செவ்வாய், 15 செப்டம்பர், 2009

அண்ணா படித்த பள்ளியின் அவல நிலை



சென்னை, செப். 14: பேரறிஞர் அண்ணா படித்த பள்ளி, இப்போது அவல நிலையில் காட்சி தருகிறது. செவ்வாய்க்கிழமை (செப்.15) அவரது நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் தமிழக அரசு, இந்தப் பள்ளியின் மீது கவனம் செலுத்துமா? என அனைத்துத் தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர். பேரறிஞர் அண்ணா, சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் இருக்கும் பச்சையப்பன் கிளை நடுநிலைப் பள்ளியில் தமது தொடக்கக் கல்வியைப் படித்தார். அவர் படித்தபோது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அந்தப் பள்ளியில் இருந்தது. ஆரம்பப் பள்ளியாக இருந்து, பிறகு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு பெற்றது. இப்போது, பச்சையப்பன் கிளை நடுநிலைப் பள்ளி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. கால ஓட்டத்தில் தேங்கியது... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தப் பள்ளியில் 400 முதல் 450 மாணவர்கள் வரை படித்து வந்தனர். ஆங்கில மோகம், மெட்ரிக் பள்ளிகளின் அதிகரிப்பு போன்றவற்றால் அண்ணா படித்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. அப்போது, "அண்ணா படித்த பள்ளி' என்று மாணவர்களிடம் ஈர்ப்பை உருவாக்கவோ, பள்ளியின் தரத்தை கூட்டவோ எந்த விதத்திலும் அரசு முயற்சிக்கவில்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ""நாங்கள் வேலை செய்தபோது, 14 ஆசிரியர்கள், 450 மாணவர்கள் இருந்தனர். இப்போது அது மிகவும் குறைந்து விட்டது. அண்ணா இருந்திருந்தால் இந்தப் பள்ளி மேம்பட்டிருக்கும். சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயில 2 கி.மீ. தூரம் செல்ல வேண்டியுள்ளது. பச்சையப்பன் பள்ளியையே உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். இதன் மூலம், மாணவர்கள் எண்ணிக்கை உயரும்'' என்கிறார் அந்தப் பள்ளியில் 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஏகாம்பரம். என்ன சிக்கல்? நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அரசு பல விதிகளை வகுத்துள்ளது. அதன்படி, 8-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்புச் செல்ல குறைந்தது 50 மாணவர்களாவது இருந்தால், நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தலாம். மேலும், பள்ளிக்கான நிலம், பொது மக்கள் பங்களிப்புடன் குறிப்பிட்ட அளவுத் தொகை இவற்றையும் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால், நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும். இது அரசு விதி. காலத்தின் சுழற்சியில், அண்ணா படித்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், அண்ணா மீதுள்ள ஈர்ப்பைக் காட்டி எண்ணிக்கையை அதிகரித்து இருக்க வேண்டும். "அரசு நினைத்தால் நிலம் மற்றும் பணத்துக்கான ஏற்பாடுகளை எளிதாகச் செய்யலாம். ஆனால், அதைச் செய்ய அரசு தவறிவிட்டது' என்று குற்றம்சாட்டுகின்றனர் காஞ்சி நகர மக்கள். ""அரசு நிதியுதவிடன் 6 முதல் 8 வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 4 ஆசிரியர்கள், 126 மாணவர்கள் உள்ளனர். 9 மற்றும் 10-ம் வகுப்புகளைத் தொடங்கினால் அரசு நிதியுதவி கிடைக்காது. அரசு நிதியுதவி வழங்கினால், இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தலாம். இதன் மூலம் சின்ன காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன் பெறுவர்'' என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கி.வடிவேலு. அண்ணாவின் புகழைப் பாட... அண்ணா மறைவுக்குப் பிறகு, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துவரும் அவரது உடன்பிறப்புகள் அவர் படித்த பள்ளியைப் பற்றி கவலைப்படவே இல்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர் காஞ்சிபுரம் நகர வாசிகள். அண்ணாவின் நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்ட ஏற்பாடுகளுடன் தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இந்தத் தருணத்தில், அவர் படித்த ஆரம்பப் பள்ளியை சீரமைக்க அரசோ அல்லது பச்சையப்பன் அறக்கட்டளையோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துக்கள்
பேரறிஞர் அண்ணா படித்த பள்ளியை உடனே சீராக்க வேண்டும். அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் சீராக்க வேண்டும். இவற்றைத் தலையாய தொண்டாகக் கருத வேண்டும். விழா என்ற பெயரில் மேற்கொள்ளும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தாலேயே பல நல்ல திட்டங்களை மேற் கொள்ளலாமே! அண்ணா இன்றிருந்தால் தமிழும் விடுதலை அடைநதிருக்கும்! ஈழத் தமிழர்களும் விடுதலை யடைந்திருப்பார்கள்! காங்.கின் காலடியில் தமிழகம் அடகு வைக்கப்பட்டிருக்காது. குடும்பப் பதவிகளுக்காகத் தன்மானத்தை இழந்து தமிழ் மானத்தைச் சிதைக்கும் அவலங்கள் அரங்கேறியிருக்காது. காங்.ஐ வீழ்த்திய அறிஞரின் வழியில் கழகக் கண்மணிகள் சென்று வெற்றி காணட்டும்.! வாழ்க அண்ணாவின் புகழ்! வாழிய தமிழ்நாடு! வாழிய தமிழ் ஈழம்! வாழிய மக்கள்! ஓங்குக உலக ஒற்றுமை!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2009 2:36:00 AM

Good Job Mr. Karunanithi and Miss J.Jayalalitha

By Sami
9/15/2009 2:09:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக