புதன், 16 செப்டம்பர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 108:
பிரபாகரனைக் கைது செய்யுங்கள்!



இந்தியாவுக்கு, விடுதலைப் புலிகளின் வெளித் தொடர்புகள் குறித்து ஐயம் எழுந்தது. பிரபாகரனுக்கு இலங்கைப் பிரதமர் பிரேமதாசா, ""இந்தியா இனி உதவாது; அவர்களை நம்புவதைவிடத் தன்னை நம்பலாம்'' என்று செய்தி அனுப்பியுள்ளதாகவும் இந்திய உளவுப் பிரிவு நம்பியது. அதுமட்டுமல்ல, சென்னையில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கிறார் என்றும் நம்பியது. இவர்கள் இவ்வாறு தொடர்பு கொள்கிற விஷயம் இந்தியாவுக்குத் தெரியும் என்றும், இதனால் விடுதலைப் புலிகளுக்கு விளையும் நன்மைகளைவிட, தீமைகளே அதிகமாகச் சம்பவிக்கும் என்றும், இத் தொடர்புகள் ஒப்பந்தத்தைப் பாதித்தால் அது நன்றாக இருக்காது என்றும் பிரபாகரனிடம் தெரிவிக்குமாறு இந்தியத் தூதுவர், தளபதி மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்குக்கு அறிவுறுத்தியதாகத் தகவல்கள் உண்டு. (ஆதாரம்: "இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா' - மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்) இந் நிலையில், பொதுமன்னிப்பு வழங்கப்பட்டும் எந்தவித வழக்குமின்றி இலங்கைச் சிறைகளில் சுமார் 1,300 பேர் அடைபட்டிருப்பது குறித்து விடுதலைப் புலிகள் அமைப்பு கேள்வி எழுப்பியது. இந்தத் தகவலை தீட்சித் கவனத்துக்குக் கொண்டு வந்ததும், அதில் புலிகள் எத்தனை பேர் என்று பட்டியல் கொடுத்தால் உடனடியாக விடுதலை செய்துவிடலாம் என்று ஜெயவர்த்தனா கூறுவதாகத் தெரிவித்தார். ஆனால் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்ல விடுதலைப் புலிகள் விரும்பவில்லை. அப்படிப் பெயர் கொடுக்கப்பட்டால் அதுவே அவர்களுக்கு மரணவோலை ஆகிவிடும்; அவர்கள் மீது வீணான வழக்குகள் புனையப்படலாம்; வெளியே விட்டுசுடப்படலாம்; மோதலை ஏற்படுத்தி சாகடிக்கவும் செய்ய வாய்ப்புண்டு - என்று பல வகைகளிலும் யோசித்து பெயர் கொடுக்கும் யோசனை புலிகளால் நிராகரிக்கப்பட்டது. எனவே அனைவரையும் விடுவிக்கவேண்டும் என்று பொதுவில் கோரிக்கை வைத்தனர். உடனே தீட்சித் சொன்னார், ""விடுதலைப் புலிகள் 8 சிங்கள வீரர்களைக் கைதுசெய்து வைத்திருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யும்படி அரசு கேட்கிறது; அவர்கள் விடுவிக்கப்பட்டால் 1,300 பேரை விடுவிப்பது குறித்துப் பேசலாம்'' என்றார். 8 சிங்களக் கைதிகளின் விடுதலையும் நடைபெறவில்லை; 1,300 பேர் விடுதலையும் நடைபெறவில்லை. ""பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் பகுதியில் அரசுக்குள் ஓர் அரசு என்ற நிலையில் அந்தப் பகுதியை நிர்வகித்து வந்தார்களாதலால் அவர்களது குரலே எடுபட்டது. மக்கள் தொடர்புத்துறை அவர்களிடம் வலுவாக இருந்தது. அவர்களிடம் குறைந்தது மூன்று தினசரிகள் அச்சக வசதியுடன் இருந்தது என்றே மதிப்பிடுகிறேன். சொந்த வானொலி நிலையம் மற்றும் சொந்தமாகத் தொலைக்காட்சி நிலையம் ("நிதர்சனம்' என்கிற பெயரில்) ஆகியவற்றை இயக்கி வந்தனர். இதன் வீச்சை யாழ்ப்பாணப் பகுதியின் குக்கிராமங்களிலும் காணமுடிந்தது. இது தவிர, யாழ்ப்பாணத்தின் முன்னாள் தளபதியாக இருந்த கிருஷ்ணகுமார் என்கிற கிட்டு, ஒரு காலை இழந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது தலைமையில் சென்னையில் தொலைத் தொடர்பு வசதி கொண்ட அமைப்பு இயங்கியது. இதன்மூலம் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளுக்கு உடனுக்குடன் செய்தி பரிமாறிக்கொள்ள அவர்களால் முடிந்தது. தினமும் செய்தி வெளியீடுகளை வெளியிட்டுக்கொண்டே இருந்ததால், உடனுக்குடன் அவர்களது செய்தி உலகம் முழுவதும் வெளியாகிக்கொண்டிருந்தது. ஒரே நாளில் பல செய்தி வெளியீடுகளை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக அமைதிப்படையின் செயல்பாடுகளும், அதன் ராஜதந்திர நடவடிக்கைகளும் உடனுக்குடன் உலகுக்குத் தெரிந்துவிடுகின்றன'' என்று தீபிந்தர் சிங் தனது நூலில் (பக்.91) குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் இரவு (செப்டம்பர் 14/15-1987) தூதுவர் தீட்சித், ஹர்கிரத் சிங்கை போனில் அழைத்து, "நாளை பேச்சுவார்த்தைக்கு வரும் பிரபாகரனைக் கைது செய்யவேண்டும் அல்லது சுட்டுக்கொன்றுவிட வேண்டும்' என்று சொன்னதும், அதிர்ந்துபோன தளபதி ஹர்கிரத் சிங், அமைதிப் படைத்தலைவர் தீபிந்தர் சிங்கிடம் இதைத் தெரிவித்துவிட்டு, இதற்கான பதிலைப் பின்னர் சொல்வதாகக் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். மறுநாள் தீட்சித்திடம், ஹர்கிரத் சிங் போனில் தொடர்பு கொண்டு, "இந்திய ராணுவம் பாரம்பரியப் பெருமை கொண்ட அமைப்பு. இப்படிப்பட்ட ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரன், முதுகில் சுடமாட்டான். அதுவும் வெள்ளைக்கொடியுடன் சமாதானப் பேச்சுக்கு வரும் நிலையில் கொல்வது அழகல்ல என்று தளபதி சொல்லச் சொன்னார். எனவே, உங்களது வழிகாட்டுதலின்படி என்னால் நடக்க இயலாது' என்றார். மேலும் ஹர்கிரத் சிங் கூறுகையில், "விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை நாம்தான் பேச்சுவார்த்தைக்கு - அதாவது ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த என்று அழைத்திருக்கிறோம்' என்றும் நினைவுபடுத்தினார். உடனே தீட்சித், "அவர்தான் (ராஜீவ் காந்தி) இந்த உத்தரவுகளை எனக்குப் போடுகிறார். ராணுவம் அவரது காலை வாரிவிடக்கூடாது. நீங்கள் அமைதிப்படையின் தளபதி. நீங்களே இதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டும்' என்று கடுமையான குரலில் உத்தரவிட்டார். அடுத்த நாள் இந்திய ராணுவத்தின் (பொது) இயக்குநராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் பி.சி.ஜோஷி போனில் தொடர்புகொண்டு, எனது நிலைக்குப் பாராட்டு தெரிவித்தார். ஆனால், அதே நேரம் எனது செயல்பாட்டுக்காக ராணுவத் தளபதி சுந்தர்ஜி கடுமையாகக் கோபித்துக்கொண்டார்.' (இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா - மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங். பக்.57) இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பதே கேள்விக்குறியான நிலைமை என்பதை மேற்கண்ட நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.நாளை: திலீபன் உண்ணாவிரதம்! ஹர்கிரத் சிங், வே.பிரபாகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக