வியாழன், 17 செப்டம்பர், 2009

ஜெயலலிதா மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன: சி.பி.ஐ. பதில் மனு



சென்னை, செப். 16: பிறந்த நாள் பரிசு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன என்று சி.பிஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெளிநாடுகளில் இருந்து பிறந்த நாள் பரிசாக காசோலைகள் மூலம் ரூ. 2 கோடி வந்தது. அரசுப் பதவியில் இருந்த ஜெயலலிதா இந்தப் பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்தாமல் தனது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தியதாகப் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சி.பிஐக்கு மாற்றப்பட்டது. சென்னையிலுள்ள சி.பிஐ. வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்து சி.பி.ஐ. தரப்பில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம்: பிறந்த நாள் பரிசு தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்த பிறகு, வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கை இழுத்தடிப்பதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்த சி.பிஐக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில், பிறந்த நாள் பரிசு வழங்கியவர்களில் 26 பேர் அரசுப் பதவிகளில் உள்ளவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் அளித்த ரூ. 1.26 கோடியை முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய போதிய ஆதாரங்கள் உள்ளன என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 7-ம் தேதிக்கு நீதிபதி முகமது இசாத் அலி ஒத்திவைத்தார்.

கருத்துக்கள்

இது போன்ற வழக்குகளில் காலக் கெடு வைத்து விரைவில் முடிக்க வேண்டும். வழக்கை நீட்டிப்பது குற்றமற்றவருக்கு வழங்கப்படும் தண்டனையாகும; குற்றமற்றவருக்கு வழங்கப்படும் பரிசாகும். ஆதலின் இனி மேலாவது கால வரம்பை வரையறுக்க வேண்டும்.

நீதி வேண்டும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக