புதன், 16 செப்டம்பர், 2009

தமிழை வளர்க்கவில்லை; பிழைப்புக்காகப் பயன்படுத்துகின்றனர்



ஒசூர், செப்.15:செந்தமிழ்த் தகுதி பெற்ற பின்னரும், தமிழை பிழைப்புக்காக பயன்படுத்துகிறார்களே தவிர, அதை உலக அளவில் கொண்டு செல்ல எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று செம்மொழி ஆய்வு மைய பொறுப்பு அலுவலர் க. இராமசாமி கூறினார். ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் அவர் பேசியது: தமிழைச் செம்மொழி ஆக்கியதோடு அப்பணி நின்றுவிட்டது. அதன் தொடர் நடவடிக்கையாக தமிழை, தமிழ் பண்பாட்டை, தமிழ் இலக்கியத்தை, தமிழ் அகராதிகளை, தமிழ் நூல்களை உலக அளவிற்கு கொண்டு செல்ல எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. தமிழ் இலக்கியத்தை ஒரு சதவீதம் கூட மொழி பெயர்ப்பு செய்யவில்லை. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தும் அதை முழுமையாக பயன்படுத்தவில்லை. தமிழ் இலக்கியங்களை பல மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டும். கன்னடம், தெலுங்கு, சீன மொழி, ஜப்பான் மொழி, ரஷ்ய மொழிகளில் தமிழை மொழி பெயர்ப்பு செய்வதன் மூலம் நாம் தமிழை வளர்க்க முடியும். உலக அளவில் திருக்குறள், அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், இலக்கணம், அகராதி உள்ளிட்டவைகளை பல மொழிகளுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அப்போதுதான் உலக அளவில் தமிழ் மொழி வளரும். அண்ணாவும், பெரியாரும் கண்ட கனவை நாம் நிறைவேற்ற வேண்டுமானால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம், தமிழ் பல்கலைக் கழகம் மட்டும் உருவாக்கியதோடு நின்றுவிடாமல் உலக அளவில் தமிழைக் கொண்டுச் செல்ல தமிழ்ச் செம்மொழி அறிவிப்பினால் முடியும். இதற்கு மத்திய அரசு தேவையான நிதியைத் தருகிறது. எனவே முயற்சி மட்டுமே தேவை என்றார். விழாவில் ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி.ரங்கநாத், எம்.ஜி.ஆர் கல்லூரி முதல்வர் பொன். சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்கள்

உண்மையைத்துணிந்து கூறி விட்டார். மொழிகளில் முதன்மையாயும் தாய்மையாயும் செம்மையாயும் அமைந்த தமிழின் செம்மொழித் தகுதியை ஏற்று மத்திய அரசு அறிவிக்க முழுமுதற் காரணமாக இருந்தவர்களில் பேராசிரியர் முனைவர் க.இராமசாமியும் ஒருவர். அத்தகைய வினைத்திறம் மிக்கப் பேராசிரியர் நொந்து கூறியுள்ளார். இனியேனும் விழிக்கட்டும் அரசு! வேதனையுடன்இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
9/16/2009 4:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக