சனி, 19 செப்டம்பர், 2009

3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்கள் தவிப்பு



பொ. அழகுராஜ்தேனி, செப். 18: தமிழகத்தில் ஓவிய ஆசிரியர் பட்டம் பெற்ற 3 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்படாததால் அவர்களுடைய எதிர்காலம்கேள்விக் குறியாகி உள்ளது. சென்னை எழும்பூர், கும்பகோணம் ஆகிய இரு இடங்களில் அரசு கவின் கலைக் கல்லூரிகள் (ஓவியக் கல்லூரி) செயல்பட்டு வருகின்றன. சென்னை கல்லூரி சென்னை பல்கலைக் கழகத்துடனும், கும்பகோணம் கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் இரண்டும் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இவ்விரு கல்லூரிகளிலும் டி.எப்.ஏ. (Diplomo In Fine Arts) என்ற பட்டயப்படிப்பு 1988 வரை கற்பிக்கப்பட்டது. பின்னர் இப்படிப்பு பி.எப்.ஏ (Bachelor Of Fine Arts) என்ற பெயரில் பட்டப் படிப்பாக மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், பட்டயப் படிப்புக்கு இருந்த பாட திட்டம் மற்றும் 5 ஆண்டு காலமே பி.எப்.ஏவுக்கும் இருந்தது. இப்படிப்பில் சேருவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதே அடிப்படைக் கல்வித் தகுதியாக இருந்தது, 2003-க்குப் பின்பு அடிப்படைத் தகுதி பிளஸ் 2-வாக மாற்றப்பட்டு, படிப்பின் கால அளவும் 4 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. ஆனால் பாட திட்டத்தில் மாற்றமில்லை. பணி நியமனம்: பட்டயப் படிப்பு (டி.எப்.ஏ) முடித்தவர்கள், ஓவிய ஆசிரியர் சான்றிதழ் படிப்பை (டி.டி.சி) விட கூடுதல் கல்வித் தகுதியாக கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1989-ம் ஆண்டு முதல் அரசின் உத்தரவுப்படி ஓவிய ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டனர். இதேபோல் அஞ்சல் வழிக் கல்வி மூலமோ அல்லது ஏதாவது ஓர் ஓவிய ஆசிரியரிடம் சென்று மனித உருவம், பூக்கள், கணித வடிவங்கள், டிசைன் ஆகிய 4 மட்டும் வரையக் கற்றுக் கொண்டு, அரசு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நடத்தும் மேல்நிலைத் தேர்வை எழுதி வெற்றி பெற்றோ, அதன் மூலம் 3 மாத கால ஓவிய ஆசிரியர் சான்றிதழ் படிப்பு (டி.டி.சி.) முடித்தவர்களும் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பணி நியமனம் இல்லை: ஆனால் ஓவிய ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டாலும் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். இதனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பி.எப்.ஏ பட்டம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்துள்ள 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக கவின் கலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் பி.நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மற்றும் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமார் 225 பேர் பி.எப்.ஏ. படித்து முடித்து வெளியே வருகின்றனர். 1994 முதல் ஒருவர் கூட ஓவிய ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படவில்லை. திருச்சி மற்றும் சென்னை பல்கலைக்கழகம் இரண்டுமே ஓவியப் பட்டயப் படிப்பும் (டிஎப்.ஏ), பட்டதாரி (பி.எப்.ஏ) படிப்பும் ஒன்று தான் எனவும், வேலை வாய்ப்பு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளன. அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிஎப்.ஏ முடித்தவர்கள் ஓவிய ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஓவிய ஆசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் செல்லும் போது, ""டி.எப்.ஏ என்ற பட்டயப் படிப்பை பி.எப்.ஏ என பெயர் மாற்றம் செய்த பின்பு, அரசாணையை திருத்தம் செய்து, ஓவிய ஆசிரியப் பணி வழங்க ஆணை எதுவம் வரவில்லை'' என்று கல்வித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால் அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு, ஓவிய ஆசிரியர் பட்டம் பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்க வேண்டும். இல்லையெனில் இப்பட்டம் பெற்றோர் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றார்.

கருத்துக்கள்

ஓவியம்,இசை,உடற்பயிற்சி,நூலகம் இவற்றுக்கென மாணவர்களுக்குக் கட்டாயம் நேரம் ஒதுக்கி அவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்வது அவசியம். -அரிமா இளங்கண்ணன்(US)

By P.Balakrishnan
9/19/2009 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக