Last Updated :
உலகமயம் என்கிற போர்வையில் இந்தியாவும் ஏனைய வளர்ச்சி அடையும் பொருளாதாரங்களும் வளர்ச்சி அடைந்த நாடுகளின் தேவைக்கும் வசதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறுபவர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்கள். மேலோட்டமாக வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டது போன்ற மாயத்தோற்றம் ஏற்படுத்தப்பட்டு, தேசத்தின் அடிப்படை ஸ்திரத்தன்மை தகர்க்கப்பட்டு வருகிறது.உலகமயம் என்கிற பெயரில் அவர்களது பொருள்களை விற்கும் சந்தையாக மட்டும் இந்தியா பயன்படுத்தப்பட்டிருந்தால்கூடப் பரவாயில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளை அசுத்தப்படுத்தும் கழிவுப் பொருள்களையும், அந்த நாட்டு மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நச்சுப் பொருள்களையும், கதிரியக்கத்தை ஏற்படுத்தும் பொருள்களையும் கொண்டுவந்து கொட்டும் குப்பைத் தொட்டியாக நாம் மாற்றப்படுவதை எப்படிச் சகித்துக் கொண்டிருப்பது?அதைவிட துர்பாக்கியமான நிலைமை என்ன தெரியுமா? நமது அரசும் ஆட்சியாளர்களும் இது தெரிந்தும் தெரியாததுபோல இருப்பதும், மறைமுகமாக இதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு அளிப்பதும்தான். ஏன் நீதிமன்றங்களேகூட இந்தச் சம்பவங்களை சட்டத்தின் போர்வையில் ஆதரிக்கத் தலைப்படுகின்றன என்பதுதான் அதைவிட வேதனைதரும் விஷயம்.ஓராண்டுக்கு முன்னால் எஸ்.எஸ். நார்வே என்கிற கப்பல் "ப்ளுலேடி' என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு கடல் பயணத்துக்கு உகந்ததல்ல என்பதால் அதை உடைப்பதற்கு வங்கதேசத்துக்கு வந்தது. சுமார் 1,240 டன்கள் நச்சுத்தன்மை கொண்ட ஆஸ்பெஸ்டாசும், பாலி க்ளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சுத்தன்மையையுடைய ரசாயனமும் இருப்பதாக அந்த நிறுவனத்தாரே ஒப்புக்கொண்ட அந்தக் கப்பலை உடைக்க சின்னஞ்சிறு வங்கதேசமும், மலேசியாவும் கூட மறுத்துவிட்ட நிலையில் "ப்ளுலேடி' இந்தியாவைத் தஞ்சமடைந்தது.என்னவாயிற்று தெரியுமா? நமது நீதிமன்றங்களில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புகளைப் பெற்று, குஜராத் மாநிலம் பவநகரிலுள்ள கப்பல் உடைக்கும் தளத்தில் அந்தக் கப்பல் உடைத்துப் பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அந்தக் கப்பல் உரிமையாளர்களின் கோரிக்கை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.கடந்த 2005-ம் ஆண்டில் பன்னாட்டுப் புகையிலை நிறுவனமான ஐடிசி நிறுவனத்தாரின் காகித தொழிற்சாலைப் பிரிவினர் 25,000 டன் பழைய பேப்பர் இறக்குமதி செய்வதாகக் கூறி நியூஜெர்ஸி நகரத்தின் குப்பைக் கூளங்களையும் சில கன்டெய்னர்களில் நிரப்பி அந்தக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதற்குக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதுபோல எந்தெந்த பன்னாட்டு நிறுவனங்கள் என்னென்ன நச்சுப் பொருள்களையும் கழிவுப் பொருள்களையும், ரகசியமாக இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுகிறார்களோ, யார் கண்டது?.இப்போது மீண்டும் ஒரு பிரச்னைக்குரிய கப்பல் குஜராத் செüராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் நங்கூரமிடப்பட்டு இருக்கிறது. "எஸ்.எஸ். இண்டிபென்டன்ஸ்' என்கிற அந்தக் கப்பல் எம்.எஸ். ஓஷியானிக் என்று முதலில் பெயர்மாற்றம் செய்யப்பட்டு இப்போது "பிளாட்டினம் 2' என்கிற பெயருடன் இந்தியத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது. இந்த அமெரிக்கக் கப்பல் இந்தியாவைத் தஞ்சம் அடைவானேன்?.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக துபாய் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த இந்தக் கப்பலை ஏன் அமெரிக்காவிலேயே உடைத்து பிரிக்கக் கூடாது? நியாயமாகப் பார்த்தால் அமெரிக்கக் கப்பலான "பிளாட்டினம் 2' அமெரிக்காவில் பிரிக்கப்படுவதுதானே நியாயம்?அமெரிக்கச் சுற்றுச்சூழல் சட்டப்படி சுமார் 200 டன்களுக்கும் அதிகமான "ஆஸ்பெஸ்டாஸ்' அடங்கிய பொருள்களும் சுமார் 210 டன்கள் பாலி குளோரினேடட் பை பினைல்ஸ் என்கிற நச்சு ரசாயனம் கலந்த பொருள்களும் இருக்கும் இந்தக் கப்பல் அமெரிக்காவில் உடைக்கப்பட முடியாது. இதை உடைப்பதால் அமெரிக்கச் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படலாம் என்று அமெரிக்க அரசு கருதுகிறது. அமெரிக்கச் சட்டங்கள் அனுமதி மறுக்கின்றன.இந்தியாவை இந்தக் கப்பல் எப்படி அடைந்தது என்று கேட்டால் அதைவிட சுவாரஸ்யமான ஒரு தகவல் கிடைக்கிறது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி செüராஷ்டிரா கடற்கரையை ஒட்டிய ஆழ்கடலை அடைந்த இந்தக் கப்பல் பவநகரிலுள்ள "அலங்க்' கப்பல் உடைப்புத் தளத்துக்கு மாநில அரசின் அனுமதி பெறாமல், ஒரு விசைத்தோணி மூலம் இழுத்து வரப்பட்டது. எதிர்பாராதவிதமாக இரவு நேரத்தில் அந்த விசைத்தோணி இன்னொரு கப்பலில் மோதிவிட அங்கேயே அந்தக் கப்பல் கைகழுவப்பட்டது.இந்தக் கப்பலை யாருக்கும் தெரியாமல் "அலங்க்' கப்பல் உடைக்கும் தளத்துக்குக் கொண்டு வர எத்தனித்த தனியார் நிறுவனம் கைகழுவி விட்டதால் கடலில் நங்கூரமிட்டது இந்தக் கப்பல். விவரமறிந்த குஜராத் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கப்பலைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். ஒருவேளை, அந்தத் தனியார் நிறுவனமே கூடத் திட்டமிட்டு இந்தக் கப்பலை நடுக்கடலிலிருந்து விசைத்தோணி மூலம் இந்தியக் கடல் எல்லைக்குள் இழுத்துக் கொண்டுவந்து கைவிட்டதோ என்னவோ? கப்பல் உரிமையாளரிடம் அதற்குப் பெரிய தொகை பெற்றிருக்கலாம். இந்திய எல்லைக்குள் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கப்பலை நாம் நடுக்கடலில் கொண்டு விட முடியாது. உடைத்துத்தானே தீரவேண்டும்?இதைப்பற்றி ஓர் அறிக்கை தயாரிக்கச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறது மத்திய சுற்றுச்சூழல் துறை. இதுபோன்ற நச்சுக்கழிவுகளும், கதிரியக்கத்தைத் தோற்றுவிக்கும் பொருள்களையும் கொண்ட ஒரு கப்பலை யார், எப்படி, எதற்காக இந்திய எல்லையில் நங்கூரம் பாய்ச்ச அனுமதித்தது என்று விசாரணை நடத்தவும் உத்தரவிடப் போவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர்.இதுபோன்ற கப்பல்கள் உள்ளே வருவதை கண்காணிப்பதுதானே கடலோரப் பாதுகாப்பு படையினரின் வேலை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, படுகிறதா? மும்பை தாக்குதலுக்கு வந்தவர்களையே கண்காணிக்காமல் விட்டவர்கள்தானே அவர்கள்? அதற்குப் பிறகாவது உஷாராக இருந்திருக்கவேண்டாமா?உலகமயம் என்கிற பெயரில் உலகின் நச்சுப் பொருள்களும், கதிரியக்கப் பொருள்களும், கழிவுகளும் கொட்டப்படுவதற்கு நமது தாய்த்திருநாடு பயன்படுகிறது என்பதைப் பார்க்க நமக்கு ரத்தம் கொதிக்கிறது. ஆனால், நமது ஆட்சியாளர்களை இது சற்றும் பாதித்ததாகவே தெரியவில்லை! இந்த லட்சணத்தில் நாம் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் வேறு செய்துகொண்டிருக்கிறோம். மிக அதிகமான கதிரியக்கம் உள்ள அணுக்கழிவுகள் இந்தியாவில் கொட்டப்பட மாட்டாது என்பது என்ன நிச்சயம்?
By mohamed sadiq
10/19/2009 3:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*