வெள்ளி, 10 ஜூலை, 2009

நிவாரணப் பணிகளை செஞ்சிலுவைச் சங்கம் குறைத்துக்கொள்ள
இலங்கை வலியுறுத்தல்



கொழும்பு, ஜூலை 9: விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்துவிட்டதையடுத்து, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது நிவாரணப் பணி நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. இத் தகவலை, ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசியப் பகுதி நடவடிக்கைகளுக்கான தலைவர் ஜேக்கியூஸ் டி மையோ வியாழக்கிழமை தெரிவித்தார். இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளுடன் நடந்து வந்த கடும் சண்டையில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக இலங்கை அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதால், செஞ்சிலுவைச் சங்கம் தனது நிவாரணப் பணி நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அளிப்பது மற்றும் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்துப் பேசுவது உள்ளிட்ட தனது நடவடிக்கைகளை செஞ்சிலுவைச் சங்கம் மறுஆய்வு செய்ய இருப்பதாக ஜேக்கியூஸ் கூறினார். முதல் நடவடிக்கையாக, இலங்கையின் கிழக்குப் பகுதியில் செஞ்சிலுவைச் சங்க அலுவலகங்களை மூடிவிட்டு, அங்கு பணியாற்றிய ஊழியர்களை விலக்கிக்கொள்ளப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும், மனிதநேயப் பிரச்னைகள் குறித்து இலங்கை அரசுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று அவர் கூறினார். நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் இலங்கை அரசுக்கும், செஞ்சிலுவைச் சங்கத்துக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின் போது அப்பாவி மக்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டதாக, செஞ்சிலுவைச் சங்கம் பீதியைக் கிளப்பியதாக இலங்கை அரசு ஏற்கெனவே குற்றஞ்சாட்டியது.
கருத்துக்கள்

விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் வெண் கொடி ஏந்தி வந்தபொழுது முன் வரிசையில் இருந்த செஞ்சிலுவைச் சங்கத்தினரைத் தள்ளி விட்டு முன்னேறி அமைதிப் பேச்சிற்காக வந்தவர்களைக் கொன்று குவித்த சிங்களப்படையினரைப்பற்றி எப்படி அவர்கள் அமைதி காக்க முடியும்? சிங்களக் கொடுமைகள் செஞ்சிலுவைத் தொண்டர்களால் வெளி வருவதைத் தடுக்கவும் துன்பத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்குப் பெயரளவிற்கு உதவி வழங்கி மீண்டும் புதைகுழிக்குள் அனுப்பும் சிங்களச் சதிகளை நிறைவேற்றவும் உதவி வருபவர்களை வெளியேற்றுகிறது சிங்கள அரசு. வழிகாட்டும் இந்தியா வெற்றிப் புன்னகை பூக்கிறது. தட்டிக்கேட்க வேண்டிய உலக நாடுகளோ அமைதி காக்கிறது. குரல் கொடுக்க வேண்டிய தமிழகமோ குடும்பக் குட்டையில் மூழ்கிக் கிடக்கிறது. என்று பிறக்குமோ விடிவுக்காலம்!


-- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2009 3:13:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக