மந்திரிக்கு அழகு வரும்பொருள் உரைத்தல் என்பது மூதுரை. ஆனால் மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ் ஆகிய இரு பெரும் அமைச்சர்களின் சமீபத்திய பேச்சுகள், இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்களாக இவர்கள் நடக்கவில்லையே என்கிற வேதனையைத்தான் வெளிப்படுத்துகின்றன.
மத்திய அரசில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் மெத்தப்படித்தவர். சிறந்த வழக்கறிஞர். விவாதங்களில் தன்னுடைய கருத்துகளை நயமாக எடுத்துரைப்பவர். ஆனால் இரு சந்தர்ப்பங்களில் அவருடைய பேச்சை அவரே மறுக்கும் அளவுக்கு நேர்ந்திருப்பது என்பது ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கும் அழகல்ல; பொறுப்பான அமைச்சருக்கும் அழகல்ல.
சில மாதங்களுக்கு முன்னால், பத்தாவது வகுப்பு மாணவர்களுக்கு இனி பொதுத் தேர்வு தேவையில்லை, அவர்கள் அப்படியே பதினோராவது வகுப்புக்குச் சென்றுவிடலாம் என்று பேசினார். உடனே நாடு முழுக்க அதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.
கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பித்தாலும் வேலைக்குச் சேர விரும்பினாலும் மாணவனுக்குப் படிப்பில் ஆர்வம் இருந்ததா என்பதை அறிய முதலில் பத்தாவது வகுப்பில் அவன் வாங்கிய மதிப்பெண்ணைப் பார்ப்பதும், மேல் படிப்பு படித்திருந்தால் அந்த ஆர்வம் அப்படியே தொடர்ந்திருக்கிறதா என்று ஆராய்வதும் இதுவரை வழக்கமாக இருந்து வருவதை அனைவரும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து தன்னுடைய கருத்தைத் திரும்பப் பெற்ற அமைச்சர் கபில் சிபல், ""வேண்டாம் என்றால் விட்டுவிடலாம் என்றுதான் சொன்னேன்; இனி தேவையே இல்லை என்று சொல்லிவிடவில்லை; நான் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது'' என்று பதில் அளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் இடம்பெற்றுள்ள கவுன்சில் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் கபில் சிபல், அந்தக் கூட்டம் முடிந்த பிறகு நிருபர்களைச் சந்தித்தார்.
பன்னிரெண்டாவது வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீதத்துக்கும் மேல் எடுத்தவர்கள்தான் ஐ.ஐ.டி. பொது நுழைவுத் தேர்வு எழுத முடியும் என்று இப்போது நிபந்தனை விதிக்கப்படுகிறது. இனி 80 சதவீத மதிப்பெண்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்று 2011 முதல் விதியைக் கடுமையாக்கப் போகிறோம். இதனால் நல்ல தரமுள்ள மாணவர்களால் மட்டுமே நுழைவுத் தேர்வையே எழுத முடியும், ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி தருகிறோம் என்று ஏராளமான பயிற்சி மையங்கள் வணிக ரீதியில் செயல்படுவதும் முடிவுக்கு வரும் என்று அறிவித்தார். இதற்கும் வழக்கம்போலவே கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
மாணவர்களின் அறிவுத்திறன் என்பது மதிப்பெண்ணில்தான் இருக்கிறது என்ற பழமையான மனோபாவம் இன்னமும் தங்களைவிட்டுப் போகவில்லை என்பதை கபில் சிபல் உள்ளிட்ட படித்தவர்கள் அடிக்கடி இப்படி நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். கணிதமேதை ராமானுஜம், அவர் வாழ்ந்த காலத்தில் கணிதத்தில் புலியாக இருந்தாலும் பிற பாடங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியாமல் தவித்ததை அவருடைய வரலாற்றிலிருந்து அறிகிறோம்.
புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்தும், கணக்காக இருந்தால் அடிக்கடி போட்டுப் பார்த்து அசுரப் பயிற்சி செய்தும் மதிப்பெண் வாங்குவது சாத்தியம்தான். இயல்பான அறிவுக்கூர்மையும் ஆராய்ச்சி மனப்பான்மையும் இத்தகைய தேர்வு முறைகளால் வெளிப்படாது என்பது அனுபவம் காட்டும் உண்மை. அறிவியல் ஆராய்ச்சியாளர்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிப் படிப்பை முறையாகப் படித்தவர்களே அல்லர் என்பது வரலாறு. எனவே மதிப்பெண்ணைக் கட்டிக்கொண்டு அழாமல் வேறு வகையில் மனித ஆற்றலை வளர்க்கவும் எடை போடவும் அமைச்சர் முயல வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
எதிர்ப்பு அதிகமானதும் வழக்கம்போலவே அமைச்சர் பின்வாங்கியிருக்கிறார். நுழைவுத்தேர்வுக்கான தகுதியை நிர்ணயம் செய்வது ஐ.ஐ.டி. கவுன்சிலின் வேலை; என்னுடைய வேலை அல்ல என்று இப்போது கூறுகிறார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி, கலாசார சூழல், படிப்பதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. மேற்கு வங்க மாநிலம்தான் கல்வியில் சிறந்த மாநிலமாக ஒரு காலத்தில் இருந்தது. இப்போது மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஏழைக் குழந்தைகளுக்காக 16 வயது மாணவர் பாபர் அலி நடத்தும் பகுதிநேரப் பள்ளிக்கூடத்தில் 600 பேர் படிக்கின்றனர் என்று லண்டனைச் சேர்ந்த பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனமே பாராட்டியிருக்கிறது. கல்வி வசதி எந்த அளவுக்கு இன்னமும் உரிய வகையில் போய்ச் சேரவில்லை என்பதற்கும் இது நல்ல உதாரணம். மூர்ஷிதாபாத் போன்ற பகுதிகளுக்கு தரமான கல்வியை எடுத்துச் செல்ல என்ன வழி என்று சிந்தித்துச் செயல்படுவதே கபில் சிபல் போன்றவர்களுக்கு அழகு.
மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், உலக வர்த்தகப் பேச்சு வார்த்தைகளில் இந்தியா தன்னுடைய தேவைகளுக்காக மட்டும் பேச வேண்டும்; வளரும் பிற நாடுகளுக்கு வக்கீலாக இருக்கக்கூடாது என்று பிரதமருக்கே கடிதம் எழுதியதாக வெளியான தகவல் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அவரும் தான் அப்படிச் சொல்லவில்லை என்று கூறி மறுத்துவிட்டார்.
நேரம் குறைவு, அறுவடையோ மிகுதி என்ற தேவ வசனத்தை மத்திய அமைச்சர்கள் நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அமைச்சர் பதவியில் உள்ள பொன்னான மணித்துளிகளை வெற்று சர்ச்சைகளில் விரயமாக்காமல் முடிந்த அளவுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள் என்றே கூற விரும்புகிறோம்.
இப்படிப்பட்ட நல்ல சிந்தனை அமைச்சர்களுக்கு ஏன் வருவதில்லை? வராவிட்டால் போகிறது! தங்களுடைய உளறல்களை ஏன் அவ்வப்பொழுது உதிர்க்கிறார்கள்? உதிர்த்துவிட்டுப் போகட்டும்! ஊடகங்கள் ஏன் அவற்றிற்கு முதன்மை அளிக்கின்றன?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
10/22/2009 3:12:00 AM