சனி, 24 அக்டோபர், 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-144: சுய நிர்ணய ஆட்சி அல்லது சுதந்திரத் தமிழ் ஈழம்!



மார்ச் 31-க்குள் இந்தியப்படை திரும்பும் என்று பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபிறகு, வடக்கு - கிழக்கு மாகாண கவுன்சிலின் முதலமைச்சர் சென்னைக்கும் தில்லிக்கும் பயணம் மேற்கொண்டார். இந்திய அமைதிப்படை திரும்புவதற்கு முன்பாக வடக்கு - கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களைப் பெற்றுத்தரவும், மக்களின் பாதுகாப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்து தரவும் வேண்டும் என வலியுறுத்தினார்.
தில்லியில் அவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், சென்னை வந்து தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை மீண்டும் சந்தித்தார்.
ஈழத் தமிழர்கள் மீது அமைதிப்படை இழைத்த கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று தெரிவித்த முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் இணக்கமாகி, வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தைப் புலிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார் (சுதந்திர வேட்கை-அடேல் பாலசிங்கம் பக்-334).
இதன் பின்னர், ஈபிஆர்எல்எஃப் இயக்கத் தலைவர் பத்மநாபா கையெழுத்திட்ட 25 பிப்ரவரி 1990 தேதியிட்ட மனு ஒன்றை அவர், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் அளித்ததோடு, பத்திரிகைகளுக்கும் விநியோகித்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அமைந்த வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தை நிலை நிறுத்த இதுவரை 600 பேரைப் பலி கொடுத்திருப்பதாகவும், இந்த ஆட்சியின் மூலம் மக்களுக்கு நன்மை செய்வதில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் அமைப்பின் தாக்குதல் மற்றும் பிரசாரங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மதிக்கவும் செயல்படுத்தவும் இலங்கை தயாராக இல்லாத நிலையில், இதனைச் செயல்படுத்தவே இம் மனு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை அரசு ஒரு காலமும் தமிழரின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளாது என உறுதியாகத் தாம் நம்புவதாக அம்மனுவில் ஈபிஆர்எல்எஃப்-வினர் தெரிவித்தனர்.
அம் மனுவில் பிரேமதாசா அரசின் அணுகுமுறை குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது. பிரேமதாசா மிகவும் தந்திரமாக, தமிழர் குழுக்களுக்கிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், மாகாண அரசைக் கலைத்துவிட்டு, திரும்பவும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுவதின் நோக்கம் வெளிப்படையானது. இந்த வடக்கு-கிழக்கு மாகாண அரசைக் கலைப்பது மற்றும் தேர்தல் நடத்துவதன் மூலம் அவர் லாபமடையப் பார்க்கிறார். பிரேமதாசாவின் கட்சிக்கு தற்போதைய மாகாண கவுன்சில் நிர்வாகத்தில் ஒரேவொரு இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது. தேர்தல் என்று வந்தால் இந்த எண்ணிக்கை உயர்ந்து 15-லிருந்து 16 இடங்கள் வரை கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.
தற்போதுள்ள மாகாண கவுன்சிலில் தமிழ்க் கட்சிகள் 55 இடங்களைப் பெற்றிருக்கின்றன. தேர்தல் என்று வந்தால் இந்த எண்ணிக்கை 48-க்கும் கீழ் செல்லும் என்றும் அவர் நம்புகிறார்.
மேலும், தேர்தல் வந்தால் இதன்மூலம் அதிகாரப் பரிமாற்றம் குறித்துள்ள பிரச்னையும், சிங்களக் குடியேற்றப் பிரச்னையும் தமிழர் பகுதிக்கு போலீஸ் படைப் பிரச்னையும் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்றும் அவர் நம்புகிறார்.
தேர்தல் மூலம் ஸ்ரீலங்காவின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த முடியும் என்றும் பிரேமதாசா நினைக்கிறார். தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் இருக்கின்றன. புதிதாகத் தேர்தல் வந்தால் எட்டு அல்லது பத்து இடங்கள்தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் என்றும் அவர் கணக்குப் போட்டுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் வந்தால் தமிழ்க் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டு, ரத்த ஆறு ஓடட்டும் என்றும் விரும்புகிறார். இதன் மூலம் சிங்களப் பேரினத்தின் மீதான தமிழர்களின் தாக்குதல் பலவீனமடையும் என்றும் நம்புகிறார் என்றும் விவரிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈபிஆர்எல்எஃப் தந்த அம் மனுவில் சில விருப்பங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன. (அ) வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் வழங்குவதுடன், மக்களின் பாதுகாப்புக்கும் உறுதி செய்ய அனைத்துத் தமிழர் கட்சிகளும் பாடுபடுவது; இதற்கான முயற்சியை தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி மேற்கொள்வது; (ஆ) மேற்கண்டவற்றைச் செய்ய இலங்கை அரசுக்குக் காலக்கெடு விதிப்பது; (இ) இதற்கென ஒரு குழு அமைப்பதுடன் அதை மத்திய அரசு (இந்தியா) கண்காணிக்க வகை செய்வது; (ஈ) இவ்வகையான முயற்சிகள் எதுவும் வெற்றிபெறாத நிலையில், "சுதந்திரத் தமிழீழம்' என்கிற ஜனநாயக வழியிலான நாட்டை இந்திய அரசு அங்கீகரிப்பதுடன் இதற்கான அனைத்து ஒத்துழைப்பு மற்றும் உதவி அளிப்பது ஆகியவற்றைத் தெரிவித்திருந்தது.
இதுதவிர, ஒற்றையாட்சி முறையில் உண்மையான வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் அமையும்போது அதிகாரப் பரிமாற்றம், நிதிவசதி, குடியேற்றம், தமிழ் மாகாண எல்லை வரைவு, காவல் பணி, வடக்கு-கிழக்கில் தங்கியிருப்போருக்கான திட்டமிட்ட வாக்குரிமை, நிதியாதாரம் பெருக்குவதற்குண்டான அதிகாரம், வெளிநாட்டு ஏஜென்சிகள் வெளியேறுவது உள்ளிட்ட 19 அம்சங்கள் கொண்ட யோசனைகளும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மேலும், இடைக்கால அரசு குறித்த யோசனை ஒன்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள மாகாண கவுன்சில் அரசை அதன் போக்கில் அனுமதித்து, 1991 மார்ச்சில் தேர்தலை நடத்துவது என்றும் இவ்வாறான நிலையில் யாரும் ஆயுதங்களைக் கையாளக்கூடாது என்றும், அல்லது தற்போதுள்ள வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் நிர்வாகத்தில் அனைத்து தமிழ்க்குழுக்களும் பங்குகொண்டு 55 இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்றும் இந்த இடங்களைப் பகிர்வு செய்வதில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி முடிவுப்படி செயல்படுவது என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லது, விடுதலைப் புலிகள் தனித்து ஆட்சி புரிய விரும்பினால் தங்களது 38 இடங்களையும் அளித்துவிட்டு நிர்வாகத்திலிருந்து, விலகிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக அம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இறுதி வாசகமாக, "ஒற்றையாட்சி அடிப்படையில் என்றால் தமிழர்களே ஆளும் சுய நிர்ணய ஆட்சி; இல்லையென்றால், சுதந்திரத் தமிழீழம்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நாளை: புலிகளின் இரண்டு கோரிக்கைகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக