இந்திய அரசியலிலும் மாற்றம் நிகழவிருந்தது. நாடாளுமன்றத்துக்கு டிசம்பரில் தேர்தல் நடக்கவிருந்தது. காங்கிரûஸ வீழ்த்த கூட்டணியால்தான் முடியும் என்று, அதே 1977-வது ஆண்டு சூத்திரப்படி, முன்னாள் காங்கிரஸ்காரரான வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி என்ற பெயரில் களம் அமைத்தனர். திமுக, தெலுங்குதேசம், அகாலிதளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேசிய முன்னணி என்ற அமைப்பில் சேர்ந்து, ஒரே குடையின் கீழ் தேர்தலைச் சந்தித்தனர். தேர்தல் முடிவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமரானார் (டிசம்பர் 2, 1989). வி.பி.சிங் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில், அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. "ராஜீவ் காந்தி ஸ்ரீலங்காவில் தலையிட்டமை ஒரு பெரிய ராஜதந்திரத் தவறுதலாக' வி.பி.சிங் அரசு கருதியது என அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிடுகிறார். அவர் மேலும் இதுகுறித்து குறிப்பிடுகையில், "ராஜீவ் காந்தி புரிந்த தவறு நீடித்துச் செல்லக்கூடாது என்பதில் வி.பி.சிங், உறுதியாக இருந்தார். 1990 மார்ச் 31-க்குள் இந்திய அமைதிப்படையின் கடைசிச் சிப்பாய் இந்தியா திரும்புவார்' எனவும் தேதி நிர்ணயமானதாகவும் தெரிவித்திருக்கிறார்.பிரேமதாசாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கிடையே பிரபாகரனின் குடும்பத்தினர் கொழும்பு விமான நிலையத்தில் வந்து இறங்கினர். இதற்கு முன்பு, 1987 அக்டோபரில் அமைதிப்படை தொடுத்த யுத்தத்தின்போது, யாழ் மக்களோடு மக்களாக நல்லூர் கந்தசாமி கோயிலில் தங்கியிருந்த பிறகு, மதிவதனியும் குழந்தைகளும் எங்கு சென்றார்கள் என்று குறிப்பு எதுவும் இல்லை. தற்போது, இவர்கள் பிரபாகரனுடன் சேர்ந்து வாழ, அடேல் பாலசிங்கம் வழியமைத்துக் கொடுத்தார். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து, பாஸ்போர்ட் ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர், இவர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர். இவர்களைக் கொழும்பு விமானநிலையத்திலிருந்து வன்னியிலுள்ள அலம்பில் பகுதிக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையிலும், அமைதிப்படையினருடன் மோதலில் ஈடுபட்டதாக விடுதலைப் புலிகளின் 22-1-1990 தேதியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது. இந்த அறிக்கையில் துரோகச் செயலில் ஈடுபட்ட ஈஎன்டிஎல்எஃப் கும்பல், விடுதலைப் புலிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டபோது, இவர்களுக்கு உதவ நாவற்குழி முகாமில் இருந்து வெளியேற முயன்ற அமைதிப் படையினரை, வெளியே வர வேண்டாமென விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இந்த வேண்டுகோளையும் மீறி ஜீப் வண்டி சகிதமாக வந்த இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதில், வண்டி எரிந்து சேதமானதுடன், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர். இந்தச் சம்பவத்தையடுத்து, அரியாலை முகாமிலிருந்தும் அமைதிப்படையினர் வெளியே வந்தபோது, அவர்களையும் வெளியேற வேண்டாம் என புலிகள் வேண்டுகோள் விடுத்தும், வெளியேறியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்தப் போக்கு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பழ.நெடுமாறன் எழுதிய "இந்தியப் படையே வெளியேறு' நூலில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். "சில இந்தியத் தளபதிகள் இவ்வளவு காலம் போராடி ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலிகொடுத்த பிறகும், மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டபிறகும் எதையும் சாதிக்காமல் திரும்புவது தலைகுனிவானது என நினைக்கிறார்கள். எனவே, அவர்கள் போரைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென வற்புறுத்துகிறார்கள். இந்தத் தளபதிகளில் பெரும்பாலானோர் மேற்கு மற்றும் மத்திய இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதுவரை இந்திய ராணுவத்திலுள்ள அதிகாரிகள் தமிழர்களை வீரப் பரம்பரை என்று ஏற்றுக்கொண்டதே இல்லை. எனவே இப்போதும் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்' என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளதை இங்கு பதிவு செய்வது தேவையாகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக