வெள்ளி, 10 ஜூலை, 2009

'ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 40:
தீக்கிரையானது யாழ் நூலகம்!



தீக்கிரையான யாழ் நூலகம்



ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும். -ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில் உள்ள 700 நூல்கள் -சி.வன்னியசிங்கம் நூல் தொகுதி (100 நூல்கள்) -ஐசக் தம்பையா நூல் தொகுதி (சமயம், தத்துவம் பற்றிய நூல்கள் 250) -கதிரவேற்பிள்ளை நூல் தொகுதி (600 நூல்கள்) -ஆறுமுக நாவலர் நூல் தொகுதி -பைபிள் - முதன்முதலாக தமிழில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதி -ஏட்டுச்சுவடிகள் -பிரிட்டானியா கலைக்களஞ்சியம் -அமெரிக்க கலைக்களஞ்சியம் -கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம் -விஞ்ஞான தொழில்நுட்பக் கலைக்களஞ்சியம் -சமயங்கள் பற்றிய கலைக்களஞ்சியம் -மருத்துவக் கலைக்களஞ்சியம் -மாக்மில்லன் கலைக்களஞ்சியம் -குழந்தைகள் கலைக்களஞ்சியம் -அகராதிகள் (பல்வேறு வகை) -கைடுகள் (பல்வேறு வகை) -புவியியல் வரைபடங்கள், வரைபட நூல்கள் -தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமக்களின் நூல்கள் -ஆங்கில பிரெஞ்சு - ஜெர்மானிய - அரபி மொழியிலான நூல்கள் -பத்திரிகைகள். இவ்வளவுமாகச் சேர்ந்து 97 ஆயிரம் நூல்களைக் கொண்ட புகழ்பெற்ற யாழ்ப்பாண நூலகம் 1981 ஜூன் 1-ஆம் தேதி தீக்கிரையாக்கப்பட்டது. செய்தி கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வீதிக்கு வந்து கதறி அழுதனர். வரலாற்றில் மன்னிக்க முடியாத கருப்பு நாள் இது! யாழ்ப்பாணத்தில் நூலக இயக்கம் என்பது 1915 டிசம்பர் 18-ஆம் தேதி அன்றைய பருத்தித்துறை அரசியல்வாதி கே.பாலசிங்கம் கொழும்பில் நடைபெற்ற எழுத்தாளர் சந்திப்பில் நூலகங்கள் அமைய வேண்டிய அவசியம் குறித்து பேசினார். இந்தச் செய்தி வெளியான 9-வது நாளில், டிசம்பர் 27-ஆம் தேதி - யாழ்ப்பாணத்தின் வடக்கே உள்ள கீரிமலை, காங்கேசன் துறைக்கு அண்மையில் கடற்கரையொட்டிய ஊரில் உள்ள நகுலேஸ்வரர் கோயில் மண்டபத்தில் அமைந்த நூலகத்துக்கு நகுலேஸ்வர படிப்பகமும் நூல் நிலையமும் என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த நூல் நிலையத்தை நிறுவியவர் சைவப் பெரியார் சி.நமசிவாயம். இதனைத் திறந்து வைத்தவர்: ஆன்மிகத்துறவி சர்வானந்த அடிகள். (தகவல்: ஆவணஞானி இரா.கனகரத்தினம்) 1916-ஆம் ஆண்டு கீரிமலை நகுலேஸ்வர நூலகம் ஆரம்பிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் கன்னிமரா நூல் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தஞ்சை சரஸ்வதி மகால் (1918), ஆல்காட் ஆரம்பித்து வைத்த அடையாறு நூலகம் (1880), மறைமலை அடிகள் நூலகம் (1958), உ.வே.சாமிநாதய்யர் நூலகம் (1943) ஆகியவை உலகப் புகழ்பெற்றது போலவே, யாழ்ப்பாண நூலகமும் சரித்திரப் புகழ் கொண்டதாகும். யாழ்ப்பாண நூலகம் 1934-ஆம் ஆண்டில் 844 நூல்களுடன் (கலாநிதி ஐசக் தம்பையா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கட்டடத்தில் எடுத்த முடிவுப்படி) ஆஸ்பத்திரி வீதியில், வாடகை வீட்டில், தொடங்கப்பட்டு 1936-இல் நகரசபைக் கட்டடத்தில் நிறுவப்பட்டது. பெருகி வரும் வாசகர்களுக்கேற்ப அனைத்து வசதிகளையும் கொண்ட நூலகம் ஒன்றினை அமைக்க 1952-இல் யாழ் மேயர் சாம்.ஏ.சபாபதி தலைமையில் கூடிய மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டபடி லாட்டரி சீட்டு மூலம் நிதி திரட்டப்பட்டது. இந்த நூலகம் அமைப்பதில் அருட்தந்தை லாங் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். நூலகம் அமைப்பதற்கான திட்டங்களை நூலகத்தின் தந்தை என்று தமிழகத்தில் அறியப்பட்ட எஸ்.ஆர்.ரங்கநாதன் வகுத்தளிக்க, கட்டுமானப் பணிகளை சென்னையைச் சேர்ந்த கட்டடக்கலை வல்லுநர் கே.எஸ்.நரசிம்மன் ஏற்றார். திராவிடக் கலையம்சம் பொருந்திய இந்த நூலகம் 11.10.1959-இல் திறந்து வைக்கப்பட்டது. காவல்துறைத் தலைவர் மற்றும் பிரிகேடியர் வீரதுங்கா ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில், தமிழர்களின் பண்பாட்டின் வைப்பகமாக உருவான யாழ்ப்பாண நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தினர். 97 ஆயிரம் சிறப்பு வாய்ந்த நூல்கள் எரிந்து சாம்பலாயின. உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி என்று பெயரெடுத்த ஹிட்லர்கூட இங்கிலாந்து சென்று தாக்கும் தனது விமானப் படையினருக்கு, "ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தின்மீது குண்டு போடாதீர்கள்' என்று எச்சரித்ததாகத் தகவல்கள் உண்டு. அதே போன்று, "ஜெர்மனியில் ஹைடல்பர்க் பல்கலைக்கழகத்தைத் தாக்காதீர்கள்' என்று பிரிட்டன் விமானப் படைப்பிரிவுக்கும் அறிவுறுத்தப் பட்டதாகவும் சொல்வார்கள். ஆனால் ஜெயவர்த்தனாவின் சீடன் அமைச்சர் காமினி திசநாயக்காவின் மேற்பார்வையில், தமிழர்களின் பண்பாட்டுப் பெட்டகத்தைத் தகர்க்க வேண்டும் என்ற வெறியில், தீமூட்டி எரித்தார்கள். (இதற்காகவே, இரு தினங்கள் முன்பாக தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டம், மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் தேர்தல் வேலைகள் என்ற சாக்கில் காமினி உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் வந்து திட்டம் தீட்டியதாக தகவல்). நூலகத்துக்கு எதிரே சில அடி தூரத்தில்தான் யாழ் தலைமைக் காவல்நிலையம் உள்ளது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் பாதுகாப்புக்கு என கொழும்பிலிருந்து வந்திருந்த போலீஸôர் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டரங்கமும் நூலகத்துக்கு எதிரேதான் இருக்கிறது. இவ்வகையான பாதுகாப்பு உள்ள நூலகம் தீப்பிடித்து எரிந்தது என்றால் ஆச்சரியம்தான்! மே 31-ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் நூலகத்தில் நுழைந்த போலீஸ் உடைக் கொடியவர்கள் அங்கிருந்த காவலர்களைத் துரத்தி, நூலகத்தின் கதவை உடைத்து, நூல்களின் வரிசைக்கு பெட்ரோல் ஊற்றி கொளுத்தி அழிக்கின்றனர் என்று பலரும் சாட்சியம் அளித்தனர். லெண்டிங் செக்ஷன், ரெபரென்ஸ் செக்ஷன், குழந்தைகள் பிரிவு யாவும் எரிந்தன. சுவர்கள், ஜன்னல்கள் வெப்பத்தால் வெடித்து சிதறி, எங்கும் சாம்பல் குவியல். பேய் வீடாகி விட்டது. இச்சம்பவம் தமிழின அழிப்பு என்கிற சிங்கள இனவாதிகளின் மனவோட்டத்தை உலகினருக்கு சந்தேகமின்றி வெளிப்படுத்தி விட்டது. "இப்படியொரு மிருகச் செயலா?'- என்று கண்டனம் தெரிவித்த அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, நூலக எரிப்புச் செய்திகளை வெளியிடக்கூடாது என பல தடைகளை விதித்தார். ஆனாலும் செய்தி உலகம் முழுவதும் பரவிவிட்டது. இச்சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, இழப்பீடாக ரூபாய் ஒரு கோடியை அரசு வழங்க வேண்டும் என்று பணித்தது. ஆனால் ஜெயவர்த்தன அரசு ஒரு ரூபாய்கூட அளிக்கவில்லை. மாறாக, "இயற்கை இடர்கள் மூலம் இழப்பு ஏற்பட்டால் அளிக்கப்படும் நிதியிலிருந்து' சிறு தொகை மட்டும் அளிக்க உத்தரவிட்டார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சந்திரிகாவும் கடும் கண்டனம் தெரிவித்து, யாழ் மக்களின் மனங்களை வெல்ல "புத்தமும் செங்கல்லும்' என்று கோஷம் வைத்தார். அவர் சேகரித்த செங்கற்கள் எங்கே போயின என்பது தெரியவில்லை; அவர் சேகரித்த நூல்களோ பெரும்பாலும் சிங்கள நூல்கள் என்பது பின்னர் தெரிய வந்தது என்கிறார் யாழ்வாசி ஒருவர். யாழ் நூலகம் எரிப்பு குறித்து தமிழர்களின் குற்றச்சாட்டுக்கிடையே சிங்களரான அதிபர் பிரேமதாசா கூறியது என்ன? ""வடக்கு-கிழக்கில் தற்போதைய நிலைமையை எழுப்பியவர்கள் யார்? இதற்கு பிரதான காரணம் காமினியே. பத்து வருடங்களுக்கு முன் 1981-இல் நடந்த சம்பவங்கள் இந்நாட்டின் சமுதாயங்களுக்கிடையேயான உறவுகளில் இது ஒரு கறை படிந்த - துயரமான சம்பவமாகும். பாராளுமன்றத்தில் மாவட்ட அபிவிருத்தி சபை முறையை நாம் கொண்டு வந்தபோது - அதிகாரத்தைப் பரவலாக்க முயன்றபோது - காமினி எதிர்த்தார். தேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் காமினி நிறைய ஆட்களைக் கூட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் சென்றார். அங்கு வாக்குப் பெட்டிகளைச் சேகரித்து கள்ளவாக்குகளைப் போட்டார். இதனை நான் கூறவில்லை. பாராளுமன்றத்தில் காமினி பிரசன்னமாய் இருந்தபோது கூட்டணி செயலதிபர் ஆற்றிய உரை என்னிடம் உள்ளது. மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்களில் சதிநாச வேலைகள் இடம்பெற்ற பின்னர், ஒரு சர்வதேச நூல் நிலையமான யாழ் நிலையம் எரியூட்டப்பட்டது. வாக்குச் சீட்டுகளால் நீதியைப் பெறுவதற்கு எமது தலைவர்களால் முடியாவிடில் நாங்கள் நீதியைக் குண்டுகள் மூலம் பெறுவோம் என இளம் தமிழ்த் தீவிரவாதிகள் நினைத்தனர். இப்படித்தான் அவர்கள் தீவிரவாதச் செயல்களில் இறங்கினார்கள்'' என்பதாகும். (ஈழநாடு- (யாழ்பாணம்) 26.10.1991-இல் வெளிவந்தபடி). இதற்கு ஒருபடி மேலே சென்று ஐக்கிய முன்னணியின் புத்தளம் அமைப்பாளர் ஜனாப் எம்.எச்.எம்.நவாஸ் கூறுகையில், ""தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூல் நிலையமாக விளங்கிய யாழ் நூல் நிலையத்தை எரித்து சாம்பலாக்குவதற்கு முக்கிய சூத்ரதாரியாக இருந்த காமினி திசநாயக்காவுக்கு ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்'' என்றார். நாளை: தங்கதுரையின் சூளுரை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக