சனி, 19 செப்டம்பர், 2009

தில்லியில் 29 - ல் உண்ணாவிரதம்:
விஜயகாந்த் அறிவிப்பு



சென்னை, செப். 18: ""தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து செப்டம்பர் 29-ம் தேதி தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த அறிவித்துள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை அரசின் அத்துமீறல் காரணமாக கடந்த 22 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் ராமேசுவரம் மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பிறகு தமிழக அரசு தலையிட்டதன் பேரில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். படகுகள், வலைகளை சேதப்படுத்தி, மீன்களை பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். செப்டம்பர் 16-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கிக் கட்டையால் தாக்கி கடத்தியுள்ளனர். ஒரு நாட்டின் எல்லையில் இருந்து மற்றொரு நாட்டின் எல்லைக்குள் மீனவர்கள் சென்றால் அவர்களை முறைப்படி கைது செய்து சம்பந்தப்பட்ட நாட்டுக்கு தெரிவிப்பது தான் உலகம் முழுவதும் கையாளப்படும் முறையாகும். சமீபத்தில் வழித் தவறிச் சென்ற தமிழக மீனவர்களை வங்கதேச அரசு கைது செய்து விடுதலை செய்துள்ளது. ஆனால் இலங்கை அரசு எத்தகைய நாகரித்தையும் கடைபிடிக்காத அரசு என்பதை உலகம் நன்கறியும். இலங்கை அரசுடன் 1974-ல் இந்திய அரசு செய்து கொண்ட கச்சத் தீவு ஒப்பந்தமே இத்தனை சிக்கல்களுக்கும் காரணம். இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு வரை இரண்டு நாடுகளின் மீனவர்களும் அமைதியாக மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஒப்பந்தம் போடும்போது சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தறிந்து செயல்படுவதே முறையாகும். ஆனால் தமிழக மீனவர்களைப் புறக்கணித்துவிட்டு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது ஜனநாயக விரோதச் செயலாகும். விடுதலைப் புலிகள் இயக்கத்தை முற்றிலும் அழித்து விட்டதாக இலங்கை அரசு பறைசாற்றுகிறது. ஆனாலும் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்துகிறது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை பறித்துவிட்டது. முதல்வர் கருணாநிதி அவ்வப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது, இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்று கண்துடைப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மெத்தனப் போக்கை மத்திய அரசு கையாண்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து எழும் அழுகுரல் தில்லியின் காதுகளில் விழுவதில்லை. தமிழக மீனவர்களின் அவலங்கள் தில்லியின் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே செப்டம்பர் 29-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தில்லியில் தேமுதிக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் தமிழக நலனில் அக்கறை கொண்டவர்களும், மீனவர்களும் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுகொண்டுள்ளார்.

கருத்துக்கள்

விடுதலைப் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை என்பது ஒரு போர்வையே தவிர சிங்கள அரசின் நோக்கம் தமிழர்களை ஒழிப்பதே. எனவே, விசயகாந்த்தின் போராட்டத்தில் பிறரும் பங்கேற்க வேண்டும். ஆனால் இவ்வாறு எத்தனையோ போராட்டங்கள் நடத்திய பின்பும்தான் இந்திய அரசின் உதவியால் ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்தது சிங்கள அரசு. எனவே, இதனால் பயன் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசின போக்கு தொடரத்தான் செய்யும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/19/2009 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக