சனி, 19 செப்டம்பர், 2009

ஓயாத துயரில் ஓய்வூதியர்



வாழ்க்கையின் முதுமைக் கட்டம் மிகவும் பொல்லாதது. கோவணாண்டியிலிருந்து கோலோச்சிய அரசர்கள், அதிகாரிகள் வரை முதுமையின் கொடிய தாக்குதல்களிலிருந்து தப்புவதில்லை. முடியிழந்த பேரரசர் ஷாஜகான் தன் முதுமையைச் சிறையில் கழித்து ஏக்கத்துடன் முடிந்து போனார். முன்னாள் பிரதமர் இந்திய சுதந்திரப் போராளி மொரார்ஜிதேசாயின் அந்திக் காலம் மும்பையில் விளம்பர வெளிச்சம் படாத ஓர் அறைக்குள் அடைக்கலமாகி ஓசைப்படாமல் முடிந்திருக்கிறது. பணியிலிருந்து ஓய்வுபெறும்போது அரசுப் பணி நிழல் குடையை இழந்த அரசு ஊழியர் குடும்பப் பாரம், பொருளாதார நெருக்கடி, உடல் பலவீனம், நோய்கள் ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஆளாகிறார். அனலில் புழுவாக வேதனைகளை அனுபவிக்கிறார். சுமைகள் துயரங்களுடன் அவரது வாழ்க்கைப் பயணம் அந்தியை நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நகர ஆரம்பிக்கிறது. அரசு மூலம் முப்பதாண்டுகள் சமுதாயத்துக்குப் பணிபுரிந்த முன்னாள் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆதரவற்ற எளியவர்களுக்கு கருணை ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு ஓய்வூதியர்களுக்குக் கருணை ஓய்வூதியர்களைவிட சில உரிமைகள் இணைந்திருக்கின்றன. அந்த உரிமைகளின் அடிப்படையில் அரசு ஓய்வூதியர்கள் சங்கம், இயக்கங்கள் மூலம் தங்களது குறைகளைக் கோரிக்கைகளாக அரசின் முன்வைத்து வாதாடுகிறார்கள்; களம் இறங்கிப் போராடுகிறார்கள். கோரிக்கைகளின் நியாயங்களை உணர்ந்து தகுந்த முடிவு எடுத்து உதவுவது நல்லரசுகளின் தார்மிகக் கடமையும் ஆகிறது. முதலில் மத்திய அரசின் ஆறாவது சம்பள ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்களுக்கும் அரசு ஓய்வூதியர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பலன்கள் வழங்கப்பட்டபோது 2006-ம் ஆண்டுக்கு ரொக்க பலன் இல்லை என்றும், மீதமுள்ள ஆண்டுகளுக்கு நிலுவை கணக்கிடப்பட்டு மொத்த ரொக்கம் மூன்று தவணையாக வழங்கப்படும் என்று இறுதி செய்யப்பட்டது. அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு வளர்பிறை காலம். அவர்களால் சாதிக்க முடியும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு தேய்பிறை காலம். கரைந்து கரைந்து அமாவாசையாகி காணாமல் போகும் கட்டம் ஓய்வூதியர்களுக்கு. கரையும் முதுமை காலத்தில்தான் மிகப்பெரிய குடும்பப் பாரத்தைச் சுமக்க வேண்டியிருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகள் இருந்தால் ஓய்வுபெற்ற உடன் கிடைக்கும் சேமநலநிதி, பணிக்கொடை ஒப்படைப்புகளை ஆதாரமாக்கி ஒரு பெண்ணுக்குத் திருமணம் நடத்திச் சற்று இளைப்பாறலாம். அடுத்தவளுக்கு வரன் தேடும் போது மூத்தவள் தலைப்பேறு காலத்துக்கு பிறந்த வீடு வருவது சமூக மரபுகளின் கட்டாயம். அப்போதும் ஓய்வூதியருக்கு நிதிச்சுமைதான். எல்லாமே சுயநிதிப் படிப்பாகிவிட்ட காலகட்டத்தில் ஆண்பிள்ளைகளின் முற்றுப்பெறாத படிப்புக்கும், பல்லாயிரங்கள் செலவிட வேண்டிய மத்தள அடி. வீட்டின் மீது கடன், ஓய்வூதியத்தின் மீது கடன். ஸ்தாவர ஜங்கமங்களை விற்று அதன் வருவாயைக் கொண்டு மேற்படி செலவினங்களை ஈடுகட்ட வேண்டிய துயரக் காட்சிகள். ஒரு பவுன் உருப்படி தங்கம் ரூ. 15,000-ஐ எட்டி இறக்கைக் கட்டிப் பறக்கும்போது இளைய மகள் திருமணத்துக்குத் தேவையானவற்றைச் சேகரிக்க எத்தனித்து இடுப் பொடிந்து படுக்கையில் தஞ்சமாகிப் போகும் பல முதியவர்களின் துயரக்கதைகள் நல்லதங்காளை மிஞ்சுகின்றன. அல்லல்பட்டு ஆற்றாது ஊமையாய் கண்ணீர் வடிக்கும் முதியவர்களுக்கு 6-வது சம்பள ஆணையத்தின் பலன்கள் வெட்டாமல், சுருக்காமல் ஒட்டுமொத்தமாக வழங்கப்படுமானால் அமாவாசையை நோக்கி யாத்திரை செல்லும் ஓய்வூதியர்கள் தலையிலும் தோளிலும் முதுகிலும் சுமக்கின்ற குடும்ப பாரம் குறைந்து நிம்மதியாக மூச்சு விட்டு ஆனந்தப்படுவார்கள். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே. தூய தமிழ்த் துறவியின் மறைமொழி இது. மக்களின் வரிப்பணத்தை வருமான வரி கட்டுபவர்களுக்கும் இலவசங்களாய் அள்ளிக் கொடுத்து வள்ளல் பெயர் வாங்கும் சரித்திர மகா மனிதர்கள், ஓய்வூதியர்களுக்கு நியாயப்படியும், சட்டப்படியும் வழங்க வேண்டிய பலன்களை நிபந்தனை போட்டும், வெட்டியும், தட்டியும், துண்டு போட்டும், கைக்கெட்டியது வாய் கெட்டாமல் போகச் செய்வதில் சிறிதும் நியாயம் தென்படவில்லை. நிலுவை ரொக்கப் பலன் மூன்று தவணையாக வழங்கப்படுமாம். மூன்றாவது ஆண்டு தவணை ரொக்கம் வாங்குவதற்குள் 1/3 ஓய்வூதியர்கள் இல்லாமல் போய்விடுவார்கள். இரண்டாவது தவணை பெறுவதற்குள் 10 சதவீதம் பேர் இல்லாமல் போயிருப்பார்கள். உயிரோடு இருக்கின்ற காலத்தில் மகள் திருமணத்திற்கோ, மகன் படிப்பிற்கோ, பேரன் பேத்திகளின் பிறந்தநாள், காது குத்து வைபவங்களுக்கோ பயன்படாத ஓய்வூதிய நிலுவைப் பணம் மரணம் நேர்ந்தால் ஆகாயத்தில் பறக்கும் பஞ்சாகி வாரிசுகளுக்கும் கிட்டாமல் வங்கி, கருவூலக் கணக்குகளைத் தேடி முடங்கிப் போகும். முடங்கியதை மீட்பதற்கு வாரிசுகள் அரசு அலுவலகத் தாழ்வாரங்களிலும் வழக்குமன்ற வேப்பமர நிழல்களிலும் தவமிருந்து அதிகாரிகளின் கையெழுத்திற்காகவும் கருணைப் பிச்சைக்காகவும் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்யும் கொடுமைகள் நிகழ்வதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இதற்காகத்தான் முதியோரின் நிலுவைப் பணம் தவணைத் தாழிக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழாமல் இல்லை. இலவசங்கள் நாடாளலாம் என்பது தேர்தல் ஆணையம், நீதிமன்றங்கள், மத்திய அரசு ஏற்றுக் கொண்டு பாராட்டும் ஒரு ஜனநாயக அம்சம். ஒரு கோடி தமிழர்களுக்கு இலவச உயர் சிகிச்சை காப்பீடு திட்டம், மக்கள் வரிப் பணத்திலிருந்து ரூ. 517 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இலவசக் காப்பீடு பயனாளிகளுக்கு ரூ. 1 லட்சம் செலவில் நட்சத்திர தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்படுமாம். அரசு ஓய்வூதியர்கள் மாதம் ரூ. 50 தவணை செலுத்தி காப்பீடு பலனுக்குத் தகுதி பெற்றாலும் அவர்களுக்கு உயர் சிகிச்சைகளுக்கு உதவித்தொகை ரூ. 75,000 என்று குறைவாக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது கொடுமையிலும் கொடுமை. உச்சவரம்பு தொகையை ரூ. 1 லட்சமாக நிர்ணயிக்க பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. ஓய்வூதியர்களின் அந்திக் காலத்தில்தான் இருதயம், சிறுநீரகம், மூளை, முட்டு, வயிறு, குடல், கல்லீரல் நோய்களும் புற்றுநோயும், சர்க்கரை, ரத்தக்கொதிப்பு பாதிப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. ஓய்வூதியர்களில் உயர் சிகிச்சைக்கு காப்பீடு தொகை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதினால் காப்பீடு திட்டம் திவாலாகி விடலாம் என்பது அரசின் கணிப்பு. காப்பீடு கட்டணம் செலுத்தும் ஓய்வூதியர்களை இலவசங்களின் பட்டியலில் சேர்த்தாவது காப்பீடு பயன் ரூ. 1 லட்சம் அடையச் செய்வார்களா? 1970 - 1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில், அஞ்சலகச் சேமிப்பு கேந்திரங்கள் பொதுமக்களின் வைப்புத்தொகைக்கு 10 முதல் 12 சதவீத வட்டி வழங்கின. ஓய்வூதியர்கள் தங்கள் சேமிப்பை வங்கிகள், அஞ்சலகச் சேமிப்புப் பத்திரங்களில் முதலீடு செய்து வட்டியை வாங்கி மரியாதை காத்தனர். பணவீக்கம் பத்திரிகைச் செய்தியாகிப் பரவலாகப் பேசப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த காலத்தில் வங்கிகள் சேமிப்புக்கும் வைப்புத்தொகைக்கும் வழங்கிய வட்டியை 6 சதவீதம் முதல் 7 சதவீதம் என்று குறைத்து நிர்ணயித்தன. 1 லட்சம் முதலீட்டுக்கு மாதம் ரூ. 1,000 வட்டி வாங்கி வாட்டம் போக்கிக் கொண்ட ஓய்வூதியர்களுக்கு ரூ. 600 வட்டி வழங்கப்பட்டபோது அது அவர்களுக்கு பேரிடியாக இறங்கியது. இதனால் பலர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தனியார் நிதி நிறுவனங்களில் சேமிப்பை முதலீடு செய்து ஏமாந்து போனார்கள். ஆனால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கு (வீட்டுக்கடன் - பயிர்க்கடன் - வாகனக் கடன் தவிர்த்து) 14 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை கூட்டு வட்டி வசூலிக்கிறார்கள். இந்த முரண்பாடான நிதி ஆதார அணுகுமுறைகளினால் ஓய்வூதியர்கள் மத்தள அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உரலில் அகப்பட்ட தலையாக இருக்கிறது ஓய்வூதியர்களின் நிலைமை. சுமார் கால் நூற்றாண்டுக் காலம் தேச சமூக நிர்மாணப் பணிகளுக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கும் பெருமை அவர்களைச் சாரும். தேய்பிறை சகாப்தத்தில் குடும்ப பாரம், முதுமை நோய் - வலியைத் தாங்கிக் கொண்டு வாழ்கிறார்கள். மூதுரை கேட்பது, முதியோரை மதிப்பது, முதியோரை காப்பது - தலைசிறந்த தர்மம். விருது கொடுத்து அவர்களை கௌரவிக்க வேண்டாம். இலவசங்களை வாரி இறைத்து புதுவாழ்வு கொடுக்க வேண்டாம். அவர்களின் வரவு செலவுகளை சரிபார்த்து மீதியை வாழும் காலத்திலேயே வழங்கினால் தனது வாரிசுகளுக்குச் செய்ய வேண்டிய கடன்களை பூர்த்தி செய்து கொள்வார்கள். வலி கொடுக்கும் நோய்களுக்கும் நிவாரணம் தேடிக் கொள்வார்கள். சித்தர்கள் வர்ணிக்கும் சூன்யத்திலோ, நாத்திகர்கள் குறிப்பிடும் இயற்கை மரணத்திலோ, ஆத்திகர்கள் அழைக்கும் பரம பதத்திலோ சாந்தமுடன் ஐக்கியமாவார்கள்.(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் பேராசிரியர்)

கருத்துக்கள்

கட்டுரை ஓய்வூதியர்களின் சிக்கலை நன்கு எதிரொலிக்கிறது. கட்டுரையில் அந்திக் காலம் என்று குறிப்பிட்டஇடங்களில் அந்திமக் காலம் என்று இருக்க வேணடும். அந்த எண்ணத்தில்தான் கட்டுரையாளர் இதனை எழுதியிருக்கின்றார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 4:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக