வெள்ளி, 18 செப்டம்பர், 2009

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-110: இடைக்கால நிர்வாக சபையை நோக்கி...



திலீபன்
திலீபன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது தீட்சித் வந்திருந்து, அவரின் ஐந்து அம்சக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவர் பிரபாகரனை 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு "திலீபனின் உயிர் பிரிந்த பிறகு 15 நிமிடம் கழித்து' சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தார். கெüரவம் பார்க்காமல் அவர் நேராக வந்திருந்தாலோ, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ வாக்குறுதி அளித்திருந்தால் நிலைமையே மாறி இருக்கும். திலீபன் உயிர் போன பிறகு ஐந்து அம்சக் கோரிக்கைகளை ஏற்பதாகவும், அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தபோதிலும், விடுதலைப் புலிகளின் மனதிலிருந்து அமைதிப்படையின் மீதிருந்த மரியாதையும் நம்பிக்கையும் அகன்றுவிட்டிருந்தது; மக்களுக்கும்தான். தீட்சித்தின் பிடிவாதம் மாறாத வடுவை அவர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது. திலீபன் உயிரிழப்பைத் தாங்கமுடியாத மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்கியது. இரண்டு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு தண்டவாளங்களில் ஏற்பட்டிருந்த தடையே காரணமானது. யாழ்ப்பகுதி முழுவதும் திலீபனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சாலை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தன. அவர்களின் மனதில் தாங்க முடியாத சோகம். அரசுகளின் மீது வெறுப்பு. ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் துக்கம் நேர்ந்தால் வீட்டில் வாழை மரம், தென்னங் குருத்துத் தோரணம் கட்டும் பழக்கமுண்டு. மக்கள் சந்துக்குச் சந்து இந்த வாழை மரங்களை, தங்கள் வீட்டில் நடந்த துக்கம் போன்று கட்டியிருந்தார்கள். இறுதி நாள் அஞ்சலிக் கூட்டத்தில் மட்டும் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர். "திலீபன் மரணமே தியாகத்தில் தோய்ந்த மரணமாகும். வாழும்போது மட்டுமல்ல; சாவுக்குப் பின்னரும் அவருடைய தியாகம் தொடர்ந்தது. தான் இறந்தால், மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்குத் தனது உடலை வழங்க வேண்டும்' என்று சொல்லியிருந்தார். அதன்படி அவரது உடல் அடங்கிய பெட்டி யாழ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. "வாழ்விலும் சாவிலும் தியாக வரலாறு படைத்தான் திலீபன். மில்லர் புரிந்தது மறத்தியாகம் என்றால் திலீபன் புரிந்தது அறத்தியாகம்' என்கிறார் பழ.நெடுமாறன் தனது "தமிழீழம் சிவக்கிறது' நூலில். இறுதி நாள் ஊர்வலத்தில் அவரும் கலந்துகொண்டு, அஞ்சலிக் கூட்டத்திலும் பேசினார். திலீபன் மரணத்தைத் தொடர்ந்து, இடைக்கால நிர்வாக சபை அமைப்பதில் வேகம் பிடித்தது. செப்டம்பர் 26-இல் பேசியதையொட்டி, அடுத்தப் பேச்சு செப்டம்பர் 28-இல் என்று முடிவெடுத்தபடி பிரபாகரன் உள்ளிட்டோர் பலாலி ராணுவ முகாமில் கூடியிருந்தனர். இந்தியத் தூதுவர் வருகை சிறிது நேரம் தடைப்பட்டது. நிர்வாக சபைத் தலைவர் பதவிக்கு மூன்று பெயர்கள் கொண்ட பட்டியலில் ஜெயவர்த்தனா ஒருவரைத் தேர்ந்தெடுப்பார். ஜெயவர்த்தனா யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்கிற விவரத்துடன் தீட்சித் வருகை எதிர்நோக்கப்பட்டது. தீட்சித் வந்தார். ஜெயவர்த்தனா, சி.வி.கே.சிவஞானத்தைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தார். பிரபாகரனுக்கு இந்த முடிவு உகந்ததாக இல்லை. என்.பத்மநாதனை அவர் முடிவு செய்திருந்தார். தீட்சித், ""பட்டியலில் உள்ளபடிதான் அவர் தேர்வு செய்திருக்கிறார்'' என்றார். ""இருக்கலாம்...எனது விருப்பம் நான் கொடுத்த வரிசைப்படி முதலாவது பெயராக பத்மநாதனில் ஆரம்பிக்கிறது. பத்மநாதன் முன்னாள் அரசு ஊழியர். தாசில்தார் ரேங்கில் பணிபுரிந்தவர். கிழக்குப் பகுதியில் அவர் பணிபுரிந்ததால், கிழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்று இருக்கும்'' என்றார். ""ஜெயவர்த்தனா வேறு மாதிரி சிந்தித்தார். "பத்மநாதன் மட்டக்களப்பு சிறை உடைப்பில் ஒரு குற்றவாளி. அதனால் அவர், அவரை விரும்பவில்லை.'' ""ஜெயவர்த்தனாவுக்கு நாங்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான். அவரது நியாயம் எங்களுக்கு ஏற்பில்லை'' என்று பிரபாகரன் தெரிவித்தார். பிரபாகரனை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று தீட்சித் பெரிதும் முயன்றார். வாக்குவாதங்கள் - இடையிடையே சிற்றுண்டி எல்லாம் குறுக்கிட்டும் மாலை 5 மணி வரை பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. முடிவில் பிரபாகரன் சம்மதித்தார் - என்று லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் இந்தச் சம்பவம் பற்றித் தனது நூலில் குறித்து வைத்திருக்க, மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்கின் நூலில் சிறிது மாற்றம் உள்ளது. "சி.வி.கே. சிவஞானம் பெயர், ஜெயவர்த்தனா, தீட்சித் விருப்பம் என்றும், சிவஞானம் தீட்சித்தின் நெருங்கிய சகா மற்றும் அவருக்கு உளவு சொல்கிறவர் தீட்சித்தின் நிதி வழங்கும் பட்டியலில் அவர் உள்ளவர் என்றும், அவரையே அந்தப் பதவியில் அமர்த்துவதில் உறுதியாக ஜெயவர்த்தனா இருந்தார்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விடுதலைப்புலிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசு தனது முடிவுக்கு எங்களைக் கட்டாயப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒப்பந்தத்தின் முன்னதாக பேசித் தீர்க்க வேண்டியவற்றை பின்னர் பேசுவதால் ஏற்படும் விளைவுகளில் இதுவும் ஒன்று. திலீபனின் உயிரிழப்பு விடுதலைப் புலிகளிடத்தும், யாழ் மக்களிடத்தும் மாறாத சோகத்தை ஏற்படுத்தியருந்த நிலையில், இவ்வியக்கம் அடுத்ததொரு சோகத்தையும் சந்திக்க நேர்ந்தது. கசப்பு மருந்தாக இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் தேர்வு இருந்தாலும், கெட்டதில் நல்லதைத் தேடுவது என்ற அடிப்படையில் விடுதலைப்புலிகள் நிலைப்பாடு இருந்தது. சென்னையில் இருந்த அவர்களது அலுவலகத்தை முற்றும் முழுதாகக் காலி செய்து கொண்டு யாழ்ப்பாணம் வரும் முடிவுடன் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 17 பேர் படகில் இந்தியாவிலிருந்து கிளம்பினர். அவர்களின் பயணம் இந்திய அமைதிப்படைத் தலைவர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும் தெரிவிக்கப்பட்டே நடந்தது. இந்நிலையில், சிங்களக் கடற்படை, குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் சென்ற படகைச் சுற்றி வளைத்தது. அவர்கள் ஆயுதம் கடத்துவதாகக் கூறி கைது செய்ததாகவும் அறிவித்தது. இந்த செய்தி, விடுதலைப் புலிகள் மத்தியிலும் யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியது!நாளை: புலேந்திரன், குமரப்பா தற்கொலை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக