வெள்ளி, 18 செப்டம்பர், 2009

நிதியும், மனமும் இன்றி நலியும் இந்தியக் கல்வி



""இந்தியாவில் கல்விக்கும், சுகாதாரத்துக்கும் நிதியில்லை என்று சொல்வது ஆதாரமற்ற, வடிகட்டின முழுப் பொய்'' - அமார்த்திய சென். கடந்த பட்ஜெட்டில் கோடிக்கணக்கான அடித்தட்டுக் குழந்தைகளின் பள்ளிக் கல்விக்குக் கிடைத்தது என்ன? இதைப் பொறுத்தவரை 2009-ம் ஆண்டின் "ஆம் ஆத்மி' (சாதாரண மனிதன்) பட்ஜெட் பெரும் ஏமாற்றமே. "ஆம் ஆத்மி'க்குக் கல்வி தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுவிட்டதோ! உயர் கல்விக்கான பல திட்டங்களும், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், உயர் கல்வி பெறும் வயதுடைய குழந்தைகளில் 10 சதவீதம்தான் அதனைப் பெறுகின்றனர். ஆகவே, 90 சதவீதம் குழந்தைகளின் கல்வி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற உண்மையை மறந்துவிடக்கூடாது. இந்திய அரசின் பட்ஜெட் குறித்த குற்றப் பத்திரிகையல்ல இக் கட்டுரை. வெகுகாலமாக பெரும்பாலான குழந்தைகளுக்கு இழைக்கப்பட்டு வரும் கல்வித் துரோகம், குறிப்பாக அதன் நிதி பரிமாணம் குறித்தது. இந்திய அரசு சுதந்திரம் பெற்றதிலிருந்தே கல்விக்காகச் செய்திருக்கும் நிதி ஒதுக்கீட்டைப் பார்க்கும்போது, குழந்தைகளுக்கு எதிரான இக் கல்வித் துரோகம் தெரிகிறது. அறுபதுகளில் கோத்தாரி கமிஷன் கல்விக்கான ஒதுக்கீடு தேசிய வருமானத்தில் 6 சதவீதத்துக்கும் மேலாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியது அனைவரும் அறிந்ததே. தனது கணிப்புக்கு கமிஷன் குறிப்பிட்ட ஆதாரம், வளரும் நாடுகளில் தேசியப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப்போல் இரண்டு மடங்கு கல்விக்கு ஒதுக்க வேண்டுமென்பது. அன்று இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில்தான் வளர்ந்து கொண்டிருந்தது. ஆகவே 6 சதவீதம் கல்விக்குத் தேவை என்று கணிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் 9 சதவீத வளர்ச்சியை எட்டியதாகப் பறைசாற்றி இருக்கிறோம். இன்று உலகம் முழுவதும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் தத்தளிக்கும்போது, நம்நாடு 7 சதவீத மேல் வளர்ச்சி காணும் என்று பெருமைப்படுகிறோம். இந்நிலையில் கல்விக்கான ஒதுக்கீடு உயரத் தவறியதற்கு எந்த மன்னிப்பும் இல்லை. கோத்தாரி கமிஷனுக்குப் பின், 1968-ம் ஆண்டின் கல்விக்கொள்கை அறிவித்த இலக்கு, இதனையே மீண்டும் வலியுறுத்திய 1986 கல்விக்கொள்கை, 1992-ம் ஆண்டின் செயல்திட்டம் கல்விக்கு 6 சதவீத நிதி ஒதுக்கீடு செய்வதாக நாட்டின் பிரதமர்கள் தொடர்ந்து அளித்து வந்துள்ள வாக்குறுதிகள், 2004-ல் பதவி ஏற்ற மத்திய அரசின் பொதுச் செயல்திட்டம், அனைத்தும் காற்றில் பறந்துவிட்டன. நிதி ஒதுக்கீடு பெரும்பாலும் 4 சதவீதம், அதற்கும் குறைவாகத்தான் இதுவரை செய்யப்பட்டுள்ளது. அனைத்து வளர்ந்த நாடுகளும், பல வளர்ச்சியடையும் நாடுகளும் தங்கள் தேச வருமானத்தில் கல்விக்காக ஒதுக்கும் சதவீதத்துடன் ஒப்பிடும்போது இந்திய ஒதுக்கீடு மிகக்குறைவு. அத்துடன், தேவைகள் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில் பல ஆண்டுகால புறக்கணிப்புகள் குவிந்து கிடக்கும்போது, 40 ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட 6 சதவீதம் என்ற இலக்கு பொருள் இழந்துவிட்டது என்பதையும், இன்று அதன் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். கல்விக்கு எந்த அளவு தேசிய முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு மற்றொரு முக்கிய அளவுகோல் பட்ஜெட்டில் கல்விக்காகச் செய்யப்படும் ஒதுக்கீடு. மத்திய, மாநில பட்ஜெட்டுகள் அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், 1970 - 71-ல் மொத்த பட்ஜெட்டில் இது 14 சதவீதமாக இருந்தது. அப்போதிருந்து குறைந்து கொண்டு வந்து சமீபகாலமாக இது சுமார் 11 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் 1960-களில் மாநிலப் பட்ஜெட்டில் சுமார் 30 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. அது தேய்ந்து வந்து, தற்போது சுமார் 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. பல வளர்ந்த, வளரும் நாடுகளில் கல்விக்கான அரசு செலவினம் 20 சதவீதத்துக்கும் அதிகமாகவே இருக்கிறது. திட்ட ஒதுக்கீட்டை எடுத்துக்கொண்டால், முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் 7.9 சதவீதம் இருந்த கல்விக்கான ஒதுக்கீடு, குறைந்தும், மீண்டும் கொஞ்சம் உயர்ந்தும் வந்து இன்று 6 சதவீதத்தை எட்டியுள்ளது; ஆயினும் முதல் திட்டத்தில் செய்த ஒதுக்கீட்டைக் காட்டிலும் குறைவே. கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் சென்ற பின்னும், கல்வி உரிமை வாழ்வுரிமையின் பிரிக்கவியலா பகுதி என்று உச்ச நீதிமன்றம் அடித்துக்கூறி 16 ஆண்டுகள் கழிந்த பின்னும் இந்தியக் குழந்தைகளுக்குக் கிட்டாத உரிமை இது. இதற்கான சட்ட வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இச் சட்ட வரைவில் கல்வி உரிமையை உத்தரவாதப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதற்கான நிதித் தேவையை இந்தக் கட்டத்தில் கணிக்க இயலாது என்று அச் சட்ட வரைவு சொல்கிறது. இது உண்மையல்ல. நடுவண் அரசு நியமித்த பல வல்லுநர் குழுக்களும், மற்ற சில குழுக்களும் 6 - 14 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளிப்பதற்குத் தேவையான நிதி எவ்வளவு என்பதைக் கணக்கிட்டுக் காட்டியிருக்கின்றன. அரசின் அனுமானம் என்னவென்றால், அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்குச் (சர்வசிக்ஷா அபியானுக்கு) செய்யப்பட்டிருக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடும், மாநிலங்கள் பங்கான ஒதுக்கீடும் சேர்ந்தால் தேவையான நிதி கிடைத்துவிடும் என்பதாகத் தோன்றுகிறது. இந்த ஒதுக்கீடுகளெல்லாம் தேவைக்கு மிகவும் குறைந்தவையே. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் சர்வ சிக்ஷா அபியானுக்காகச் செய்யப்பட்டிருக்கும் நிதி ஒதுக்கீடு (மாநிலங்களின் பங்கையும் சேர்த்து) ரூ. 1,51,453 கோடி, அதாவது ஆண்டுக்கு ரூ. 30,000 கோடி. இது கல்வி உரிமைக்கான CABE அமைப்பு (Central Advisory Board on Education) நிறுவிய வல்லுநர் குழு கணித்த, ஆண்டுக்கு சுமார் ரூ. 73,000 கோடியில் பாதிக்கும் குறைவு. ஈடு செய்ய வேண்டிய பற்றாக்குறை எவ்வளவு என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதாவது, இத்தனை காலம் கழிந்த பின்னும் இந்தியக் குழந்தைகளுக்குக் கல்வி அடிப்படை உரிமை என்பது இன்னும் எட்டாக் கனவாகத்தான் தொடரப் போகிறது. கல்விக்கென்று ஒதுக்கப்படும் மொத்த நிதியைச் செலவழிப்பதில்தான் எத்தனை படிநிலைகள், பாகுபாடுகள், பாரபட்சங்கள், புறக்கணிப்புகள்! அரசு பள்ளிகளுக்குள்ளாகவேதான் இந்தப் பாகுபாடுகள். மத்திய அரசின் கீழ் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு சராசரி செலவினம் ரூ. 11,000. மாநிலங்களில் அரசு, உள்ளாட்சிப் பள்ளிகளில் சராசரி மாணவர் செலவு ரூ. 1,100 - ரூ. 1,500 தான். கேந்திரிய வித்யாலயாக்கள் தரமான பள்ளிகள் என்றும், மாநில அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்றும் கருதப்படுவதன் காரணம் புரிகிறதல்லவா! அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியும் பள்ளிகளின் பெரும் தேவைகளுக்காகச் செலவழிக்கப்படாமல் கிடக்கிறது. உள்ளாட்சிகளில் வசூலிக்கப்படும் கல்வி வரி அதன் பள்ளிகளுக்குச் செலவழிக்கப்படுவதில்லை. சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ. 117 கோடி தேங்கிக் கிடக்கிறது. மாநகராட்சிப் பள்ளிகளில் போதிய ஆசிரியர், துப்புரவுத் தொழிலாளர், பரிசோதனைக் கூடங்கள், நூல் நிலையங்கள் எவையும் இல்லை. பல பள்ளிகளுக்கு மூடுவிழா நடக்கிறது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவரில் பெரும்பகுதி தலித் - பழங்குடியினர். இந்த விளிம்பு நிலை மக்களுக்காகவென்று எஸ்ஸி / எஸ்டி சிறப்புக் கூறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் பல நூறு கோடிகள் இம் மக்களுக்குப் பயன்படாமல் கிடக்கின்றன. நாட்டின் கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி நிலை மிகவும் தாழ்ந்து கிடப்பது பல ஆய்வுகளில் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராமப்புறக் குழந்தைகளின் கல்வித்தரம் குறித்த அறிக்கை, என்ன கூறுகிறது தெரியுமா? 5-ம் வகுப்பு மாணவரில் 50 சதவீதம் 2-ம் வகுப்பு நிலை வாசிப்புத் திறனையும் எட்டுவதில்லை; 50 சதவீதம் எளிய கழித்தல் கணக்கு செய்ய இயலவில்லை என்று வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது. கோடிக்கணக்கான இக் குழந்தைகளுக்கு வாழ்வும், வளர்ச்சியும், மனித மாண்பும் அளிப்பதற்கு பெருமளவு நிதி ஆதாரங்கள் தேவை. இன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்துக்குக் குறையாது என்றும், 9 சதவீதத்தை எட்டி விடலாம் என்றும் சொல்லும்பொழுது ஒரு 3 சதவீதம் கூடுதலாகக் கல்விக்கு ஏன் ஒதுக்கக்கூடாது? இறுதியாக, இந்தியக் கல்வியின் கொடுமையான படி நிலைகள், தரமான கல்விபெற இயலாத மிகப் பெரும்பாலான குழந்தைகளின் தவிப்பு... இவற்றிற்கெல்லாம் காரணம் நிதிப் பற்றாக்குறைதானா அல்லது அந்தப் போர்வைக்குள் மறைந்துகிடக்கும் வேறு ராட்சத உண்மையா? இந்தியக் கல்வி அமைப்பைப் போன்ற இதயமற்ற, ஒதுக்கித் தள்ளும் கல்வி நம்மைப் போன்ற ஒரு சில நாடுகள் தவிர வேறெங்கும் இல்லை. இது அப்பட்டமான வர்க்கக்கல்வி.

கருத்துக்கள்

இந்திய அரசைப் பொறுத்தவரை கல்வி என்றால் இந்தித் திணிப்பு மட்டுமே என எண்ணி அதற்கு மட்டுமே கூடுதல் செலவு செய்கின்றது. கல்வியாளர் வசந்திதேவி குறிப்பிட்டது போல் கல்விக்கான ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். கல்வி வளர்ச்சியிலேயே நாட்டு வளம் இருக்கிறது என்பதை இந்திய அரசு புரிந்து செயல்படவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/18/2009 3:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக