காலாப்பட்டு : காலாப்பட்டு கடற்கரையில் தென்படும் கடல் எலிகள் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. புதுச்சேரி காலாப்பட்டு கடற்கரையோரம் சமீபகாலமாக கடல் மண்ணுக்குள் இருந்து ஒரு வினோத உயிரினம் அடிக்கடி வெளிப்படுகிறது. யாராவது பார்த்துவிட்டால் நொடிப்பொழுதில் குழிதோண்டி மறைந்து கொள்கிறது. அடுத்தடுத்து கடல் அலைகள் கடற்கரை மணலில் மோதி ஆர்ப்பரிக்கும் சமயங்களில் கூட்டமாக வெளிப்படும் இந்த உயிரினம், சாதுர்யமாக இரையை பிடித்துக் கொண்டு மீண்டும் மண்ணுக்குள் மறைந்து கொள்கின்றன. நிலத்தில் உள்ள எலி போல் தோற்றமளிக்கும் இந்த வினோத கடல் உயிரினத்தின் விசித்திர குணம் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இது குறித்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை (உள்நாடு) துணை இயக்குனர் தனசேகரனிடம் கேட்டபோது கூறியதாவது: இந்த உயிரினம் நண்டு வகையை சேர்ந்த மச்ச நண்டு ஆகும். இதன் அறிவியல் பெயர் "எமிரிட்டா ஆசியாடிக்கா'. இது,"ஹிப்பாய்டியே' குடும்பத்தை சேர்ந்தது. உள்நாட்டு மீனவர்கள் இதை "கடல் எலி' என்று அழைக்கின்றனர். இவற்றுக்கு ஐந்து இணை கால்கள் இருந்தாலும், நண்டுகளைப் போல் வெட்டு கொடுக்குகள் இல்லை. இவை பக்கவாட்டில் நகராது. பின்னோக்கி நகரும் தன்மை கொண்டவை.நேரில் பார்த்தால் அப்படி தெரியாது. கடற்பறவைகள், இவற்றை கண்டால் குஷியாகி பிடித்து தின்று விடும். கடற்பறவைகளிடம் இருந்து தப்பிக்க, அலை அடிக்கும் அரிப்பள்ளம் அருகே மச்ச நண்டுகள் வலை தோண்டி மறைந்து கொண்டு வாழும். இந்த மச்ச நண்டுகளுக்கு இரண்டு நீண்ட உணர்வு தண்டுகள் முகப் பகுதியில் உள்ளன. கடல் நீர் ஏற்றத்தையும் வற்றலையும் தெரிந்து கொள்ள இந்த உணர்வு தண்டுகள் உதவுகின்றன. மற்ற நண்டுகளைப் போல் இதன் ஓடுகள் தோலுரிக்கும் தன்மை உடையது. இவற்றில் ஆண், பெண் உண்டு. சில ஆண் மச்ச நண்டுகள் ஓட்டின் அளவு 3.5 மி.மீட்டர் வளர்ந்த பிறகு, ஆண் தன்மை மறைந்து, பெண் இனமாக மாறும். அதே நேரத்தில், அது முழு வளர்ச்சி பெற்ற பெண்ணாகவும் இருக்காது. பின்பக்க பகுதியில் சினை முட்டைகள் காணப்படும். கடல் அலை கரையைத் தொட்டு திரும்பும் நேரத்தில், கடல் நீரிலுள்ள மிதவை உயிர் பொருள், மற்றும் சிறு உயிரிகளை உண்டு இவை உயிர் வாழும். மீனவர்கள் வறுமைக் காலங்களில் கடல் எலிகளை உண்பதோடு, தூண்டில்களில் மீன் பிடிக்க இரையாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு துணை இயக்குனர் தனசேகரன் கூறினார். |
வியாழன், 9 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக