தென்காசி, செப். 15: குற்றாலம் மலையில் பல்வேறு காரணங்களால் அரிய வகை மூலிகையினங்கள் அழிந்து வருகின்றன. தென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படும் குற்றாலத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது அருவிகளில் எந்த நேரத்தில் குளித்தாலும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்பதுதான். மாறாக, அருவிகளில் குளித்தவுடன், உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறும். மலைப் பகுதியில் கொட்டும் நீர், முன்னதாக பல்வேறு மூலிகைகள்மீது விழுகிறது. மேலும், பேரருவியில் கடந்த சிலஆண்டுகளுக்கு முன்பு வரை, அதிகாலையில் தினந்தோறும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குளிப்பதற்கு என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. குற்றாலத்தில் இயங்கி வந்த மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான வைத்தியசாலைகளிருந்து நோயாளிகள் பேரருவியில் குளிக்க வைக்கப்பட்டனர். குற்றாலத்தில், குறிப்பாக பழைய குற்றாலம் மலைப் பகுதியிலிருந்து ஐந்தருவி பகுதி வரையிலும் மலைப் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளும், தாவர வகைகளும், இயற்கையான மருந்து செடிகளும் உள்ளன. அகத்தி, அத்தி, அரணை, அமிர்தவல்லி, அரிச்சந்திர பூண்டு, அரிவாள்மனைப் பூண்டு, அழகுகண்ணி, ஆடாதொடை, ஆடுதின்னாப்பாளை, இடம்புரி, இண்டு, இலந்தை, இலவங்கபட்டை, இறங்கழுஞ்சி, எட்டி, உடம்புளி, கரிசலாங்கண்ணி, கருந்துளசி, கருநீலி, கருநொச்சி, கல்தாமரை, கல்துளசி, நன்னாரி, நரி வெங்காயம், நாகலிங்கம், நாகவல்லி, செம்பை, செந்நாவல், சிறு அகத்தி, சிந்திக்கொடி, குப்பைமேனி, கொடிவலி, சங்குபுஷ்பம், சதுரக்கள்ளி, சரக்கொன்றை, சாம்பிராணியிலை, கூதிர்ப்பச்சை, குழிதாமரை, மருதம், மரமஞ்சள், மருதோன்றி, மான்செவிக்கள்ளி, மூக்கிரட்டை, பொன்ஊமத்தை, நிலப்பனை, பெரியாநங்கை, பேய்துளசி என்பது உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக மலைப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளாலும், தினந்தோறும் நூற்றுக்கணக்கான கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதாலும், மரங்களை வெட்டுவதாலும், காலம் தவறிய மழையின் காரணமாகவும் மூலிகையினங்கள் அழிந்து வருகின்றன. ஒருமுறை தீ விபத்து ஏற்பட்டால் அந்த தீ சில சதுர கிலோ மீட்டர் தொலைவு வரையிலும் பரவுகிறது. இதை அணைப்பதற்கு குறைந்தபட்சம் ஒருநாள் முதல் இரண்டுநாள் வரை ஆகிறது. தீ விபத்தில் பாதிக்கப்படும் மூலிகையினங்கள் மீண்டும் வளருவதில்லை. இதுகுறித்து, குற்றாலத்தில் 50 ஆண்டுகளாக மனநல மருத்துவமனை நடத்திவரும் சித்த மருத்துவர் டாக்டர் அ.வீரமணி கூறியதாவது: குற்றாலம் மலைப் பகுதியில் முன்பிருந்த மூலிகையினங்களில் அரிய வகையினங்கள் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை தற்போது அழிந்துவிட்டன. ஒருகாலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்குவந்து மூலிகைச் செடிகளை பறித்துச் சென்றனர். ஆனால், தற்போது இந்தநிலை மாறிவிட்டது. பல்வேறு காரணங்களால் இங்கிருந்த மூலிகைகள் அழிந்துவிட்டன என்றார் அவர். எனவே, தமிழக அரசும், மத்திய அரசும் மூலிகைகளைப் பாதுகாக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. குற்றாலம் மலையில் எஞ்சியிருக்கும் மூலிகைகளை பாதுகாக்க வனத் துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By PR. Jayabal
9/16/2009 3:19:00 PM
By sambanthan
9/16/2009 2:46:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*