சென்னை, செப். 16: ""தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் ஈவு இரக்கமின்றி தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை (செப். 12) தனுஷ்கோடி அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீதும், ஞாயிற்றுக்கிழமை (செப். 13) மண்டபம் பகுதியிலிருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களிடமிருந்து இறால் உள்ளிட்ட மீன்வகைகளையும், உடைமைகளையும் பறித்துச் சென்றுள்ளனர். இதுபோன்ற கொடுமைகள் நிரந்தரமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
கருத்துக்கள்
இவர் பேச்சுக்கே மதிப்பு கிடையாது. கலைஞர் பாணியைப் பின்பற்றி மடல் அனுப்பும் பொழுது போக்கில் இறங்குகிறாரா? முதலில் தமிழ் உணர்வாளராக, மனித நேயராக மாறட்டும். இவரது கருத்துகளுக்குத் தானாக மதிப்பு ஏற்படும். மக்களை ஏமாற்ற மலிவு விளம்பரத்தில் இறங்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
9/17/2009 2:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/17/2009 2:34:00 AM