வியாழன், 17 செப்டம்பர், 2009

இந்திய உதவிகள் தமிழர்களுக்குக் கிடைத்ததா?:
இலங்கையிடம் கேட்க கருணாநிதி கோரிக்கை



சென்னை, செப். 16: இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா அளித்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும், அவை தமிழர்களுக்கு கிடைத்ததா என்பதை இலங்கை அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்'' என்று மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து புதன்கிழமை கேள்வி -பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கைத் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த ஆஸ்திரேலிய அரசு ரூ. 15 கோடி அளித்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் புனர் வாழ்வுக்காக இந்திய அரசு ரூ. 500 கோடி வழங்கியுள்ளது. தமிழகத்தின் சார்பில் ரூ. 25 கோடி மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்கள் வழங்கியதோடு, ரொக்கமாக ரூ. 25 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளோம். இலங்கைத் தமிழர்களுக்காக இந்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படும்? என்ற விவரங்களை இலங்கை அரசிடம் இருந்து இந்தியா கேட்டுப்பெற வேண்டும். அண்ணா நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் இது பற்றி பேசியுள்ளேன். அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் கேட்டுக் கொண்டதால் வேளாண்மை மன்ற ஒழுங்குமுறை சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி நிறுத்தி வைத்திருப்பது சட்டத்தை ரத்து செய்வதற்கான முன்னுரைதான் என்பதை சில கட்சிகள் புரிந்து கொண்டுள்ளன. அதனால்தான் அந்தச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று சில கட்சிகள் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றன. இந்தச் சட்டம் சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்டபோது யாரும் எதிர்ப்பு தெரிவித்து பேசவில்லை. சட்டம் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகுதான் அதனை ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர். சிதம்பரத்துக்கு பாராட்டு: ""உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை'' என்று தில்லியில் நடைபெற்ற உயர் காவல் அதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றதில் காவல் துறையினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் பெரும் பங்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டி ப. சிதம்பரத்தை பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் நடராஜர் ஆலய நிர்வாகத்தை தமிழக அரசின் அறநிலையத் துறை எடுத்துக் கொண்டது சரியே என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. ""கோயில் பணம் முறைகேடு செய்யப்பட்டது; 400 ஏக்கர் நிலம் குறித்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தெரியாமல் இருப்பது; நிர்வாக அதிகாரியின் நியமனத்துக்குப் பிறகு ஏற்பட்ட மேம்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு நிர்வாக அதிகாரியின் நியமனத்தில் இந்த நீதிமன்றம் தலையிட்டால், பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயிலைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து தவறி விடுவது போலாகும்'' என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால்கூட, என்ன நடக்கும் என்பதற்குதான் முன்கூட்டியே தில்லை நடராஜர் தன் காலைத் தூக்கிக் காட்டியிருக்கிறார். ஊதிய விகிதங்களில் இந்தியாவிலேயே கடைக்கோடி நிலைக்கு தாழ்ந்துபோன கசப்பான அனுபவம் தமிழக அரசு ஊழியர் இயக்கத்துக்கு உண்டு என்ற கருத்தை தமிழக அரசு ஊழியர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் திமுக ஆட்சியில் தான் வழங்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் சம்பளக் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட போதெல்லாம் அதன்படி சம்பளத்தை திமுக அரசு உயர்த்தியது. சட்டப்படி சந்திக்கும்: அங்கன்வாடி பணியாளர்களுக்கு திமுக ஆட்சியில் மூன்று முறை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 3,780-ம், அதிகபட்ச ஊதியமாக ரூ. 4,134-ம் பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பளம் அதிகம் வழங்கப்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்களில் சிலர், தூண்டுவோருக்கு இணங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அதனை தமிழக அரசு சட்டப்படி சந்திக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துக்கள்

கனிமொழிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வரை இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டு இருப்பார் என்று காங்.அரசுக்கும் தெரியும். அப்படியே கேட்டாலும் சிங்கள அரசு என்ன விடை தரும் என்பதும் இவர்களுக்குத் தெரியும். அப்படியே தெரியாவிட்டாலும் சொல்லிக் கொடுக்க மேனன்கள் நாராயணன்கள் உள்ளார்கள் என்றும் தெரியும். ஆனால் இதையெல்லாம் படித்து மக்களை ஏமாற்றலாம் என்னும் முயற்சி தவறு என்றுதான் இவருக்குத் தெரியவில்லை. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 2:56:00 AM

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக