சென்னை, அக். 23: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான இலட்சினை (லோகோ) சுனாமி பேரலைகள் சூழ திருவள்ளுவரின் படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் இதை முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதன் சிறப்பம்சங்கள் குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
""கடல்கோள்களை எதிர்கொண்டு, காலவெள்ளத்தைக் கடந்து சீரிளமைத் திறத்தோடு தமிழ்மொழி திகழ்கிறது என்பதைக் குறிக்கும் வகையில் சுனாமி அலைகளும், திருவள்ளுவர் திருவடிகளில் சுருளும் அழகிய பின்னணியில் இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் தனது மூன்று விரல்களில் காட்டிக் கொண்டிருக்கும் வகையிலான சிலை இதில் இடம்பெற்றுள்ளது. அறம், பொருள், இன்பம் என அவர் காட்டிய முப்பாலைக் குறிப்பிடும் வகையில் மூன்று விரல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிகச் சின்னங்கள்... உலகத் தொன்மையான நான்கு நாகரிகங்களில் திராவிட நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகமும் ஒன்று.
அதன் சின்னங்களும், குறியீடுகளும் திருவள்ளுவர் சிலையைச் சுற்றியுள்ள மேல்வட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இலச்சினையில் ஏழு குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏழு என்பது தமிழர்களுக்கு உரிய சிறப்பான எண்ணாகும்.
இந்த மாநாட்டின் எடுத்துரைக் குறிப்பாக (மோட்டோ) "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது அமைந்துள்ளது'' என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடம் என்பது பிற்காலத்த அயலவர்களால் தமிழுக்கு இடப்பெற்ற பெயர். சிந்து வெளி நாகரிகம் தமிழ் நாகரிகம் என்று சொல்வதே அறிவியல், வரலாற்று அடிப்படையிலான உண்மையாகும். செம்மொழி மாநாடு நடத்தும் பொழுது கூடத் தமிழின் சிறப்பும் பெயரும் புறக்கணிக்கப்படுவது மிகவும் வருந்தத்தக்கது. இனிமேலாவது தமிழர் நாகரிகத்தைத் தமிழர் நாகரிகம் எனறே குறிக்க வேண்டுமேயன்றித் திராவிடர் நாகரிகம் என்று குறிக்கக்கூடாது. இவ்வாறு வரலாற்றுப்பிழை புரிவோர் மாநாட்டுக் குழுவில் இடம் பெற்றால் செம்மொழித் தமிழ் மாநாடு என்று நடத்துவதில் பொருள் இல்லை என்பதை உரியவர்கள் உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
10/24/2009 3:14:00 AM