'தெரியாதா தெரியாதா தமிழ் இனித் தெரியாதா'கனடாவின் ஸ்காபறோ அட்லாண்டா மண்டபத்தில் கணினி மூலம் தமிழ் கற்பித்தல் பட்டறை கனடா எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது . இதில் ஏறக்குறைய 30 ஆசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.இலண்டன் கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழக கணினித் துறையில் பணிபுரியும் பேரா.சிவா பிள்ளை * இதனை வெகு சிறப்பாக நடத்தினார். "பவர் பாய்ண்ட் என்னும் மென்பொருள் மூலம் தயாரித்த பல ஒளிப்படங்களையும், விடியோ சிறு துண்டுகளையும் பயன்படுத்தி நல்லதோர் பட்டறையை தயாரித்திருந்தார்.வழக்கமான சம்பிரதாய முறைகளைப் பின்பற்றாமல் பேச்சு ,எழுத்து ,வாசிப்பு என்ற முறைகளைப் பின்பற்றி மாணவரைக் கவரும் வகையில் எவ்வாறு விளையாட்டுப் போன்று கற்பிக்கலாம் என நல்ல பல உதாரணங்களைக் காட்டிச் சிறப்பாகச் பட்டறையை நடத்திய விதம் பலரும் பாராட்டும் விதமாக இருந்தது.ஓர் எழுத்தை அறிமுகம் செய்யும்போது அவ்வெழுத்தைக் கொண்ட பல சொற்களை திரும்பத் திரும்பக் காட்டி உச்சரிப்பதன் மூலம் மாணவரது மனதில் பதியவைக்கலாம் என்பதை வலியுறுத்தினார்.இவ்வாறே புதிய சொற்களை அறிமுகம் செய்து பின் சிறு வசனங்களுக்குச் செல்லலாம் என விளக்கிக் காட்டினார்.பல வண்ணங்களில் சொற்கள் வந்து போவது ,மின்னி மறைவது போன்றவற்றை நல்ல ஓசையுடன் திரையில் காண்பித்தது சிறப்பாக இருந்தது. நவீன தொழில் நுட்ப முறையில் எவ்வாறு இலகுவாகவும் விறுவிறுப்பாகவும் தமிழைக் கற்பிக்கலாம் எனக் காட்டியது எல்லோரையும் கவர்ந்தது. தற்போது எமது சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் சினிமாவைப் பயன்படுத்தி எவ்வாறு மணவர்களிடையே தமிழ் கற்கும் ஆவலைத் தூண்டலாம் என இவர் கையாண்ட முயற்சியும் அனைவரின் பாராட்டுக்குரியதாகவும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது.பல்லூடகப் பயன்பாடு....சிவா பிள்ளை, தெரிந்ததில் இருந்து தெரியாததைச் சொல்லிக் கொடுப்பதில் கணனி மற்றும் பல்லூடகப் பயன்பாட்டை விளக்கினார். ஊரில் படித்தது போலவே அப்பாவின் படம், அம்மாவின் படம் எல்லாம் காட்டிப் கற்பிப்பதை விட, குழந்தைகள் தொலைக்காட்சியில் விரும்பிப் பார்க்கக்கூடிய கேலிச் சித்திரத் தொடர்களில் வரும் பாத்திரங்களை வைத்துக் கற்றுக் கொடுக்கலாம் என்றார். குடும்ப உறவுமுறைகளைப் பற்றிக் கற்பிப்பதற்கு அவர் உதாரணம் காட்டிய Simpsons கனடாவில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமானது என்றாலும் பல குழந்தைகளுக்கு Simpsons பற்றித் தெரியும். அதைப் பயன்படுத்த விரும்பாவிட்டால் கனடாவில் இன்னொரு பிரபலக் கேலிச் சித்திரத் தொடரான Arthur ஐப் பயன்படுத்தலாம். இந்தக் கேலிச் சித்திரங்களில் அம்மா, அப்பா, அண்ணா, தம்பி, தங்கை, தாத்தா, பாட்டி, மாமா என்று எல்ல உறவு முறைகளும் வருகின்றன. பிள்ளைகளின் மனதில் நிச்சயம் ஒரு ஆர்வம் தூண்டப்படும் அல்லவா?"தில்லானா மோகனாம்பாள்"பிரபலமான சில சினிமாப்பாடல்களை இசைக்கேற்ப சொற்களை மாற்றி நல்ல குரல் வளமுள்ளவர்களைக் கொண்டு பாடவைத்து தயாரிக்கப்பட்ட விடியோ காட்சிகள் அனைவரது பாராட்டுதலையும் பெற்றன.குறிப்பாக "தில்லானா மோகனாம்பாள்" படத்தில் வந்த 'நலந்தானா நலந்தானா' என்ற பாடலுக்கு பத்மினி ஆடிய நடனத்தைப் பயன்படுத்தி 'தெரியாதா தெரியாதா * தமிழ் இனித் தெரியாதா' என்ற பொருள் பொதிந்த பாடலைக் காண்பித்தது சிறப்பாக இருந்தது. இவ்வாறு வேறு சில பாடல்களும் செய்யப்பட்டிருந்தன.நீண்ட அனுபவமுள்ள ஆசிரியர் பலர் இறுதியில் நடந்த கலந்துரையாடலின் போது வெளியிட்ட கருத்துக்களில் இருந்து பட்டறையின் சிறப்புப் புலனாகியது.வாழையிலையில்....எமது மொழியையும் கலாசாரத்தையும் எமது வருங்காலச் சந்ததிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் பேராசிரியர் சிவாபிள்ளையவர்கள் காட்டிய அக்கறை பாராட்டுக்குரியது. வாழையிலையில் உணவு பரிமாறும் போது கறிகள் என்ன ஒழுங்கில் வைக்கப்படுகின்றன என்றும் உப்பு வைப்பதின் முக்கியத்துவம் பற்றியும் பேராசிரியர் கூறியது பலருக்குப் புதிய செய்தியாக இருந்தது. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதை அது குறித்தது என்றும் காரமில்லாத கறிகள் முதலிலும் பின்னால் காரமுள்ள எண்ணையில் தயாரித்தவை இடமிருந்து வலமாக வைப்பதை நன்கு விளக்கி, மொழியும் கலாசாரமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒரு இனத்தின் சின்னங்கள் என விளக்கினார்.ஒரு பழம் சாப்பிடும் சிறுவனின் படத்தைக் காட்டி ‘நான் சாப்பிடுகிறேன்' என்று சொல்லிக் கொடுக்கலாம். பழங்களின் படங்களைக் காட்டி ஒவ்வொரு பழங்களின் பெயர்களைச் சொல்லிக் கொடுக்கலாம். சற்றே பேச ஆரம்பித்த பிள்ளையிடம் ஒரு படத்தைக் காட்டி உனக்குத் தோன்றுவதைச் சொல் என்று கேட்கலாம். இப்படியாகப் பிள்ளையை முதலில் செயல்முறை மூலம் கேட்க, கிரகிக்க, சிந்திக்க, பேச வைப்பது மிகவும் அவசியம் என்பதாக சிவா பிள்ளையின் கற்பித்தல் முறை அரங்கிலிருந்த தமிழாசிரியர்களுக்கு கணினியில் தமிழ் கற்பித்தலுக்கான புதிய பரிணாமத்தை வெளிச்சமிட்டுக் காண்பித்தலாக அமைந்திருந்தது.எமது கலாசாரப் பழக்க வழக்கங்களை மறந்து புலம்பெயர் நாடுகளில் வாழும் நாம், எமது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டியது முக்கியம் என்றார். மொத்தத்தில் அன்றைய பட்டறை யாவருக்கும் பயனுள்ளதாக இருந்தது. டொராண்டோவில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் 100 பேருக்கு மேல் இருக்கிறார்கள் எனினும் அன்று வந்தவர்கள் சிலரே, என்பது வருத்தமானது என்று கருத்து பரிமாறிக்கொள்ளப்பட்டது.நிகழ்ச்சிக்கு சிவபாலு தலைமை தாங்கினார். இணையத்தின் முன்னாள் தலைவரும் இந் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவருமான சின்னையா சிவனேசன், பேராசிரியார் சிவாபிள்ளை அவர்களின் பெருமுயற்சியைப் பாராட்டிப் பேசினார்.அன்றைய நிகழ்ச்சிக்கு இடவசதியும் சிற்றுண்டி தேனீர் வசதியும் இலவசமாகத் தந்த அட்லாண்டா நிறுவனத்துக்கும் நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவெய்தியது.தொகுப்பு: துறையூரான், கிருத்திகன்,கனடா& ஆல்பர்ட்,விஸ்கான்சின், அமெரிக்கா.
உலகத் தமிழர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த செய்திகளை புகைப்படங்களுடன் dinamaninews@rediffmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக