வெள்ளி, 18 செப்டம்பர், 2009

பிரசுரித்த திகதி : 16 Sep 2009
எமது இனத்தின் அடையாளத்தை தொலைக்கப் போகிறோமா ?

மெல்ல மெல்ல சிங்களத்தின் ஆதிக்கத்தில் உட்பட்டு யாழ்ப்பாணம் மாறிவருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பாரம்பரியமாக தமிழர் வாழ்ந்த பூமி, சங்கிலியன் ஆட்சி, யாழ் கோட்டை மற்றும் நூலகம் என எல்லாம் அழிவுற்று தற்போது யாழ்ப்பாணம் தன் தனித்தன்மையையும் இழக்க ஆரம்பித்துள்ளதோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையம், ஸ்டான்லி வீதி, வைத்தியசாலை வீதி பின்னர் மணிக்கூட்டுக் கோபுர வீதி என எம்மில் பலர் யாழ்ப்பானத்தில் வலம் வந்தவர்கள். இன்று அங்குபோய் பார்த்தால் பல சிங்களக் கடைகள் புதிதாக முளைவிட்டுள்ளன.

யாப்பாணத்தில் உள்ள வின்சர் தியேட்டர். இதில் சென்று படம் பார்க்காதவர்கள் யாழில் இருந்திருக்க மாட்டார்கள் என்று தான் சொல்லவேன்டும். "நிறம் மாறாத பூக்கள்" 1979 ம் ஆண்டு வின்சர் தியேட்டரில் நான் கடைசியாகப் பார்த்த ஞாபகம். இந்தத் தியேட்டர் தற்போது சதோசாவாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த பல் பொருள் அங்காடியில் அரிசி பருப்பின் விலைகள் கூட சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளதை அவதானித்தீர்களா தமிழர்களே?


99% வீதம் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் சிங்களத்தில் ஏன் அரிசி பருப்பின் விலைகளை எழுதவேண்டும்? அதுவும் முதலாவதாக சிங்களத்தில் எழுதி பின்னர் சிறியதாக தமிழில் எழுதியுள்ளனர். அதுமட்டுமா, சில சிங்களத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். யாழ்ப்பாணத்தில் பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய தியேட்டர்களில் வின்சர் தியேட்டர், றீகல் தியேட்டர் மற்றும் மனோகரா தியேட்டர் என்பன சில. இதில் மனோகரா தியேட்டர் குறித்து ஒரு சுவாரசியமான நகைச்சுவை உண்டு.

"அன்பேவா" என்ற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் வெளியான போது அது மனோகராவில் திரையிடப்பட்டது. அப்போது போஸ்டர் அடித்தவர்கள “அன்பேவா” அதன் கீள் மனோகரா என்று அடித்திருக்கிறார்கள். (அது திரையிடும் அரங்கைக் குறிப்பதாக). விடயம் தெரியாத சிலர் அப்படத்தை "அன்பேவா மனோகரா" என்று வாசித்துவிட்டு திரைப்படத்திற்குச் சென்றுள்ளனர், ஆனால் அப்படத்தில் நடித்த எ.ஜி.ஆர், மனோகரா என்ற பெயரில் நடிக்கவில்லையே எனப் படம் முடிந்ததும் கேள்வி எழுப்பினாராம் ஒரு ஆள் !

இதுபோன்று சுவாரசியமான பல விடயங்களுடன் தனக்கே உரித்தான தனித்தன்மையுடன் விளங்கிய யாழ்ப்பாணம் தற்போது சிங்களப் பிடியில் சிக்கித்தவிக்கிறது. இந்தச் சிங்கள மயமாக்கல் அனைத்தையும் யாழ் மக்கள் உணர்கிறார்களா? இல்லை கண்டும் காணாமல் உள்ளார்களா? அல்லது இதை நாம் எப்படித் தடுப்பது, என்ற அச்சத்தில் உள்ளார்களா? என்பதே தற்போது எம் மனத்தில் எழும் கேள்வியாகும். புலம் பெயர் யாழ் தமிழர்கள் விட்டுச் சென்ற யாழ்ப்பாணத்தை இனி நாம் திரும்பிச் சென்றால் காணமுடியுமா?

எமது மொழியை இரண்டாம்தர மொழியாக்கி, தமிழனை ஒரு நாதியற்றவனாக மாற்றி எமது கலாச்சாரத்தை சீரழித்து ஒரு இனத்தை கரையான் அரிப்பதுபோல அழித்துவரும் பேரினவாத சிங்களத்தின் கைகளில் இருந்து நாம் எப்போது விடுதலை அடையப்போகிறோம் ? ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. இதைவைத்தே அவர்கள் இனம் காணப்படுகிறார்கள். அவ்வாறே எமது இனத்திற்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது அதனை நாம் இழந்தால் எமது அடையாளத்தைத் தொலைத்தவர்கள் ஆகிவிடுவோம்.

இதனால் தான் எம் தேசிய தலைவர் போராட்டத்தை ஒரு பாதையாகத் தேர்ந்தெடுத்திருந்தார். இப் போராட்டம் மே 18 முதல் தற்காலிகமாக மௌனிக்கப்பட்டுள்ளது. பல சூழ்ச்சிகளாலும் ஏகாதிபத்தியத்தின் உதவியுடனும் மற்றும் பல காட்டிக் கொடுப்புகளுக்கு மத்தியில் எமது போராட்டம் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஒரு வெளிநாடு வந்து உதவ இருப்பதாக புலிகளின் தலமையை நம்பவைத்துள்ளனர் சிலர். தெற்கிலே தாக்குதல்களை நடத்தவேண்டாம் நிச்சயம் ஒரு நாடு தலையிடும் அதுவரை பொறுத்திருக்கச் சொல்லியே நயவஞ்சகமாகச் செயல்பட்டுள்ளனர் சிலர். அவர்கள் யார் என்பது உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும்.

அப் புல்லுருவிகள் முதலில் களையப்படவேன்டும்.

இவர்களை இனம் காணுவதன் மூலமே எமது வருங்காலப் போராட்டம் வெற்றிப்பாதையில் செல்ல நாம் வித்திடலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக