புதன், 21 அக்டோபர், 2009

தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்காது: முதல்வருக்கு வைகோ கடிதம்சென்னை, அக். 20: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்காது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் முதல்வர் கருணாநிதிக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்: 2010 ஜூன் மாதம் கோவையில் தமிழக அரசு நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், எங்கள் இயக்கம் பங்கேற்க அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளீர்கள்.
1966-ல் தொடங்கி, இதுவரை நடைபெற்ற எட்டு மாநாடுகளும் உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரிலேயே நடந்துள்ளன. இப்போது தமிழக அரசு நடத்த உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அத்தகைய மாநாடு அல்ல.
உலகத் தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கு இதுவரை கடைபிடிக்கப்பட்ட விதிகள், மரபு இவற்றுக்கெல்லாம் மாறாகவும், உலகத் தமிழ் மாநாடு என்பதற்கான ஒழுங்கு நியதியைப் புறந்தள்ளும் வகையிலும்தான் கோவை மாநாடு அமையும்.
மேலும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஆற்ற முடியாத துயரத்திலும், துக்கத்திலும் ஆழ்ந்துள்ளனர். இலங்கைத் தீவில் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலை, தமிழ் இன வரலாற்றிலேயே எப்போதும் நடைபெறாத பேரழிவாகும்.
சிங்களவர்கள் நடத்திய இனப் படுகொலை யுத்தத்துக்கு, இந்திய அரசு ஆயுதங்களையும், அனைத்து உதவிகளையும் வழங்கி, தமிழ் இனத்துக்கு துரோகம் செய்தது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் தமிழக அரசு தவறியது.
இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு நடத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ம.தி.மு.க. பங்கேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக