செவ்வாய், 15 செப்டம்பர், 2009

தமிழில் பேசும் உரிமையைப் பெற்றுத் தரவில்லை:
கருணாநிதி மீது செயலலிதா குற்றச்சாட்டு



சென்னை, செப். 14: நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பேசும் உரிமையை பெறுவதில் முதல்வர் கருணாநிதி மெüனம் சாதிக்கிறார் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மிகத் தொன்மையும், வரலாற்றுப் பின்னணியும் கொண்ட தமிழ் மொழி, தன்னால்தான் செம்மொழி ஆக்கப்பட்டது என முதல்வர் கருணாநிதி கூறிக் கொள்கிறார். ஆனால் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழி மூலம் நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சர் பேச முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் ஓர் அமைச்சகம் தொடர்பான வினாக்கள், கவன ஈர்ப்பு தீர்மானங்கள், ஒத்திவைப்பு தீர்மானங்கள் ஆகியவற்றுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தத் துறை அமைச்சருக்கு உண்டு. அந்த வகையில் ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு, அந்த துறையின் அமைச்சர் மு.க. அழகிரியை சாரும். சென்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது ரசாயனம் மற்றும் உரத் துறை தொடர்பான வினாக்கள் வந்த போதெல்லாம், அமைச்சர் அழகிரி அவையை விட்டு ஓடி ஒளிந்து கொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகவும், அந்த துறையின் இணையமைச்சர் பதில் அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறு துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், ஒவ்வொரு முறையும் அமைச்சர் அவையை விட்டு ஓடுவதன் காரணமாக உறுப்பினர்கள் எரிச்சலடைந்து, "ஓடி ஒளிந்து கொள்ளும் அமைச்சர்' குறித்து குரல் எழுப்பியதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கேட்டு மக்களவைச் செயலகத்திற்கு அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்று கூறி, அழகிரியின் கோரிக்கையை மக்களவைச் செயலகம் நிராகரித்து விட்டது. இதன் காரணமாக, ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் வாயில்லா பூச்சியாகச் செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை நீடித்தால், மத்திய அமைச்சர் தன்னுடைய ஆழ்ந்த கருத்துகளை, யோசனைகளை எப்படி நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க முடியும்? ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர, பிற பிராந்திய மொழிகளில் பேசும் உரிமை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் உண்டு என்றும், அமைச்சர்களுக்கு இல்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். உறுப்பினர்களுக்கே இந்த வசதி இருக்கும்போது, அமைச்சர்களுக்கு ஏன் செய்து தரக் கூடாது? இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் அமைச்சராகச் செயல்பட முடியாமல், பொம்மையாக இருக்க வேண்டியதுதானா?கருணாநிதி தவறி விட்டார்: தமிழ் மொழி, செம்மொழி என்று சொல்லி, தன் மகள் கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பேச உரிமை இல்லை என்பதைப் பார்த்துக் கொண்டு வாய்மூடி மெüனியாக இருக்கிறார். தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து கொண்டு, தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டிய தன்னுடைய கடமையிலிருந்து கருணாநிதி நழுவிவிட்டார். "உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்பதெல்லாம் வெறும் வாயளவில் மட்டும்தான் என்பதை கருணாநிதி நிரூபித்து விட்டார். "வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்று ஏட்டளவில் சொல்லிப் பயன் இல்லை. தமிழ் வீழுகின்ற இந்தச் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதே சிறந்த வழி என ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருத்துக்கள்

கட்சி சார்பில்லாமல் தமிழுக்காகக் குரல் கொடுத்ததற்காக முன்னாள் முதல்வரைப் பாராட்ட வேண்டும். தி.மு.க.வும் தமிழக அரசும் அமைதி காப்பது ஏன்? மடல் போக்குவரத்தால் பயனும் இல்லை. தனிப்பட்ட ஒரு கட்சியின் அமைச்சருக்கு ஏற்பட்ட இழுக்கு அன்று. தமிழகம் தலைகுனிய வேண்டிய செய்தி. இந்தியா நம் நாடு என்றால் நம் நாட்டு மக்களால் மிகுதியான வாக்கு பெற்றுத் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவர் அமைச்சுப்பதவியில் இருப்பதைக் காரணம் கூறி நம் மொழியில் பேசத்தடை விதிப்பது முறையன்று. பதவி விலகுவது என்பதும் தீர்வு ஆகாது. அமைச்சரவையில் இதற்கான குரல் கொடுத்து வெற்றி காண வேண்டும். அனைத்துக்கட்சிகள் சார்பாகவும் அமைப்புகள் சார்பாகவும் இதற்குக் கண்டனக் குரல் கொடுக்க வேண்டும் .'ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்ய்க வந்தால் சாக இந்தியா என்று சாற்றிடுவோம்' எனச் சொல்வோருக்கு வேலை கொடுக்காமல் மத்திய அரசு எல்லா நிலைகளிலும் தமிழுக்குச் சம உரிமை தர வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/15/2009 2:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக