பிரேமதாசாவின் அரசியல் நெருக்கடிகளுக்குப் பதிலாக, விடுதலைப் புலிகளின் மீது தாக்குதல் தொடுத்த அமைதிப் படையையும், தமிழ் தேசிய ராணுவத்தையும் தாக்குப் பிடிக்க வேண்டுமானால், ஆயுதங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் பாலசிங்கமும் அமைச்சர் ஹமீதும் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர் நிகழ்வாக, புலிகளின் தேவைகளுக்கு முல்லைத் தீவு மாவட்ட மணலாறு பகுதியில் உள்ள முகாம் வழியாக ஆயுத உதவி வழங்கப்பட்டதாக அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது தொடர்பாக, பிரேமதாசா விடுத்த கெடு நெருங்கி வந்தது. ஆனால் இந்தியா இது குறித்து அமைதியாகவே இருந்தது. இந்நிலையில் அமைதிப் படை இலங்கையைவிட்டு வெளியேறவேண்டும் என்று இந்தியாவிலிருந்தும் குரல்கள் கனத்து ஒலித்தன. இந்தக் குரல்கள் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், முன்னாள் மேஜர் ஜெனரல் கரியப்பா உள்ளிட்டவர்களிடமிருந்தும், பத்திரிகைத் தலையங்கங்கள் மூலமாகவும் எழுந்தன. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கருத்து வருமாறு: கொள்கைப் பிடிப்புள்ள தேசபக்தரான அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு முன்னால் எப்போதும் இருந்திராத அளவுக்கு, ஸ்ரீலங்காவுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிற ஒரு தமிழ்த் தலைவனை நாம் பறி கொடுத்தோம். இந்த அதிபயங்கரமான வன்முறைச் செயலால் நான் அதிர்ந்து போனேன். அதைவிடவும் அதிபயங்கரமான சோகம் வேறு ஒன்று உண்டு. அமைதிகாக்கும் இந்தியப் படைக்கு ஆதரவான குரல்கள், இந்தப் படுகொலையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான். கொழும்புவில் வைத்து அமிர்தலிங்கத்தைப் படுகொலை செய்திருப்பதால், இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கவேண்டும் என்பது அவர்களுடைய நியாயத்துக்குப் புறம்பான வாதம். அமைதிப் படைக்கு ஆதரவாகச் செயல்படும் குழுவினர், கொழும்புவிலுள்ள தமிழ்மக்களின் உயிர்களைக் காப்பதற்காக இந்திய ராணுவம், கொழும்புவை நோக்கிப் படையெடுக்கவேண்டும் என்றும் கேட்கக்கூடும். அமிர்தலிங்கம் படுகொலை என்பதை ஒரு சாக்காக வைத்து இந்தியா-ஸ்ரீலங்கா இடையே ஒரு போர் மூளவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம். அமைதி காக்கும் இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்திலேயே இருக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதாகவும் இருக்கலாம்; அல்லது மோசமான சிந்தனையாகவும் இருக்கலாம். ஆனால் கொழும்புவில் நடந்த படுகொலைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. கடுமையான நீதித்துறை நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், தில்லி தன்னுடைய அமைதிப் படை அணிகளை ஐரோப்பாவுக்கு அனுப்பியோ, அல்லது இந்தியாவுக்குள்ளே தேடியலைந்தோ புலிகளைத் தேடிப் பிடித்துச் சுட்டுத் தள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால் இந்தவிதமான அசட்டுத்தனமான பிரசாரம் இந்தியாவுக்குள்ளேயே செய்யப்படுகிறது. இதைப் பரப்புகிறவர்களுக்கே இந்தக் கோரிக்கையில் உள்ள முரண்பாடுகள் நன்கு தெரியும். ஆனால் நியாயத்தை ஒதுக்கிவிட்டு, வெறியைத் தூண்டிவிடவே விரும்புகிறார்கள். அதன்மூலம், ஓர் அடிமையான நிர்வாக அமைப்பை உருவாக்குதற்காக அமைதிப் படை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கவேண்டும் என்பதும், அந்த அமைப்பு நாளாவட்டத்தில் பனிபோல் மறைந்துபோய்விடும் என்றும், அதைப் பாதுகாப்பது பாக் நீரிணைக்கு இப்பால் உள்ள ஜவான்களின் கடமையாக இருக்கவேண்டுமென்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அண்மையில், பிரபலமான ராஜீவ் விசுவாசியும் அமைதிப் படை ஆதரவாளருமான ஒருவர், ஸ்ரீலங்கா அரசுக்கே எதிரான முறையில் இந்திய ராணுவம், அங்கேயே பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். ஏனென்றால் அமிர்தலிங்கத்தைப் புலிகள்தான் படுகொலை செய்திருக்கிறார்கள். இப்படி அவர் தமக்குத் தாமே நிரூபணமானதாகக் கருதிக்கொண்டு பேசியிருக்கிறார். இப்படி ஒரு கூச்சலைக் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்களோ, இந்தியாவுக்கு எதிரான காஷ்மீர் தலைவர்களோ, பாகிஸ்தானில் போய் எழுப்பமுடியுமானால், எந்த இந்தியனாவது பொறுத்துக்கொண்டு பேசாமலிருக்க முடியுமா? இந்தமாதிரியான தில்லி ராஜதந்திரம் இந்தியா-ஸ்ரீலங்கா நல்லுறவை சுமுகமாக மேம்படுத்துமா? ஸ்ரீலங்காவின் ஒற்றுமையிலும் உறுதித்தன்மையிலும் இந்தியாவுக்கு ஆழமான அக்கறை உண்டு என்று 1987 ஜூலை 31-இல் ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் சொன்னார். அவர்களே வரவழைத்த படைகளைத் திரும்ப அனுப்ப, அல்லது வெளியேறச் சொல்லும்போது அப்படிச் செய்ய மறுப்பதும் நம்பிக்கைத் துரோகமான செயலாகும். புலிகளின் பங்களிப்பு இல்லாமல் இந்த இனப் பிரச்னையைத் தீர்த்துவைக்க முடியாது. மக்களிடம் அவர்களுக்குள்ள பரவலான செல்வாக்குக்கும் மதிப்பளிக்கவேண்டும். 1983-இல் படுமோசமான படுகொலைகள் நடந்தபோது சிங்களக் காட்டுமிராண்டிகளை அதிவீரத்தோடு எதிர்த்துப் போரிட்டவர்கள் அவர்கள். இந்த இடத்தில், யாழ்ப்பாணத்தில் இந்தியா செய்யவேண்டியதென்ன என்பது பற்றி இன்னும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். தமிழ்ப் பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரம் வழங்குவது சம்பந்தமாக, இந்தியாவையும் மற்ற உலகநாடுகளையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஏமாற்றுகிறார் என்று அமிர்தலிங்கத்துக்கு அதிருப்தி. யதார்த்தமான சட்டமன்ற அதிகாரத்தை மாற்றி வழங்குவது பற்றிக் கொழும்புவை தில்லி நிர்ப்பந்திக்கவில்லை என்றும் அவருக்கு வருத்தம். 1987 ஜூலை முதல், ஜெயவர்த்தனா பதவி துறக்கும் வரையில் இதுதான் நிலவரம். தமிழர்களுக்குச் சுய ஆட்சி உரிமை அல்லது ஒதுக்கிவிடமுடியாத அதிகார மாற்றம் -இவை பற்றி ஒருமுறைகூட ராஜீவ் காந்தி வலியுறுத்தியதில்லை. இதே பெருமாளும் அவருக்கு முன்னால் அவருடைய கட்சிச் செயலாளர் பத்மநாபாவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது பற்றி தில்லியிலுள்ளவர்களிடம் பலமுறை முறையிட்டும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகிவிட்டது. "ஆபரேஷன் பவன்' திட்டத்தின்படி, டெல்லித் தலைமையிடம் காடுகளில் உள்ள புலிகளைத் தேடிச் சரண் அடையவைக்கும் முயற்சியில் ஆட்களை வேட்டையாடும் காரியமாகவே நடைபெற்றது. இதே நேரத்தில் எண்ணிக்கையில் அடங்காத தமிழர்கள் செத்தார்கள். தெரிவிக்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கையில் ஜவான்களும் உயிரிழந்தார்கள். அறிவிக்கப்படாத யாழ் போரில், இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையே காவு கொடுக்கப்பட்டுவிட்டது. இதுதான் பலன். ஸ்ரீலங்காவைப் பற்றி தில்லி தருகிற தகவல்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன. வெளிப்படுத்தப்படுகிற கருத்தின் விளைவாகவே பெரிய எதிர்ப்புகள் நிகழ்கின்றன. சமீபகாலம் வரை பத்திரிகைச் செய்திகளில் மிகவும் குறைவான கவனத்தையே அமைதிப்படை பெற்றிருந்தது என்பது ஓர் ஆச்சரியம். ஸ்ரீலங்காவில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சராசரி இந்தியனுக்கு எதையும் தெரிந்துகொள்ள வழியில்லை. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதே நிலைதான். அதிகாரபூர்வமானதாகத் தரப்படும் செய்திகள் மட்டும்தான். முன்னாள் இந்திய ஹைகமிஷனரை "இந்தியாவின் வைசிராய்' என்பதாகக்கூட இலங்கையர்கள் குறிப்பிடுவதாகச் சொன்னார். நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டில் நான் உடனிருக்க, சுப்ரமணியம் சுவாமியிடம் இந்திய ராணுவத்தினரின் அட்டூழியங்களைப் பற்றி விசாரிக்க ஒரு கமிஷன் ஏற்படுத்தவேண்டும் என்றுகூடக் கோரிக்கை வைத்தார்கள். சென்ற ஆண்டு லண்டன் மகாநாட்டில் என்னிடம், இந்த ராணுவ ஆக்கிரமிப்புக் கொடுமையைப் பற்றிக் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் அஃபிடவிட்டுகளும் தரப்பட்டன. ஹைகமிஷன் தருகிற செய்தியறிக்கைகளை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்காமல், எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளக்கூடிய உரிமை நமக்கு இருக்கிறது. யாழ்ப்பாணம் உயர்நிலைப்பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராக இருந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரை நான் ஓராண்டுக்கு முன்னால் நியூஜெர்ஸியில் சந்தித்தேன். தமிழ்க்குடிமக்களை, பொறுப்பற்ற முறையில் பயங்கரமாகத் துன்புறுத்திய அமைதிப்படையின் செயல்களை, அங்கே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் விவரித்தார். அவர்கள் புலிகளை விரட்டித் தேடியிருக்கலாம். அந்த நடவடிக்கையில் சந்தேகப்பட்டவர்களையெல்லாம் அவர்கள் சுட்டிருக்கக்கூடும். அமைதிப் படை என்பது, அவர்களுக்குள்ளேயே சட்டதிட்டங்களை உடைய அமைப்பு என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் விரும்புகிறவரை ஆட்களைக் காவலில் வைத்திருக்கலாம். அடித்து உதைக்கலாம். மாஜிஸ்திரேட் முன்னால் கொண்டுபோய் நிறுத்தவேண்டிய அவசியமில்லை. நாகரிகமான மக்களாட்சி முறைக்கு மேம்பட்டவர்களாகவே அவர்கள் நடந்துகொண்டார்கள். கொழும்பு பாரிஸ்டர் ஒருவர் என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஹேபியஸ் கார்ப்பஸ் -ஆள்கொணர்வு மனுக்களின் மீது உச்சநீதிமன்றமே நோட்டீஸ் அனுப்பியும், அமைதிப்படை தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடையாது என்று அவர் சொன்னார். நம்முடைய வீரர்கள்,காக்கி உடையில் நம்முடைய தூதர்களாக இயங்கவேண்டியவர்கள், சட்டத்துக்கு அடங்காதவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீலங்காவின் உச்சநீதிமன்றம் என்பது அமைதிப்படையினருக்கு வெறும் காகிதப் புலியா? தவறான தகவல்களின் அடிப்படையில் இது திரித்துக் கூறப்பட்டதாகவும் இருக்கலாம். அப்படியானால் இதற்கு விடை, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்வதுதான். அவர்கள் நம்முடைய ஜவான்கள் மீதும் அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். -என்று வி.ஆர்.கிருஷ்ணய்யர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். (தமிழ் வாய்ஸ் இன்டர்நேஷனல்-செப்டம்பர் 1989).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக