செவ்வாய், 15 செப்டம்பர், 2009

எழுச்சியுடன் நடைபெற்ற "தாயக தாகம்"

14 September, 2009 by admin

கனடாவின் கியுபெக் மாநிலத்தின் மொன்றியல் மாநகரில் நேற்று 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 3:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை கியுபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுத்த “தாயக தாகம்” நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழினப்படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம்

வதை முகாம்களில் அவலப்படும் எமது உறவுகளை மீட்டெடுத்து மீள் குடியேற்றுவோம்

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்

எனும் சத்தியத்துடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.

மண்ணில் விதைத்த மறவர்களிற்கும் அன்னை மண் இழந்த தமிழர்களுக்குமான வணக்கத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து வரலாறு சொல்லும் பாடமும் வதைமுகாம் துயரமும் கண்காட்சியும் , ஓவியர் புகழேந்தியின் உயிர் உறைந்த நிறங்கள் ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது. அத்துடன், இரத்தவெறி பிடித்த இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிப்போம் எனும் பரப்புரையும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊடகத்துறையைச் சார்ந்தவர்களும் மற்றும் பல்லின சமூகத்தைச் சார்ந்தவர்களும் பங்குபற்றியிருந்ததுடன். சிறப்புரைகளையும் வழங்கியிருந்தனர்.

தொடர்ந்து மாலை 6:00 மணியளவில் தேசியக்கொடியேற்றலுடன் எழுச்சி நிகழ்வுகள் ஆரம்பமாகியது. நிகழ்வில் ரொரன்ரோ மொன்றியல் கலைஞர்களின் எழுச்சிப்பாடல்களும் எழுச்சி நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு தமிழகத்திலிருந்து வெரித்தாஸ் வானொலி முன்னாள் பணிப்பாளரும் தமிழின உணர்வாளருமாகிய அருட்தந்தை ஜெகத்கஸ்பர் அடிகளாரும், தமிழின உணர்வாளர் ஓவியர் புகழேந்தி அவர்களும், மதிமுக பொதுச்செயலாளரும் தமிழின உணர்வாளருமான வை.கோபாலசாமி அவர்களும், தமிழின உணர்வாளர் சு.ப வீரபாண்டியன் அவர்களும் தமிழீழக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களும் சிறப்புரைகளை வழங்கியிருந்தார்கள்.

எமது இனம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லி பேரினவாத முகமூடியை கிழித்தெறிந்து சிங்கள தேசத்தின் சதிவலைகளை அறுத்தெறிந்து பொய்ப் பரப்புரைகளை பகுத்தறிந்து நாம் தமிழர் என்ற உணர்வோடு எமது தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமைக்கான எமது நீண்ட கடினமான பயணத்தில் எதிர்ப்படும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து உறுதியுடன் பயணிக்க தயாராக பெருமளவான தமிழீழ மக்கள் கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக