unemployment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
unemployment லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

பணியில்லாக் கொடுமையை நீக்க முயன்று உயிரில்லாமல் ஆனவர்கள்!

கனவை ச் சுமந்து சென்ற 72 பேர் பிணமாக த் திரும்பிய பரிதாபம்

 தினமலர்

திருச்சி: ஆயிரம் கனவுகளுடன் வெளிநாடு சென்றவர்களில், ஆறு மாதத்தில், 72 பேர் சடலமாக விமானத்தில் திருச்சிக்கு திரும்பியுள்ளனர். விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், அன்றாடங் காய்ச்சிகளின் ஒரே கனவு வெளிநாட்டில் வேலை. சினிமாவில் ஒரே பாடலில் கதாநாயகன் கோடீஸ்வரனாகி விடுவதை போல அதில் அதீத நம்பிக்கை. மிச்ச, சொச்சம் இருக்கும் நிலம், வீடு, நகைகளை விற்று வெளிநாடுகளுக்கு விமானம் ஏறுகின்றனர். வானில் பறக்கும்போதே அவர்கள் கொஞ்சம் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். நாம் இதே விமானத்தில் பிணமாக திரும்புவோம் என்பதை. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கடந்த மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து, திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய பிணங்களின் எண்ணிக்கை, 72 என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொடரும் சோகம்: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுதா, அரபு நாட்டில் வீட்டு வேலைக்கு சென்றிருந்தார். சில நாளில், தன் கணவரை தொடர்பு கொண்டு, "என்னை பாலியல் தொந்தரவு செய்கின்றனர். உடனே நாடு திரும்ப ஏற்பாடு செய்யுங்கள்' என்று போனில் கதறினார். அதற்கடுத்து இரண்டு நாட்களில் அங்கிருந்து பேசிய டிரைவர் ஒருவர், சுதா இறந்துவிட்டதாக செல்வராஜுக்கு தெரிவித்துள்ளார். நான்கு மாத அலைச்சலுக்கு பிறகு, சுதாவின் உடல் திருச்சி விமான நிலையம் வழியாக அவரது சொந்த ஊருக்குச் சென்றது.

திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து, 24, கட்டுமானப் பணியின் போது இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையுடன் உடல் திருச்சி விமானநிலையம் வந்தது. துபாய் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர் சேகரின் உடல், கடந்த மாதம் 26ம் தேதி, திருச்சி விமானநிலையம் வழியாக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருச்சி வருவது ஏன்? திருச்சி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: நன்றாக படித்துவிட்டு குறிப்பாக வெல்டர், பிட்டர், இன்ஜினியர் போன்ற தொழிற்கல்வி படித்தவர்களுக்கு வெளிநாடுகளில் ஏராளமான நல்ல வேலைகள் உள்ளன. படிக்காதவர்களுக்குதான் சிக்கல். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு வழங்கப்படும் விசாவில் என்ன வேலை? என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அரபு போன்ற தெரியாத மொழியில் இருக்கும் விசாவை தகுந்த நபர்களிடம் கொடுத்து, வேலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இது தெரியாத குக்கிராமங்களை சேர்ந்த இளைஞர்களை ஏஜன்ட்கள் எளிதாக ஏமாற்றி விடுகின்றனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கட்டடத்தொழில் வாய்ப்பு அதிகமுள்ளது. உடலுழைப்பு அதிகமுள்ள இவ்வேலைகளை நகர்ப்புறத்தில் இருந்து வெளிநாடு கனவில் செல்லும் இளைஞர்கள் ஒருநாள் கூட செய்யமுடியாது. பெரிய நிறுவனத்தில் வேலை என்று ஆசைப்பட்டு செல்பவர்கள், பாலைவனத்தின் நடுவே நாடோடிகள் போல தன்னந்தனியாக ஒட்டகம் மேய்த்து பைத்தியம் பிடித்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தியாவில் சிறிய தவறுகள் என, மன்னிக்கப்படும் குற்றங்களுக்கு கூட, அரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் உள்ளன. அவர்களின் சட்டத்திட்டங்கள் தெரியாமல், தவறுகளை செய்து தண்டனை பெறுகின்றனர்.

உண்மையில், அரபு நாடுகளில் இறந்து போனவர்களை விட சிறையில் கொடுமை அனுபவிக்கும் இந்தியர்கள் அதிகம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்வர். தென்மாவட்டங்களை பொறுத்தவரை திருச்சி விமான நிலையம் தான் சவுகரியம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் திருச்சியில் இருந்து குறைந்தபட்சம், ஆறு மணி நேரத்துக்குள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுவிடலாம். இதனால் தான் வெளிநாடுகளுக்கு சம்பாதிக்கும் கனவோடு விமானத்தில் ஏறுபவர்கள், சென்ற வேகத்தில் சடலமாக திருச்சி விமான நிலையத்துக்கு திரும்பி இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 19 செப்டம்பர், 2009

3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்கள் தவிப்பு



பொ. அழகுராஜ்தேனி, செப். 18: தமிழகத்தில் ஓவிய ஆசிரியர் பட்டம் பெற்ற 3 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்படாததால் அவர்களுடைய எதிர்காலம்கேள்விக் குறியாகி உள்ளது. சென்னை எழும்பூர், கும்பகோணம் ஆகிய இரு இடங்களில் அரசு கவின் கலைக் கல்லூரிகள் (ஓவியக் கல்லூரி) செயல்பட்டு வருகின்றன. சென்னை கல்லூரி சென்னை பல்கலைக் கழகத்துடனும், கும்பகோணம் கல்லூரி திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் இரண்டும் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இவ்விரு கல்லூரிகளிலும் டி.எப்.ஏ. (Diplomo In Fine Arts) என்ற பட்டயப்படிப்பு 1988 வரை கற்பிக்கப்பட்டது. பின்னர் இப்படிப்பு பி.எப்.ஏ (Bachelor Of Fine Arts) என்ற பெயரில் பட்டப் படிப்பாக மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், பட்டயப் படிப்புக்கு இருந்த பாட திட்டம் மற்றும் 5 ஆண்டு காலமே பி.எப்.ஏவுக்கும் இருந்தது. இப்படிப்பில் சேருவதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பதே அடிப்படைக் கல்வித் தகுதியாக இருந்தது, 2003-க்குப் பின்பு அடிப்படைத் தகுதி பிளஸ் 2-வாக மாற்றப்பட்டு, படிப்பின் கால அளவும் 4 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. ஆனால் பாட திட்டத்தில் மாற்றமில்லை. பணி நியமனம்: பட்டயப் படிப்பு (டி.எப்.ஏ) முடித்தவர்கள், ஓவிய ஆசிரியர் சான்றிதழ் படிப்பை (டி.டி.சி) விட கூடுதல் கல்வித் தகுதியாக கருதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1989-ம் ஆண்டு முதல் அரசின் உத்தரவுப்படி ஓவிய ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டனர். இதேபோல் அஞ்சல் வழிக் கல்வி மூலமோ அல்லது ஏதாவது ஓர் ஓவிய ஆசிரியரிடம் சென்று மனித உருவம், பூக்கள், கணித வடிவங்கள், டிசைன் ஆகிய 4 மட்டும் வரையக் கற்றுக் கொண்டு, அரசு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் நடத்தும் மேல்நிலைத் தேர்வை எழுதி வெற்றி பெற்றோ, அதன் மூலம் 3 மாத கால ஓவிய ஆசிரியர் சான்றிதழ் படிப்பு (டி.டி.சி.) முடித்தவர்களும் பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். பணி நியமனம் இல்லை: ஆனால் ஓவிய ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டாலும் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். இதனால் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பி.எப்.ஏ பட்டம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்துள்ள 3 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக கவின் கலை பட்டதாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலர் பி.நவநீதகிருஷ்ணன் கூறியதாவது: சென்னை மற்றும் கும்பகோணம் கவின் கலைக் கல்லூரிகளில் ஆண்டுதோறும் சுமார் 225 பேர் பி.எப்.ஏ. படித்து முடித்து வெளியே வருகின்றனர். 1994 முதல் ஒருவர் கூட ஓவிய ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படவில்லை. திருச்சி மற்றும் சென்னை பல்கலைக்கழகம் இரண்டுமே ஓவியப் பட்டயப் படிப்பும் (டிஎப்.ஏ), பட்டதாரி (பி.எப்.ஏ) படிப்பும் ஒன்று தான் எனவும், வேலை வாய்ப்பு வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளன. அரசு உதவி பெறும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிஎப்.ஏ முடித்தவர்கள் ஓவிய ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஓவிய ஆசிரியர் பணிக்கு நேர்காணலுக்குச் செல்லும் போது, ""டி.எப்.ஏ என்ற பட்டயப் படிப்பை பி.எப்.ஏ என பெயர் மாற்றம் செய்த பின்பு, அரசாணையை திருத்தம் செய்து, ஓவிய ஆசிரியப் பணி வழங்க ஆணை எதுவம் வரவில்லை'' என்று கல்வித்துறை அலுவலர்கள் கூறுகின்றனர். இதனால் அரசு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு, ஓவிய ஆசிரியர் பட்டம் பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் நியமிக்க வேண்டும். இல்லையெனில் இப்பட்டம் பெற்றோர் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றார்.

கருத்துக்கள்

ஓவியம்,இசை,உடற்பயிற்சி,நூலகம் இவற்றுக்கென மாணவர்களுக்குக் கட்டாயம் நேரம் ஒதுக்கி அவற்றில் ஈடுபாடு கொள்ளச் செய்வது அவசியம். -அரிமா இளங்கண்ணன்(US)

By P.Balakrishnan
9/19/2009 2:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *