வியாழன், 9 ஜூலை, 2009

சிறந்த தமிழ் நூல்கள்
உலக மொழிகளில் வேண்டும்:

"தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் வலியுறுத்தல்



நெய்வேலி, ஜூலை 8: உலக மொழிகளில் சிறந்து விளங்கும் நூல்களை தமிழ்மொழியில் மொழிபெயர்ப்பு செய்தால் மட்டும் போதாது, தமிழில் சிறந்து விளங்கும் நூல்களையும் நாம் உலகப் பார்வைபடும்படி மொழி பெயர்த்தால் தான் தமிழ்மொழியின் உச்சம் வெளிஉலகுக்குத் தெரியவரும் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன். நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் 5-ம் நாளான புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழையும் வழங்கினார். அவர் பேசியது: தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு போன்ற நகரங்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளைக் காட்டிலும், நெய்வேலி புத்தகக் கண்காட்சி "ஒரு திருவிழா' என்றால் மிகையாகாது. இதுபோன்ற மாணவ சமுதாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கட்டுரைப் போட்டிகளை நடத்தி அவர்களை கெüரவப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவுடன் தினமணியும் இணைந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்று பாரதி கூறியதற்கு இணங்க நல்ல பல தமிழ் நூல்கள் உலகில் உள்ள பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். உலகில் உள்ள மிகவும் பிரபலமான பல படைப்புகளும், சமய நூல்களும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை அல்ல. அது பைபிள் ஆனாலும், கீதையானாலும், திருக்குறளானாலும், குருகிரந்த சாகிப் ஆனாலும் அவையெல்லாம் அனைத்து வேற்று மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டதால்தான் உலகம் முழுவதும் படித்து பயன் அடைய முடிகிறது. சிலப்பதிகாரத்தைப் போல இரவா புகழ் பெற்ற காவியம், உலகில் உள்ள பிற மொழிகளில் மொழி பெயர்க்காததால்தான் அதன் சிறப்பு வெளி உலகுக்குத் தெரியாமல் போய்விட்டது. பதிப்பாளர்களுக்கு... சிறந்த பதிப்பாளர்களை கௌரவிப்பது இந்த புத்தகக் கண்காட்சியின் நோக்கங்களில் ஒன்று. எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் பாலமாக அமைந்து இலக்கியப் பணியாற்றும் பதிப்பாளர்கள் இதுபோன்று கௌரவிக்கப்படும்போதுதான் வியாபார நோக்கத்தை மட்டுமே முன் நிறுத்தாமல் சமூக பிரக்ஞையுடன் செயல்பட ஊக்கம் பெறுவார்கள். குழந்தைகளை கடைகளுக்கு அழைத்துச் செல்லும்போது அவர்கள் "லாலிபாப்' வேண்டும், இந்த "பிஸ்கெட்' வேண்டும், என்று கேட்பார்கள். குழந்தைகளை இதுபோன்ற புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துவரும்போது அவர்கள் இந்தப் புத்தகம் வேண்டும், அந்தப் புத்தகம் வேண்டும் என்று கேட்கத் துவங்குவார்கள். குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதைப் போல புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்லுங்கள். இத்தகைய பணியைச் செய்யத் தவறியதால்தான் இன்று பலர் தொலைக்காட்சிகளுக்கு அடிமையாகியுள்ளனர். இன்று திரைப்படங்கள் செய்ய முடியாததை, முதுபெரும் எழுத்தாளர்களாகிய ஜெயகாந்தன், கல்கி ஆகியோர் செய்து காட்டியுள்ளனர். எழுத்துக்கு அந்த அளவுக்கு வலிமை உண்டு என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். குழந்தைகளுக்கு தாய்மொழியில் கற்பிக்க முயலுங்கள். உலகின் சிறந்த நூல்களை தமிழில் மொழிபெயர்த்து கற்பித்தால் குழந்தைகள் சிறந்த எதிர்காலம் பெறுவார்கள் என்றார் வைத்தியநாதன். எழுத்தாளர் ருத்ரா துளசிதாஸýம், புது தில்லியைச் சேர்ந்த புஸ்தக் மஹால் பதிப்பகத்தின் நிர்வாகி பெருமாளும் கெüரவிக்கப்பட்டனர். கமலா கந்தசாமி எழுதிய பொதுக் கட்டுரைகள் எனும் நூலை "தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன் வெளியிட முதல் பிரதியை என்.எல்.சி. சுரங்கத்துறை இயக்குநர் பி.சுரேந்திரமோகன் பெற்றுக் கொண்டார்.
கருத்துக்கள்

ஆசிரியரின் கருத்து மிகச் சரியே. உலக மொழிகளில் பெயரக்கப்படும் பொழுதுதான உயர்தமிழின் பெருமையை உலகம் புரிந்து கொள்ளும். செம்மொழிக்கான மத்திய நிறுவனம் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழ் வளர்ச்சித் துறையிலும் மொழி பெயர்ப்புப் பணி நடைபெறுகிறது. ஆனால், இத்தகைய மொழி பெயர்ப்பிற்கு நிறைவான ஊதியம் வழங்கப்பட வேண்டும்; நூல் வெளியீடுகளுக்கான ஒதுக்கீடும் மிகுதியாக இருக்க வேண்டும்; எல்லா நாட்டுப் பல்கலைக் கழகங்களுடனும் இணைந்து எல்லா நாட்டு மொழிகளிலும் உயர்தமிழ் இலக்கியங்கள் கிடைக்கும் நாளே தமிழுக்கு மட்டுமல்ல; உலகிற்கும் பொன்னாளாகும்.

By Ilakkuvanar Thiruvalluvan
7/9/2009 4:25:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக