புதன், 21 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-141:
அமைதிப்படை வெளியேறத் தொடங்கியது!இந்தியா, அமைதிப்படை வெளியேறுவது குறித்து மெüனம் சாதித்த நிலையில் பிரேமதாசா இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதிப்படை திரும்புவதற்கான அட்டவணையை இறுதி செய்ய குழுவொன்றை தில்லிக்கு அனுப்பினார்.
இந்தக் குழு, ஜூலை 29-ஆம் தேதி தில்லி சென்றடைந்தது. எ.சி.எஸ். ஹமீது தலைமையில் இலங்கையின் தூதுவர் கலாநிதி ஸ்டான்லி கல்பகே, பிரட்மன் வீரக்கூன், சுனில் டிசில்வா, டபிள்யூ.டி. ஜயசிங்கா, ஃபீலிக்ஸ் டயஸ், அபே சிங்கா ஆகியோர் சென்றிருந்தனர். இந்திய அரசுத் தரப்பில் பி.வி. நரசிம்மராவ், கே.சி. பந்த் ஆகியோர் முன்னிலையில் நடத்தப்பட்ட, இந்தப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 4-இல் முடிவுற்றது. அமைதிப்படையை திரும்ப அழைக்க அட்டவணை, புலிகளுக்கு எதிரான செயல்களை முடிவுக்குக் கொண்டு வருதல், இந்திய-இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவது, வடக்கு-கிழக்கில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது ஆகியவை குறித்துப் பேசி இறுதி செய்யப்பட்டது.
படைகளைத் திரும்பப் பெறுவது என்பது 1989 டிசம்பர் 31- ஆம் தேதிக்குள் முடிவுறும்படி பார்த்துக் கொள்ளப்பட்டதானது பிரேமதாசாவுக்கு நிம்மதியளிக்கிற நடவடிக்கையாக அமைந்தது. செப்டம்பர் 20-இல், அமைதிப்படை தனது தாக்குதலை நிறுத்த ஒத்துக்கொண்ட அதே வேளை "பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கமிட்டி' உருவாக்கப்பட்டு, அதில் ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர், அமைதிப்படைத் தளபதி, முதலமைச்சர் வரதராஜ பெருமாள் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்திய அமைதிப்படை வெளியேறிய பிறகு, வடக்கு கிழக்கில் ஏற்படவிருக்கும் அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிக் குழுவுடன் அரசு நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆய்வுக்குரியதானது.
எனவே, பிரேமதாசா "புலிகள் அரசியல் இயக்கம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து யோசிக்கும்படி' பாலசிங்கத்திடம் தெரிவித்தார்.
புலிகளின் நோக்கம் சுதந்திரத் தமிழீழம்; பிரேமதாசாவின் நோக்கமோ ஒற்றையாட்சியின் கீழ், அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்ப வடக்கு - கிழக்கில் தீர்வு. இவையிரண்டும் சாத்தியமாக வேண்டுமானால் இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் இருவரும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தனர். எனினும், இந்த அம்சத்தை யாரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
"அமைதிப்படை வெளியேறிய பிறகு வடக்கு-கிழக்கு நிர்வாகம் அமைதியான முறையில் புலிகளுக்கு கைமாற்றப்படுமா' என்று ஹமீதிடம் வினவினார், பாலசிங்கம். "ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து புலிகள் இயங்கினால் அது சாத்தியம்' என்றார் ஹமீது: (ஆதாரம்: சுதந்திர வேட்கை, பக். 327).

அரசியல் பிரிவு அமைப்பதற்கான அனுமதியை பிரபாகரனிடம் பாலசிங்கம் ஏற்கெனவே பெற்றிருந்தார். அதன் கட்டமைப்பு, விதிகள் யாவும் பிரபாகரனிடம் விவாதித்தபடி உருவாக்கப்பட்டன. அமைப்புக்கு "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' என்று பெயரிடப்பட்டது. மகேந்திரா ராசா என்கிற மாத்தையா கட்சியின் தலைவராகவும், யோகரத்தினம் யோகி செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அரசியல் கட்சிக்கான விதிப்படி பல்வேறு பிரிவு மக்களைப் பிரதிநிதிப்படுத்தவும், பங்கெடுக்கவும் விதிகள் வகுக்கப்பட்டு, கட்சியின் பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. புலிகளின் சின்னத்தைப் பதிவு செய்வதில் முரண்பாடுகள் எழுந்தன. அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு அச் சின்னமும் பதிவு செய்யப்பட்டது.
இவ்வகையான நிகழ்வுகளால், பிரேமதாசா மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். புலிகளை அரசியல் நீரோட்டத்தில் இணைத்துவிட்டதாக அவர் நினைத்தார். தனது தந்திரம் வென்றதாகவும் கருதினார். ஆகஸ்ட் 12-இல் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்திலும் "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' என்கிற அரசியல் கட்சியை இடம்பெறச் செய்தார். ஆனால் இந்தக் கூட்டத்தில் பிரச்னைகளைத் தீர்க்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இச்சமயத்தில், குறிப்பிடத்தக்க இரு உயிரிழப்புகள் தமிழீழப் பகுதியில் ஏற்பட்டன. காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட, தமிழர் புனர்வாழ்வுக் கழக நிறுவனர்களில் ஒருவரான கே.கந்தசாமி கடத்தப்பட்டார். அதுகுறித்த சர்ச்சை எழுந்து விவாதிக்கப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
அதேபோன்று "முறிந்தபனை' நூலாசிரியர் மூவருள் ஒருவரான ராஜனி திராணகமவின் கொலையும் நேர்ந்தது. ராஜனியின் கொலைச் சம்பவம் படித்தவர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இவ்விரு கொலைகளுக்கும் எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜீவ்-பிரேமதாசா உடன்பாட்டின்படி 1989 அக்டோபர் இரண்டாம் வாரத்தில், அமைதிப் படைகள் திரும்ப அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு படைப் பிரிவும், அதன் ஆயுதத் தளவாடங்களுடன் படிப்படியாக கிளம்பத் தொடங்கின. இந்த நேரத்தில், தமிழ் தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாவட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் அந்தந்த முகாம்களில் குடியேறியதும் நடந்தது.

நாளை: மாவீரர் நினைவு கொண்டாட்டம் ஏன்?

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக