வியாழன், 22 அக்டோபர், 2009

கருணாநிதியின் துதிபாடத்தான் செம்மொழி மாநாடு: விஜயகாந்த்



சென்னை, அக். 21: ""தன்னைப் பற்றி தமிழறிஞர்களை துதிபாட வைக்கத்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முதல்வர் கருணாநிதி நடத்துகிறார்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் மொழியின் சிறப்புகளை உலகுக்கு எடுத்துரைக்கவும், ஆராயவும் உலகெங்கும் உள்ள தமிழர்களால் நடத்தப்படுவதே உலகத் தமிழ் மாநாடு. 9-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். ஆனால் இப்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
உலகத் தமிழ் மாநாடு நடத்த அகில உலக தமிழியல் ஆய்வு நிறுவனம் போதிய கால அவகாசம் கேட்டது. அந்த கால அவகாசத்தை தந்து 2011-ல் நடத்தியிருக்கலாம். ஆனால் ஏட்டிக்குப் போட்டியாக, அனுமதி தரவில்லை என்றால் வேறு பெயரில் நடத்துவேன் என்று அறிவிப்பது சரியல்ல.
உலகத் தமிழ்நாடு நடத்தும் சூழ்நிலை இப்போது இல்லை. சுமார் 3 லட்சம் தமிழர்கள் வெட்டவெளிச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
உலக நாடுகள் அனைத்திலும், பிழைக்க வழியின்றி தமிழர்கள் செத்து மடிகின்றனர். தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் தமிழர்களின் துயர்துடைக்க தங்களை அர்ப்பணித்துக் கொள்வது கடமையாகும். இதனை விட்டுவிட்டு இந்த நேரத்தில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்துவேன் என்று முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
1972-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு காவிரியை பறிகொடுத்தது. 1974-ல் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது. 1998-ல் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தடைபட்டது. இப்போது பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணை கட்டுகிறது. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அணை கட்ட கேரளம் ஆய்வு நடத்தி வருகிறது.
முதல்வர் கருணாநிதியின் நெடிய அரசியல் வரலாற்றில் எப்போது கேட்டாலும் யார் மீதாவது பழி போடுகிறாரே தவிர தமிழகத்துக்காக மத்திய அரசை எதிர்த்து போரிடும் துணிவும், தெளிவும் அவருக்கு இருந்ததில்லை.
இந்த துரோக வரலாற்றை திசைதிருப்பவும், தன் மீதான களங்கத்தை துடைக்கவும் கருணாநிதி கையாளும் தந்திரமே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.
தமிழர்களுக்காக தமிழர்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு தலைவர் நடத்துவதுதான் உண்மையான உலகத் தமிழ் மாநாடு. எப்படியாவது இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளில் சிக்கவைத்து கருணாநிதியை துதிபாட வைத்துவிட வேண்டும் என்பதற்காக அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய துரோக முயற்சிக்கு இடம் தரவேண்டாம் என்று தமிழறிஞர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக