ராகுல் காந்தியின் மூன்று நாள் தமிழகச் சுற்றுப்பயணத்தின் விளைவாகத் தமிழகக் காங்கிரஸின் கோஷ்டிகள் மறைந்து, ஒற்றுமை ஏற்பட்டுவிடும் என்று ராகுல் காந்தியேகூட எதிர்பார்த்திருக்க மாட்டார். மூன்று நாள் தமிழகப் பயணத்தின் விளைவாகத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி, திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்றாக வளரும் அளவுக்குப் பலம் பெற்றுவிட்டது என்றும் யாரும் நம்பவில்லை. ஆனால், நிச்சயமாக அவரது சுற்றுப்பயணம் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை. கோஷ்டிப் பூசல் மட்டுமே காங்கிரஸின் பலவீனத்துக்குக் காரணம் அல்ல. சுதந்திரத்துக்கு முற்பட்ட காங்கிரஸ் கட்சியிலேயே, ராஜாஜி கோஷ்டி என்றும் சத்தியமூர்த்தி கோஷ்டி என்றும் காங்கிரஸ் செயல்பட்டு வந்திருக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகும் ராஜாஜி, பக்தவத்சலம், சி. சுப்பிரமணியம் போன்றோர் ஓர் அணியாகவும், காமராஜ், கக்கன், ஆர். வெங்கட்ராமன் போன்றோர் இன்னோர் அணியாகவும்தான் செயல்பட்டனர். ஆனால், இந்தக் கோஷ்டிப் பூசல் கட்சியைப் பலவீனப்படுத்தாதற்குக் காரணம், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கட்சி, தேசம் என்று வரும்போது அந்தத் தலைவர்கள் கைகோர்த்துக் கொண்டனர் என்பதுதான். தமிழகத்தில் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கோஷ்டிகளாகத்தான் இயங்கி வருகிறது. இதை உள்கட்சி ஜனநாயகத்தின் ஆரோக்கியமான வெளிப்பாடு என்றுகூட சில காங்கிரஸ் தலைவர்கள் பெருமை பாராட்டிக்கொள்வது உண்டு. இந்தக் கோஷ்டிப் பூசல்கள் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு பல மாநிலங்களிலும் தடையாக இருப்பதில்லை. அதற்குக் காரணம், காங்கிரஸ் என்பத0ு தனது தொண்டர்களையும், தலைவர்களையும்விட அந்தக் கட்சியின்மீது நம்பிக்கை வைத்திருக்கும் வாக்காளர்களை நம்பிச் செயல்படும் இயக்கம் என்பதால்தான். தமிழகத்திலும்கூட, திமுக 1972-ல் பிளவுபடாமல் இருந்திருந்தால், ஒருவேளை 1977-ல் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கக்கூடும். நியாயமாகப் பார்த்தால், திராவிட இயக்கக் கட்சிகளுக்கு மாற்றாக தேசிய இயக்கமான காங்கிரஸ்தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜின் மறைவுக்குப் பிறகு அடித்தட்டு மக்களின் ஆதரவைப் பெற்ற, வட்டார அளவில் செல்வாக்குப் பெற்ற தலைவர் எவரும் அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இல்லாமல் போனதுதான், காங்கிரஸ் கட்சி எதிர்கொண்ட மிகப்பெரிய பின்னடைவு. மேலும், 1969-ல் ஏற்பட்ட காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு, மாநில அளவில் எந்தத் தலைவரும் செல்வாக்குப் பெற்றுவிடாமல் அந்தக் கட்சியின் மத்தியத் தலைமை பார்த்துக் கொண்டதும் காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்திவிட்டது. திமுக மற்றும் அதிமுக என்று மாறிமாறி கூட்டணி வைத்துக்கொண்டு வெற்றி பெறும் மனப்போக்கு அதிகரித்ததும், வெற்றி பெற்ற தொகுதிகளையே மீண்டும் மீண்டும் கேட்டுப் பெற்றுத் தக்க வைத்துக் கொள்வதால் பல தொகுதிகளில் அடிமட்ட அமைப்போ, செயல்பாடோ இல்லாமல் போனதும்கூட காங்கிரஸýக்கு ஏற்பட்ட பலவீனத்துக்கு மிகப்பெரிய காரணம். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இந்தப் பலவீனம் ஏற்படாததற்குக் காரணம் காங்கிரஸ் தொகுதிகளை மாற்றிக் கொள்ளாமல் இருந்ததுதான். தில்லி மேலிடத்தின் நியமனங்களும், தில்லி தலைமையிடம் உள்ள நெருக்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களே மீண்டும் மீண்டும் போட்டிபோட்டு வெற்றியடையும் போக்கும் காங்கிரஸ் கட்சிக்குத் தோரணம் கட்டக்கூடத் தொண்டன் இல்லாத நிலைமையை ஏற்படுத்திவிட்டது. ஒரு கட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை என்கிற பெயரில் போலி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட கேலிக்கூத்து காங்கிரஸ் கட்சியில் மட்டுமே நடக்கக்கூடிய நகைப்புக்கு இடமான ஒன்றாகத் திகழ்ந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ராகுல் காந்தியின் மூன்று நாள் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கு உறுப்பினர் சேர்க்கை என்பது முறையாகத் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய அடையாள அட்டையுடன் நடத்தப்படுகிறது. வட்டம், மாவட்டம் என்றெல்லாம் இல்லாமல், சட்டப் பேரவைத் தொகுதி மற்றும் மக்களவைத் தொகுதி என்று இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்குப் புது வடிவம் தரப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, தனியார் நிறுவனத்திடம் உறுப்பினர்கள் சேர்க்கை சரிபார்க்கும் பணி தரப்பட்டு போலி உறுப்பினர்கள் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர்களின் மேற்பார்வையில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. மொத்தத்தில், உண்மையான உள்கட்சி ஜனநாயகம் இளைஞர் காங்கிரஸில் ஏற்பட ராகுல் காந்தி வழிகோலி இருக்கிறார். இதன் தொடர்விளைவாக, தமிழ்நாடு காங்கிரஸ் மற்றும் அகில இந்தியக் காங்கிரஸிலும் நூறு சதவிகித உள்கட்சி ஜனநாயகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கருதுகிறார். ராகுல் காந்தியின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் சாத்தியமா? இதனால் எல்லாம் காங்கிரஸ் புத்துயிர் பெற்று திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வலிமை பெற்றுவிட முடியுமா? இப்படி சந்தேகப்படுபவர்கள் உள்கட்சி ஜனநாயகத்தின் எதிரிகள். மக்களாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். ராகுல் காந்தி இளைஞர்கள் என்கிற காட்டுக்குள் ஒரு தீப்பொறியைப் பற்ற வைத்திருக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!
By Ilakkuvanar Thiruvalluvan
9/14/2009 7:16:00 AM
By sakthivelu
9/14/2009 6:39:00 AM
By avudaiappan
9/14/2009 6:38:00 AM
By Parthipan
9/14/2009 6:05:00 AM
By muni
9/14/2009 5:53:00 AM
By Ganesh
9/14/2009 5:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *