வெள்ளி, 18 செப்டம்பர், 2009

தலையங்கம்: உலகளவு உவகை!



இதனினும் இனியதொரு செய்தி இருக்க முடியாது. 14 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என்கிற அறிவிப்பு உண்மையிலேயே தேன்வந்து காதில் பாய்ந்த உணர்வை ஏற்படுத்துகிறது. இப்போது பாரதி இருந்திருந்தால் துள்ளிக் குதித்திருப்பார். பாரதிதாசன் வாழ்ந்திருந்தால் வாழ்த்தி மகிழ்ந்திருப்பார். தவத்திரு தனிநாயகம் அடிகள் கேட்டிருந்தால் பேருவகை அடைந்திருப்பார். இந்த ஒரு செய்தியைக் கேட்கத்தானே தமிழ் நெஞ்சங்கள் ஒரு மாமாங்கமாகத் துடித்தன. உலகத் தமிழ் மாநாடு என்பது தவத்திரு தனிநாயகம் அடிகளின் எண்ணத்தில் மலர்ந்த அற்புதமான விஷயம். 1964-ம் ஆண்டு தில்லியில் அகில உலகக் கீழ்த்திசை ஆய்வு மாநாடு ஒன்று நடந்தது. அதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மொழி வல்லுநர்கள் வந்திருந்தனர். அந்த அறிஞர் கூட்டத்தில் தமிழ் மொழியின் சார்பில் கலந்து கொள்ள பிரான்ஸ் நாட்டிலிருந்து ஜுன்பிலயோசா, இங்கிலாந்திலிருந்து டி. பர்ரோ, நெதர்லாந்திலிருந்து எல்.பி.ஜே. கைப்பர், ஜெர்மனியிலிருந்து ஹெர்மன் பெர்கர் போன்றோருடன் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், மு. வரதராசனார், வ.அய். சுப்பிரமணியம் மற்றும் தனிநாயகம் அடிகளார் போன்றோரும் இருந்தனர். அப்போது, தமிழுக்கென்று உலக மாநாடு ஒன்று நடத்த வேண்டும் என்கிற தனது எண்ணத்தைத் தவத்திரு தனிநாயகம் அடிகளார் வெளிப்படுத்தியது மட்டுமன்றி செயல்படுத்தவும் செய்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டதன் பின்னணி அதுதான். தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால்தான் முதல் தமிழ் மாநாடு 1966-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் கோலாலம்பூரில் கோலாகலமாகத் தொடங்கியது. அந்த முதலாம் உலகத் தமிழர் மாநாட்டுக்கு முதல்வர் பக்தவத்சலம் மட்டும் செல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரா. நெடுஞ்செழியனும், தமிழரசுக் கட்சித் தலைவரான ம.பொ. சிவஞான கிராமணியாரும் ஏனைய தமிழறிஞர்களுடன் கலந்துகொண்டனர். இரண்டாண்டுக்கு ஒருமுறை இதேபோல உலகத் தமிழ் மாநாடு தொடர்ந்து நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டபோது 1968-ம் ஆண்டு நடைபெற வேண்டிய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்த அன்றைய முதல்வர் பக்தவத்சலம் ஏற்றுக்கொண்டு உறுதி அளித்தார். 1968-ல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தபோதும், பக்தவத்சலத்தின் உறுதிமொழியை அரசியல் பாராட்டி உதாசீனப்படுத்தாமல் சி.என். அண்ணாதுரை தலைமையில் அமைந்த திமுக ஆட்சி நிறைவேற்ற முன்வந்தது. அதுமட்டுமல்ல, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் கருத்திருமனின் முழு ஒத்துழைப்பும் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு இருந்தது. அவரே ஒரு கருத்தரங்கத்துக்குத் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர்கள் கு. காமராஜும், பக்தவத்சலமும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். கட்சி மனமாச்சரியங்களை மறந்து "தமிழ்' என்கிற பெயரில் அனைவரும் அண்ணாவுடன் கைகோர்த்து நின்று அந்த இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை வெற்றியடையச் செய்தது தமிழர்தம் சரித்திரத்தில் அழியா நினைவு! கடந்த உலகத் தமிழ் மாநாடு தஞ்சையில் நடந்து முடிந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகள், ஆய்வேடுகள், அடுத்த தலைமுறை தமிழறிஞர்களின் பங்களிப்புகள் என்று மொழி வளம் பெற்றிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இதுபோல உலகளாவிய தமிழ் ஆராய்ச்சிக்கு ஒரு பொதுமேடை கிடைத்தால் மட்டுமே, ஆரோக்கியமான தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். தவத்திரு தனிநாயகம் அடிகளை இந்தவேளையில் நினைவுகூராமல் இருக்க முடியவில்லை. முதல் நான்கு மாநாடுகளைச் சிறப்பாக நடத்திய பெருமைக்குரியவர் அவர். சிங்கள ஆதிக்கம் அதிகரிப்பதையும், அதனால் இலங்கையில் தமிழர்கள் இன்னலுறுவதையும் பொறுக்காத தனிநாயகம் அடிகள், இலங்கை அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட்டார். அதனால் அரசு அவரை காவல், கண்காணிப்பு என்று பயமுறுத்த எத்தனித்தது. உடனே, கொழும்புப் பல்கலைக் கழகத்தில் தான் தங்கியிருந்த அறையைக் காலி செய்துவிட்டுத் தமிழகம் வந்துவிட்டார் தனிநாயகம் அடிகள். அதன் பிறகு அவரது வாழ்க்கை தமிழ், தமிழ் மொழி என்பதாகவே கழிந்தது. ஒரு மொழிக்காக உலகளாவிய மாநாடு நடத்தும் முதல் முயற்சிக்குச் சொந்தக்காரர் தவத்திரு தனிநாயகம் அடிகள்தான். உலகிலேயே தமிழ் மொழிக்கு உலகளாவிய மாநாடு நடத்தப்பட்டதற்குப் பிறகுதான் சம்ஸ்கிருதம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கு மாநாடுகள் நடந்தன. ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாடு நடக்கும்போது, அந்தத் திடல் தவத்திரு தனிநாயகம் அடிகளின் பெயரால் வழங்கப்பட வேண்டும். அங்கே ஆய்வரங்கம் சமீபத்தில் இறைவனடி சேர்ந்த வ.அய். சுப்பிரமணியம் பெயரால் அமைய வேண்டும். மாநாட்டுப் பந்தல், நூற்றாண்டு விழா கண்ட அறிஞர் அண்ணாவின் பெயர் தாங்கி இருத்தல் வேண்டும். இவையெல்லாம் "தினமணி' சார்பில் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கைகள். தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சரித்திர நிகழ்வு நடைபெற இருக்கிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் தங்களது தாயகமான தமிழகத்தின்மீது குவிய இருக்கிறது. இந்த நேரத்தில் அரசியல் மனமாச்சரியங்களை விடுத்து 1966-லும், 1968-லும் இருந்த தமிழ் உணர்வுடன் கட்சி வேறுபாடுகளை மறந்து அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பது எதிர்க்கட்சியினருக்கு "தினமணி' விடுக்கும் வேண்டுகோள். 14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி!

கருத்துக்கள்

தினமணி அளவு கடந்து துள்ளிக் குதிப்பது ஏன் என்று புரியவில்லை. மொழி இல்லையேல் இனம் இல்லை. இனம் இல்லையேல் மொழி இல்லை. உலகெங்கும் தமிழினம் அழிக்கப்படுகின்றது. இந்தியாவில் தமிழ் இனம் ஒடுக்கப்படுகின்றது. ஈழத் தமிழினம் அழிக்கப்படுவது குதித்த தன் கவலையைத் தினமணி வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால், தமிழினத்தலைவர்களான பெரியாரின் 131 ஆவது பிறந்தநாள் குறித்ததோ பேரறிஞரின் 100 ஆம் ஆண்டு நிறைவு குறித்தோ எவ்வகைப் பதிவையும் மேற்கொள்ள வில்லை. தினமணி தடம் புரளக் கூடாது. நல்ல படைப்பாளிகளை ஆசிரியராகக் கொண்டிருந்த தினமணியில் நல்ல பேச்சாளரும் ஆசிரியராக அமர்ந்ததுள்ளார். எனவே, தினமணி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்துத் தமிழினத் தலைவர்கள் குறித்த பதிவை ஆசிரியருரையில் மேற்கொள்ள வேண்டும். செய்யும் என எதிர்பார்க்கலாமா? ஆர்வத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2009 3:22:00 AM

SENTHAMIZHE...UYIRE....NARUNDHENE.....ENKAL MUDHALVANE.... 9-VADHU ULAGA TAMIZH MAANADU NADATHUM NEER VAZHIYA ...VAZHIYAVE.....TAMIZH MAKKAL ANAIVARUM SANGAMIPPOM...BY TANJAI R.RAJESHKANNAN.......DUBAILIRUNDU.....

By RAJESH PARIMALA..RAM
9/18/2009 2:45:00 AM

You guys don't understand this. To take Eelam from peoples' mind our CM has started this.

By Muthu
9/18/2009 1:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக